“கடந்தகாலத்தில் நிலவிய எமது பிரிவினைகளை மறந்து நாட்டை சீராக்குகின்ற வரலாற்று வேலைத்திட்டத்துடன் இணையுமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்..” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் – பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய
(அம்பாறை மாவட்ட பெண்கள் மாநாடு – தேசிய மக்கள் சக்தி – 2024.03.31)
இந்த மாநாட்டினை வெற்றியீட்டச் செய்விப்பதற்காக பல மாதங்களாக பாடுபட்டோம். இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியாகும். பெண்கள் அரசியல்ரீதியாக பலப்படுத்தப்பட்டு, அரசியல்ரீதியாக ஒழுங்கமைந்து, இவ்விதமாக ஒன்றுசேர்ந்த தருணத்தை உலகில் வேறு எங்குமே கண்டதில்லை. இது எமக்கு ஒரு புதிய அனுபவமாகும். நாட்டை வித்தியாசமான ஓர் இடத்திற்கு உயர்த்திவைக்கக்கூடிய பெண் தலைமைகளை உருவாக்குவதையே நாங்கள் இங்கு செய்திருக்கிறோம். அரசியல் பற்றிக் கனவில்கூட சிந்தித்திராத எமது பெண்கள் அரசியல் தலைமைத்துவத்தை ஏற்கத் தயார் என்பதை வெளிக்காட்டி இருக்கிறார்கள். பெண் தலைமைகள் புதிதாக உருவாகின்றன. அது இந்த நாட்டுக்கு தீர்மானகரமானதாகும். நாங்கள் நிச்சயமாக இதனை மாற்றியமைத்திடுவோம். பெண்களின் பலத்தை நாட்டுக்கு மாத்திரமல்ல முழு உலகிற்குமே வெளிக்காட்ட எம்மால் இயலுமானதாகி உள்ளது. பெண்களாகிய எங்களுக்கு வாய்ப்பு வழங்கினால் அதிலிருந்து உச்ச பயனைப்பெற்று உச்ச அளவிலான அழுத்தத்தைக்கொடுக்க இயலுமான பலம் எம்மிடம் பொதிந்துள்ளது.
இந்தியாவில் அருந்ததி ரோய் என ஒரு பிரசித்திபெற்ற எழுத்தாளர் இருக்கிறார். அவர் ஓர் இடத்தில் எழுதி இருக்கிறார் “புதிய உலகத்தை உருவாக்க முடிவது மாத்திரமல்ல, புதிய உலகமொன்று உருவாகி வருகின்றது, அமைதியாக அதற்குச் செவிசாய்த்தால் அந்த புதிய உலகம் மூச்செடுப்பதை எம்மால் உணர முடியும்” என்று. அந்த புதிய உலகத்தை நீங்கள் உருவாக்கி வருகிறீர்கள். இனிமேலும் அது எமக்கு ஒரு கனவு அல்ல. புதிய உலகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. நாங்கள் புதியதோர் உலகத்தை அமைத்து வருகிறோம். மிகவும் நியாயமான, அனைவருக்கும் அபிமானத்துடன் வாழக்கூடிய, சமத்துவத்திற்கு மதிப்பளிக்கின்ற அன்புநிறைந்த புதிய உலகமொன்றை நீங்கள் தற்போது நிர்மாணித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதற்காக இந்த வருடத்தில் எமக்கு ஒரு தீர்மானகரமான பணி இருக்கிறது. இந்த தேர்தலை வென்றெடுப்பது மாத்திரமல்ல: இந்த தேர்தலில் பெண்களாகிய நாங்கள் ஒன்று சேர்ந்து எப்படியாவது வெற்றிபெறவும் வேண்டும். எமது தோழர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைப்போம். எமது தோழர் அநுரவை ஜனாதிபதியாக்கிடுவோம். அத்துடன் எமது வேலை நின்றுவிட மாட்டாது. நாங்கள் நாட்டை சீராக்கிட வேண்டும். நாங்கள் ஏற்படுத்த எதிர்பார்த்துள்ள அந்த சமூக மாற்றத்தை பாதுகாத்துக்கொள்ளவும் நாங்கள் முன்வரவேண்டும். இதன் பாரதூரத்தன்மையை இதன் ஆழத்தை நாங்கள் நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். இது மற்றுமொரு மாற்றம் பற்றிய கதையல்ல. இது மற்றுமொரு தேர்தல் பற்றியதுமல்ல. இதுவரை அதிகாரத்திற்கு வந்த ஒவ்வோரு கட்சியும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக வாக்குறுதி அளித்தது. யு.என்.பி. பீதிநிலை தீர்ந்து சந்திரிக்கா குமாரதுங்கவை நியமிக்க முதலில் வீதியில் இறங்கியவர்கள் பெண்களே. சந்திரிக்கா அம்மையாரும் மாற்றத்திற்கான வாக்குறுதி அளித்தார். 