உள்நாடு

மெளலவி இப்றாகீம் மறைவுக்கு கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவை அனுதாபம்..!

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக சன்மார்க்க பணி, சமூகப் பணி, தீர்க்க தரிசனமிக்க கல்விப் பணி ஆற்றி பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ள பல்கலைக்கழக முன்னாள் ஆசான், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஆரம்ப கால தலைவர், பல இஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் ஸ்தாபகர் மெளலவி ஏ.எல்.எம். இப்றாஹீம் அவர்களின் மரணச் செய்தி இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளதாக கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவை தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளது.
பேரவையின் தலைவர் பேராசிரியர் மெளலவி ஜலால்தீன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மெளலவி இப்றாஹீம் அவர்கள் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஆற்றிய பணிகள் மிகவும் தீர்க்க தரிசனமிக்க பணிகள் மட்டுமன்றி, இச் சமூகத்தின் எதிர்கால நலனையும் அடிப்படையாகக் கொண்டவை ஆகும். இலங்கையின் சுதந்திரத்தின் பின்னர், குறிப்பாக கடந்த அரை நூற்றாண்டுகாலம் முஸ்லிம் சமூகம் எதிர் கொண்ட பல்வேறு சவால்களுக்கு எதிர் நீச்சலாக மெளலவி இப்றாஹீம் அவர்களின் பல்வேறு திட்டங்கள் அமைந்துள்ளது என்பது அது பற்றிய ஆய்வை மேற்கொள்வோர் கண்டு கொள்ள முடியும்.
குறிப்பாக, பெண்களுக்கான கல்வி நவீன மயப்படுத்தியமை, ஆங்கிலம், நவீன தொழில் நுட்பம் உடையதாக அதை மாற்றியமை, முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் இலங்கை நாட்டின் பெரும்பான்மை சமூகத்தின் மொழியான சிங்கள மொழியில் பரீட்சயம் கொண்ட மார்க்க அறிஞர்களை உருவாக்கியமை இலங்கை முஸ்லிம்கள் நாட்டின் நலனை அடிப்படையாகக் கொண்டு செயல் படுவதற்கான திட்டங்கள், முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கிய பல்வேறு காலகட்ட இனக் கலவரங்களில் இருந்து மீள்வதற்கான வழிகள், முஸ்லிம்களின் பெருமதிப்பிற்குரிய உலமாக்களின் சபையான அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையை மிகவும் ஆளுமையும், ஆற்றலும் கொண்டதாக மாற்றுதல் என பல பரிமாணங்களை கொண்டதாக மெளலவி இப்றாஹீம் அவர்களின் திட்டங்கள் அமைந்திருந்தது.
தனது 82.வயதைக் கடந்த முதுமையில் இருந்த அவரை நலம் விசாரிக்க சென்ற வருடம் அவரின் இல்லத்துக்கு நான் சென்ற போது அவரின் நினைவு ஆற்றலில் சில குழப்பங்கள் இருப்பதை அவதானித்தேன்.
அந்த நிலைமையில் கூட அவரது கேள்விகளும், சிந்தனைகளும் சமூகத்தின் நிலைமை பற்றிய கவலைகள் கொண்டதாகவே இருந்ததை அப்போது என்னால் அவதானிக்க முடிந்தது.
தனது பல்கலைக்கழக ஆசிரியப் பணியில் பல ஆற்றலும், அறிவும் கொண்ட புத்திஜீவிகளின் உருவாக்கத்தில் மெளலவி இப்றாஹீம் அவர்களின் பங்களிப்பு என்றும் நினைவு கூறப்படவேண்டியவையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *