உள்நாடு

“ஜனாதிபதியின் பலஸ்தீன சிறுவர் நிதியத்தை ஊக்கப்படுத்த முஸ்லிம் சமூக தலைவர்கள் முன்வராமை வருத்தமளிக்கிறது..”      -கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் “ஜனாதிபதியின் பலஸ்தீன சிறுவர் நிதியத்திற்காக” சேகரிக்கப்பட்ட பணம் அண்மையில் உத்தியோகபூர்வமாக பலஸ்தீன மக்களுக்கு வழங்கப்பட்டது. இலங்கை முஸ்லிம்கள் என்ற வகையில் இந்த நிதியத்திற்கு வித்திட்ட ஜனாதிபதி அவர்களுக்கும், நிதி வழங்கிய மனிதாபிமானிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என ஜனாதிபதி ஆணைக்குழு முன்னாள் உறுப்பினரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொருளாளருமான, கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும், ஜனாதிபதி ரணில் அவர்கள் பாலஸ்தீனம் தொடர்பில் ஒற்றை நிலைப்பாட்டை கொண்டிராமல் இரட்டைக் கொள்கையை கடைப்பிடிப்பதாக சிலர் அரசியல் ஆதாயங்களுக்காக பிழையான, நியாயமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், அவை அனைத்திற்கும் பதில் அளிக்கும் வகையில் ஜனாதிபதி இந்த நிதியை காஸா சிறுவர்களுக்கு வழங்கியுள்ளார். ஆனாலும் முஸ்லிம் சமூகத்தில் உள்ள சில மத, அரசியல் மற்றும் சிவில் அமைப்புகளின் தலைவர்கள் இந்த நிதியத்தை முன்வந்து தொடங்காமல் கள்ள மௌனம் காத்ததன் மூலம் பலஸ்தீன சிறார்களிடம் அவர்களுக்கு இருந்த கருணை மற்றும் பாசாங்குத்தனமான போக்குகள் சில அரபுத் தலைவர்களைப் போலவே இருந்ததை மெய்ப்பித்துள்ளது.

இலங்கையில் உள்ள சில மார்க்க, அரசியல் மற்றும் சிவில் அமைப்புகளின் தலைவர்கள் வெளிநாடுகளில் சமீபத்தில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களுக்கு முஸ்லிம் பள்ளிவாசல்கள் மூலம் முஸ்லிம் சமூகத்திடம் இருந்து நிதி சேகரிக்கும் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், பாலஸ்தீன மக்களுக்காக ஜனாதிபதியால் நிறுவப்பட்ட நிதியத்திற்காக முஸ்லிம் சமூகத்திடம் இருந்து பள்ளிவாசல்கள் மூலம் நிதி சேகரிக்க முயற்சிக்க முஸ்லிம் தலைமைகள் தயக்கம் காட்டியதன் மூலம் இவர்களின் இரட்டை நிலைப்பாட்டை அறிந்துகொள்ள முடிந்தது. இவர்களின் இந்த செயற்பாடு வருத்தமளிக்கிறது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி என்பவர் ஒவ்வொரு சிங்கள, தமிழ், முஸ்லிம், சமூகத்தினதும் பக்கச்சார்பற்ற பாரபட்சமற்ற ஜனாதிபதி என்பதே அதன் அர்த்தம். உலக புவிசார் அரசியல் பின்னணியின் அடிப்படையில் ஜனாதிபதி எடுக்கும் முடிவுகள் அணிசேரா கொள்கையை மீறாமல் சமநிலைப்படுத்தப்பட வேண்டும்.  இலங்கை அபிவிருத்தியடைந்து வரும் நாடாக இருப்பதால், அது சுற்றியுள்ள உலக நாடுகளுடன் நியாயமான கொள்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

எனவே, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள வளைகுடா அரபு ஷேக்குகளின் போலித்தனமான போக்கை முஸ்லிம் சமூகத்தில் உள்ள மத, அரசியல், சிவில் அமைப்புகளின் தலைவர்கள் கண்டிக்க வேண்டும். ஆனால் மத, அரசியல் மற்றும் சிவில் அமைப்புகளின் தலைவர்கள் மத்திய கிழக்கின் வளைகுடா அரபு ஷேக்குகளை கோபப்படுத்த விரும்பாததால் அவர்களுக்கு எதிராக வாய் திறக்காமல் நரிபோல தந்திரமாக உள்ளனர்.

பாலஸ்தீனக் குழந்தைகளுக்காக ஜனாதிபதியால் நிறுவப்பட்ட நிதியத்திற்காக முஸ்லிம் சமூகம் அதிகளவான பணத்தைச் சேகரித்து அந்தக் குழந்தைகளின் நலனுக்காக்க அனுப்ப வேண்டும்- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *