முஸ்லிம் இளைஞர்களிடம் சிரம் தாழ்த்தி மன்னிப்புக் கோரிய பொலிஸார்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு இப்போது விடுதலையாகியிருக்கும் ஹொரவப்பொத்தானை பகுதி முஸ்லிம் இளைஞர்கள் மூவரிடம் ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஐவர் நேற்று உயர்நீதிமன்றத்தில் சிங்கள கலாசாரப்படி சிரந்தாழ்த்தி தலைவணங்கி மன்னிப்பைக் கோரினர்.
சட்டவிரோதமான முறையில் தம்மை கைது செய்து சுமார் 06 மாத காலம் தடுத்து வைத்ததன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக தெரிவித்து செய்னுலாப்தீன் இர்பான், செய்னுலாப்தீன் கலீபதுல்லா மற்றும் நூருல் சக்கரியா ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமைகள் மனு நேற்று உயர்நீதிமன்ற நீதியரசர்கள் எஸ்.துரைராஜா, குமுதினி விக்கிரமசிங்க, அச்சல வெங்கப்புலி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது மேற்படி மன்னிப்பு கோரப்பட்டது.
மேற்படி மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய அப்போதைய பொறுப்பதிகாரி ரொஷான் சஞ்சீவ, கான்ஸ்டபிள் மார் பிரேமரத்ன, சிசிர, ஜயதிலக்க மற்றும் கெப்பித்திகொல்லேவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் மன்றில் ஆஜராகி மன்னிப்பை கோரினர்.
மேற்படி மனுதாரர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஹொரவப்பொத்தானை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் சார்பில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன் மன்றில் தெரிவித்ததுடன், அதில் அவர்கள் முற்றாக விடுதலை செய்யப்பட்டிருந்ததாகவும் அவர்களிடம் இனிமேல் மேலதிக விசாரணைகள் எதுவும் இடம்பெறாதென்றும் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னர் கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய தாம் கைது செய்யப்பட்டு 06 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டதாகவும் தமது வங்கிக் கணக்குகளில் நூறு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் இருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்ததாகவும் மனுதாரர்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தனர். எனினும், பின்னர் தம்மை குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றம் விடுதலை செய்ததால் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் தமது மனுவில் கோரியிருந்தனர்.