விளையாட்டு

கமிந்து மெண்டிஸின் சகலதுறை அசத்தலால் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை தனதாக்கியது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கமிந்து மெண்டிஸின் சகலதுறை அசத்தலின் உதவியுடன் இலங்கை அணி 192 ஓட்டங்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்ததுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2:0 என கைப்பற்றி அசத்தியது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி இலகு வெற்றி பெற்று தொடரில் 1:0 என முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் 2ஆவதும் இறுதியுமான போட்டி கடந்த 30 ஆம் திகதி சட்டோகிரேம் மைதானத்தில் ஆரம்பித்தது. இப் போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்திருந்தது.

இதற்கமைய முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு 6 வீரர்கள் அரைச்சதம் கடந்து பங்களிப்புச் செய்திருக்க 531 ஓட்டங்களைப் பெற்று கொண்டது இலங்கை அணி. துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் (93), கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் (92), திமுத் கருணாரத்ன (86), தனஞ்சய டி சில்வா (70), தினேஷ் சந்திமால் (59) மற்றும் நிஷான் மதுஷ்க (57) ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் சகீப் அல் ஹசன் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சில் சிக்கி 178 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரரான ஸாகிர் ஹசன் 54 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். பந்துவீச்சில் அசித்த பெர்ணான்டோ 4 விக்கெட்டுக்களையும் விஷ்வ , லஹிரு மற்றும் ப்ரபாத் ஜெயசூரிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றினர்.

பின்னர் 353 ஓட்டங்கள் என்ற முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் தமது 2ஆம் இன்னிங்ஸை ஆரம்பித்தது இலங்கை அணி. முதல் இன்னிங்ஸில் நிலைத்து நின்று ஓட்டங்கள் சேர்த்த இலங்கையின் முன்னிலை வீரர்கள் இந்த இன்னிங்ஸில் நிலைத்து நிற்கத் தவறி பெவிலியன் திரும்பினர். இருப்பினும் அனுபவமிக்க வீரரான அஞ்சலோ மெத்யூஸ் மாத்திரம் நிலைத்திருந்து அரைச்சதம் கடந்து 56 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க இலங்கை அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 157ஓட்டங்களைப் பெற்றிருக்க ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. பந்துவீச்சில் ஹசன் மொஹமட் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் இலங்கை அணியால் நிர்ணயிக்கப்பட்ட 511 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கி 4ஆம் நாளில் தமது 2ஆம் இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி இத் தொடரில் சற்று சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும் இலங்கை பந்துவீச்சாளர்கள் தங்கள் கைவரிசையினை காட்டி சீறான இடைவெளியில் விக்கெட்டுக்களை கைப்பற்றினர். மெஹ்மினுல் ஹக் மாத்திரம் அரைச்சதம் அடித்து நம்பிக்கை கொடுக்க 4ஆம் நாளில் முடிவில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 268 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

பின்னர் 5ஆவதும் இறுதியுமான நாளான இன்று தமது இன்னிங்ஸை தொடர்ந்த பங்களாதேஷ் அணி இன்றைய தினம் 18 ஓவர்கள் மேலதீகமாக துடுப்பெடுத்தாடி தமது சகல விக்கெட்டுக்களையும் இழந்து 318 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இதனால் இலங்கை அணி 192 ஓட்டங்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்ததுடன் 2 போட்டிகள் கொண்ட தொடரை 2:0 என கைப்பற்றியது. துடுப்பாட்டத்தில் மெஹ்தி ஹசன் மிராஸ் ஆட்டமிழக்காமல் 81 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். பந்துவீச்சில் லஹிரு குமார 4 மற்றும் கமிந்து மெண்டிஸ் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். இப் போட்டியின் நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் இத் தொடர் முழுதும் பிரகாசித்த கமிந்து மெண்டிஸ் தெரிவானார்.


(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *