விளையாட்டு

மீண்டும் பாகிஸ்தான் அணியின் தலைவராக பாபர் அஸாம் நியமனம்

பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணிகளின் புதிய தலைவரான நட்சத்திர துடுப்பாட்ட வீரரான பாபர் அஸாம் மீண்டும் அந்நாட்டு கிரிக்கெட் சபையால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒருநாள் உலகக்கிண்ணத் தொடரில் பாபர் அஸாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி எதிர்பார்த்த இலக்கினை அடைந்திருக்கவில்லை. இதனால் பாபர் அஸாம் உடனடியாக மூவகைப் போட்டிகளுக்குமான தலைமைப் பதவியிலிருந்து விலகியிருந்தார். இதனால் பாகிஸ்தான் ரி20 அணியின் தலைவரான தொடர்ந்து இரு முறை பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்ட லாஹுர் பலென்டர்ஸ் அணியின் தலைவராக செயற்பட்ட வேகப்பந்து வீச்சாளரான ஷஹீன் ஷா அப்ரீடி நியமிக்கப்பட்டார்.

டெஸ்ட் அணியின் தலைவரான இடது கை துடுப்பாட்ட வீரரான ஷான் மசூத் நியமிக்கப்பட்டார். ஆனால் இதுவரையில் பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரில் பங்கேற்காமையால் ஒருநாள் அணித்தலைவரை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நியமித்திருக்கவில்லை. இந்நிலையில் ஷஹீன் ஷா அப்ரீடி தலைமையில் பாகிஸ்தான் அணி கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் நியுஸிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் பங்கேற்றது. இதில் 4:1 என தொடரை மிக மோசமாக பாகிஸ்தான் இழந்தது.

இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் அந்நாட்டு ரசிகர்களும் ஷஹீன் அப்ரீடியின் தலைமைத்துவத்தில் அதிர்ப்தி அடைந்தனர். பின்னர் பாகிஸ்தானில் இடம்பெற்ற நடப்பாண்டின் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் ஷஹீன் அப்ரீடியின் லாஹுர் கவென்டர்ஸ் அணி 10 போட்டிகளில் 9இல் தோற்று ஒரேயொரு போட்டியில் மாத்திரம் வெற்றி பெற்றிருக்க ஷஹீன் அப்ரீடி பாகிஸ்தான் அணித்தலைவருக்கு பொறுத்தமில்லாதவர் என்ற முடிவை பாகிஸதான் கிரிக்கெட் சபை தீர்மானித்தது. இதனால் ஷஹீன் அப்ரீடியிடம் இருந்து ரி20 தலைமைப் பதவியை பெற்று அதனை மீண்டும் பாபர் அஸாமிடம் வழங்க முடிவு செய்தது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை.

இதனால் பாபர் அஸாமுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கும் மிடையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையில் பாபர் அஸஸாம் இணக்கம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பாகிஸ்தான் அணியின் புதிய ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணிகளின் தலைவரான மீண்டும் பாபர் அஸாம் நியமிக்கப்பட்ட உத்தியோகபூர்மான அறிவித்தலை வெளியிட்டது. அதற்கமைய அடுத்த மாதம் இடம்பெறவுள்ள நியூஸிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட தொடருக்கு மீண்டும் பாபர் அஸாம் தலைமை தாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இதுவரையில் பாகிஸ்தான் அணியின் ரி20 தலைவரான பாபர் அஸாம் 71 போட்டிகளில் செயற்பட்டிருக்க அதில் 42 போட்டிகளில் வெற்றியும் , 23 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளார். மேலும் இவரது வெற்றி வீதமாக 59.1 பதிவாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. அத்துடன் தொடர்ந்தும் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவரான ஷான் மசூத் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *