துடுப்பாட்ட வீரர்களின் அசத்தலால் வலுவான நிலையில் இலங்கை
பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் 6 வீரர்கள் அரைச்சதம் கடந்து அசத்த முதல் இன்னிங்ஸில் 531 ஓட்டங்களைப் பெற்றுக் வலுவான நிலையை அடைந்தது இலங்கை அணி.
இலங்கை மற்றும்பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி இலகு வெற்றியைப் பதிவு செய்து 1:0 என தொடரில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் நேற்றைய தினம் ச்செட்டகிரமில் இரண்டாவதும் இறுதியுமான போட்டி ஆரம்பித்திருந்தது. இப்போட்டியில் பங்களாதேஷ் அணியின் சார்பில் சகலதுறை வீரரான சகீப் அல் ஹசன் இணைக்கப்பட்டிருந்தார். இப் போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்திருந்தது.
இதற்கமைய களம் நுழைந்த இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர்களான திமுத் கருணாரத்ன மற்றும் நிஷான் மதுஷ்க ஜோடி அசத்தல் ஆரம்பத்தை கொடுத்தது. இந்த ஜோடி தமக்கிடையில் 96 ஓட்டங்களைப் பெற்றிருக்க நிஷான் மதுஷ்க 57 ஓட்டங்களுடன் துரதிஷ்டவசமாக ரன்அவுட் ஆகினார். பின்னர் இணைந்த திமுத் மற்றும் குசல் மென்டிஸ் ஜோடி 114 ஓட்டங்களைப் பெற்றனர். இந்நிலையில் திமுத் 86 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அடுத்துவந்த மெத்யூஸ் 23 ஓட்டங்களுடன் வெளியேற களத்திலிருந்த குசல் மெண்டிஸ் 93 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினார். பின்னர் இணைந்த அணித்தலைவரான தனஞ்சய டி சில்வா மற்றும் சந்திமால் ஜோடி ஓட்டங்களை விரைவாக சேர்த்தது. இவ்விருவரும் அரைச்சதம் கடந்து தமக்கிடையில் 86 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இவர்களில் சந்திமால் 59 ஓட்டங்களுடனும், தனஞ்சய டி சில்வா 70 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கடந்த முதல் போட்டியின் இரு இன்னிங்ஸிலும் சதம் விளாசிய கமிந்து மெண்டிஸ் தனித்து நின்று ஓட்டங்களைச் சேர்த்த இலங்கை அணி 500 ஓட்டங்களைக் கடந்தது.
தொடர்ந்தும் அரைச்சதம் கடந்து களத்திலிருந்த கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 92ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க இலங்கை அணி 159 ஓவர்களுக்கு முகம் கொடுத்து 531ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. கமிந்து மெண்டிஸ் 8 ஓட்டங்களால் தொடரான 3ஆவது சதத்தை தவறவிட்டிருந்தார். பந்துவீச்சில் சகீப் அல் ஹசன் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி ஆரம்பத்தில் அதிரடி காட்டியது. ஆரம்ப வீரர்களான ஹசன் ஜோய் மற்றம் சாகிர் ஹசன் ஜோடி தமக்கிடையில் 47 ஓட்டங்களைப் பெற்றிருக்க ஹசன் ஜோய் லஹிரு குமாரவின் வேகத்தில் 21 ஓட்டங்களுடன் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார். பின்னர் 2ஆம் நாள் ஆட்டம் நிறைவு பெற பங்களாதேஷ் அணி 15 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 55 ஓட்டங்னளைப் பெற்றிருந்தது. சாகிர் ஹசன் 28 ஓட்டங்களுடன் களத்திலிருந்தார். நாளை போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)