2015 இல் நல்லாட்சி அரசாங்கமும் மாற்றத்திற்கான வாக்குறுதியை அளித்தது. தேசிய மக்கள் சக்தி இந்த மாற்றத்தை ஏற்படுத்துவது எவரதும் வாக்குறுதியின் பேரில் அல்ல. இந்த மாற்றத்தை செய்பவர்கள் நாங்களே. இதுவரை காலமும் நாங்கள் வாக்குகளை அளித்துவிட்டு ஒருபுறம் பார்த்துக்கொண்டிருக்கவேண்டி நேர்ந்தது. எமக்காக செய்கின்ற அபிவிருத்திகளை பார்த்துக்கொண்டிருக்கவேண்டி நேர்ந்தது. இந்த முடிவுகளை எடுக்கின்ற இடங்களில் நாங்கள் இல்லை. நாங்கள் கூறுபவற்றுக்கு செவிசாய்ப்பதுமில்லை: எமது கருத்துக்களை கேட்பதுமில்லை. இந்த கொள்கைகள் எமக்காகவல்ல என்பதை அறிந்திருந்தும் செய்வதற்கு ஒன்றுமே இருக்கவில்லை. எமது பணத்தை மோசடி செய்கிறார்கள் என்பதை அறிந்திருந்தும் ஊழல் புரிகிறார்கள் என அறிந்திருந்தும், எமது பிள்ளைகள் பசியில் இருக்கிறார்கள் என்பதை அறிந்திருந்தும் நாங்கள் பெருமூச்சு விட்டுக்கொண்டு இருந்தோமேயொழிய அவற்றை மாற்றியமைப்பதற்கான அதிகாரம் எமக்கு இருக்கவில்லை.
ஆனால் இந்த செயற்பாங்கினூடாக நாங்கள் அதிகாரத்திற்கு வருவதே இடம்பெறுகின்றது. நாங்கள் அனைவருமே பாராளுமன்றம் செல்வோம் என்பதல்ல. இலங்கை வரலாற்றில் முதல்த்தடவையாக அதிக எண்ணிக்கை கொண்ட பெண் உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப முடியுமென நாங்கள் நம்புகிறோம். ஊரில், வேலைத்தலத்தில், பாடசாலையில், வைத்தியசாலையில் நாங்கள் இருக்கிறோம். நாங்கள் இருக்கின்ற எல்லா இடங்களிலும் இந்த நாட்டை மாற்றியமைக்கின்ற செயற்பாங்கில் நாங்கள் முனைப்பாக பங்கேற்கிறோம். அதனால் யாருமே இதனை வேறு எவராவது செய்யும்வரை காத்திருக்கப் போவதில்லை. இந்த தடவை இந்த மாற்றத்தைச் செய்யப்போவது நாங்களே. அந்த செயற்பாங்கின் தீர்வுக்கட்டமான ஒரு பணியென்றவகையில் எமக்கு செவிசாய்க்கின்ற ஒருவரை நாங்கள் ஜனாதிபதியாக்க வேண்டும். இந்த வருடத்தில் இது நடைபெறும். அதன் பின்னர் எமக்கு செவிசாய்க்கின்ற பெண்கள், எம்மீது கூருணர்வுகொண்ட பெண்கள், எமது கதைகளுக்கு பெறுமதிசேர்க்கின்ற எமது குரலுக்கு செவிசாய்க்கின்ற அரசாங்கமொன்றை அமைத்திடவும் வேண்டும். அவையிரண்டுமே எமது முதன்மைப் பணிகள்.
அதற்காக நாங்கள் எதிர்வரும் ஆறு மாதங்களில் அயராது உழைக்கவேண்டும். ஏற்கெனவே நாங்கள் பல அர்ப்பணிப்புகளைச் செய்துதான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம். இந்த உழைப்பினை நாங்கள் ஒருபொதுமே விரயமாக்கிட முடியாது. நாமனைவரும் ஒன்றுசேர்ந்து பொதுவான நோக்கத்துடன் இந்த நாட்டை சீராக்குகின்ற வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறோம். எம்மிடமிருந்து எப்போதுமே எதிர்பார்த்தது அர்ப்பணிப்பு, தாங்கிக்கொள்ளல். ஒருபோதுமே பங்கேற்பினை கோரவில்லை. எமது சக்தியிலிருந்து பயன்பெறவில்லை. எமது வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்து எம்மை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு பயணிக்கின்ற அரசாங்கங்கள்தான் இதுவரை நியமிக்கப்பட்டன. இந்த தருணத்தில் எம்மைத் தவிர்த்துச்செல்ல முடியாது. எம்மை பங்கேற்கச் செய்விக்காமல் பயணிக்க இயலாதென்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்துவருகிறார்கள். அதனால்த்தான் ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பெண்களை விளித்துப்பேசுவதற்கான நிகழ்ச்சிகளைத் தொடங்கி இருக்கிறார்கள். அது நல்லது. ஆனால் தேசிய மக்கள் சக்தியில் ஒரு வித்தியாசம் நிலவுகின்றதென்பது எமக்குத் தெரியும்.
நாங்கள் நியமிக்கின்ற ஓர் அரசாங்கத்தை வேலைத்திட்டத்தைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு இருக்கின்றது. இதுவரை காலமும் இந்த நாட்டில் சிறப்புரிமைகளைப்பெற்று இந்த நாட்டை ஆட்சிசெய்வது தமது பிறப்புரிமையெனக் கருதிக்கொண்டிருந்த ஆட்சியாளர்கள் பதற்றமடைந்துள்ளார்கள். அதனால்த்தான் அவர்கள் கட்சிகள் என்றவகையில் பிளவுபட்டிருந்தாலும் தேசிய மக்கள் சக்தியை தோற்கடிக்க வேண்டுமென்ற இடத்தில் அவர்கள் அனைவருமே ஒருங்கிணைந்துள்ளார்கள். இது அவர்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற இந்த சமூக மாற்றத்தைக் கண்டு அஞ்சுவதை பறைசாற்றுகிறது. இங்கு இடம்பெறுவது வெறுமனே அரசாங்க மாற்றமல்ல என்பதை அவர்கள் அறிவார்கள். அதைவிட பாரதூரமான சமூக மாற்றத்திற்காகவே தயாராகி வருகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். மக்கள் நேயமுள்ள கொள்கைகளை அமுலாக்கக்கூடிய மக்கள் நேயமுள்ள அரசாங்கத்தை நியமிக்கவும் இந்த முறையியலுக்கூடாக நாட்டை முன்னேறவும்தான் நாங்கள் தயாராகி வருகிறோம் என்பது தெரியும். இந்த முறையியலின்கீழ விசேட சிறப்புரிகள் கிடைக்கமாட்டாது. நாட்டின் சட்டம் ஆட்சியாளர்களுக்கும் பொதுவானதே. தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் நாட்டின் சட்டம் அனைவருக்கும் ஏற்புடையது. இவ்வளவு காலமும் நாட்டில் சட்டத்தை சரிவர அமுலாக்காமையே நாட்டில் நிலவியது. சட்டத்தை அமுலாக்க அரசியல்வாதிகள் இடமளிக்கவில்லை. திசைகாட்டி அரசாங்கமொன்றின்கீழ் சட்டம் சுயாதீனமானதாக அமையும். சட்டத்தை அமுலாக்கி மக்கள் பணத்தை களவாடிய, மக்களை பாதிப்பிற்கு உள்ளாக்கிய, அத்தகைய கொள்கைகளை வகுத்தவர்களுக்கு முறையான தண்டனை கிடைக்கும். பழிவாங்கும் கலாசாரம் எம்மிடம் இல்லை. குறிப்பாக பெண்களாகிய எங்களுக்குத் தெரியும் பழிவாங்கலினால் ஏற்படுகின்ற சேதத்தை நாங்கள் அனுபவித்திருக்கிறோம். திசைகாட்டி தொடர்பில் பொய்யான பயத்தை உருவாக்க மேற்கொள்கின்ற முயற்சியை தோற்கடிக்க வேண்டியது உங்கள் அனைவரதும் பொறுப்பாகும். இங்கு வர விரும்புகின்றவர்களை நாங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும். வரலாற்றில் நிலவிய எமது பிரிவினைகளை மறந்து அனைவரையும் விளித்துப்பேசி நாட்டை சீராக்குகின்ற இந்த வரலாற்று வேலைத்திட்டத்துடன் ஒன்றுசேருமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். அம்பாறை மாவட்டம் பல்வகை கலாசாரம் நிலவுகின்ற மாவட்டமாகும். நீங்கள் பிரிவினைகளின் பாதகவிளைவுகளை நன்றாக அனுபவித்துள்ளீர்கள். அனைவரையும் பிரிவினைகளுக்குப் பதிலாக ஒன்றுசேர்க்கின்ற, பகைமைக்குப் பதிலாக அன்பு செலுத்துகின்ற சமூகமொன்றை உருவாக்க உங்களின் தலைமைத்துவம் எமக்குத்தேவை. அதற்காக தயாராகுங்கள், பலமடையுங்கள், ஒழுங்கமையுங்கள். அறிவால் பலமடையுங்கள். உங்களின் பங்களிப்பு எமக்கு கிடைப்பது பாரிய நம்பிக்கையைப்போன்றே பாரிய பக்கபலமுமாகும். அந்த நம்பிக்கையைக் கொடுத்தமைக்காகவும் அன்பை எமக்கு வழங்கியமைக்காகவும் உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.