கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி தாரை வார்த்தது என்பதற்கான புதிய உண்மைகள் வெளிவந்துள்ளன. – பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு
கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி தாரை வார்த்தது என்பதற்கான புதிய உண்மைகள் வெளிவந்துள்ளன என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்த்தது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு இருந்தார்.
இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்த பதிலில் கூறியதாவது, கச்சத்தீவு தொடர்பாக நாட்டின் முதல் பிரதமர் நேரு 1961 மே 10ல் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். இந்த தீவு தொடர்பாக அவர், இந்த சிறிய தீவுக்கு நான் எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை. அதற்கான நமது உரிமையை விட்டுக் கொடுக்க தயங்க மாட்டேன். இந்த விவகாரம் நீண்ட நாட்கள் நிலுவையில் இருப்பதையும் மீண்டும் பார்லிமென்டில் எழுப்பப்படுவதை விரும்பவில்லை என்றார்.
இந்த பதிலானது அப்போதைய அட்டர்னி ஜெனரல் எம்சி செடல்வாட் 1960 ல் கச்சத்தீவை இந்தியா உரிமை கோர வலுவான ஆதாரங்கள் இருந்தன எனக் கூறியதற்கு எதிராக இருந்தது. கிழக்கு இந்திய கம்பெனி, ராமநாதபுரம் ராஜாவுக்கு அளித்த உரிமை பற்றியும் செடல்வாட் குறிப்பிட்டு இருந்தார். நாட்டில் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்ட பிறகும் ராமநாதபுரம் ராஜா கொழும்புவுக்கு எந்த வரியும் கட்டாமல் கச்சத்தீவை நிர்வகித்து வந்தார்.
1968 ல் கச்சத்தீவு தொடர்பாக இந்தியா, இலங்கை பிரதமர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தை தொடர்பாக பார்லிமென்டில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி, அரசை விமர்சித்தனர். அதற்கு அரசு அளித்த பதிலில், கச்சத்தீவை ஒப்படைப்பதற்கான ஆவணத்தில் கையெழுத்திடவில்லை என்றதுடன் அந்த பகுதியை சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்தது எனக்கூறியது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. 1969 ல் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பையும் மீறி, இலங்கையின் உரிமையை நிறைவேற்றும் வகையில் ஒப்பந்தம் போடுவதை நோக்கி இரு நாடுகளும் நகர்ந்தன.
கொழும்புவில் 1973ல் இரு நாட்டு வெளியுறவுத்துறை செயலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு அடுத்த ஆண்டு (1974) ல் கச்சத்தீவை தாரை வார்ப்பது குறித்த முடிவு, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியிடம், அப்போதைய வெளியுறவுத்துறை செயலர் கேவல் சிங் தெரிவித்தார். இது குறித்து கேவல் சிங் கூறுகையில், கச்சத்தீவு மீது ராமநாதபுரம் ராஜாவிற்கு அசல் உரிமை இருந்தது என்ற ஆவணங்களை காட்ட தமிழக அரசு, தவறிவிட்டது. 1925 முதல் இந்தியாவின் எந்த எதிர்ப்பும் இல்லாமல் இலங்கை கச்சத்தீவை நிர்வகித்து வந்தது எனக்கூறினார். இவ்வாறு அந்த தகவலில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது.
இதனை மேற்கோள் காட்டி ‛’எக்ஸ்” சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது, கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி தாரை வார்த்தது என்பது பற்றிய புதிய உண்மைகள் வெளிவந்துள்ளன. இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியதுடன், காங்கிரசை நாம் ஒரு போதும் நம்ப முடியாது என்பதை மக்கள் மனதில் மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்துவதை எண்ணியே கடந்த 75 ஆண்டுகளாக காங்கிரஸ் உழைத்துக் கொண்டு உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி அந்த பதிவில் கூறியுள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ‛’எக்ஸ்” சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது, தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலையின் கேள்விக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலமாக வெளிவந்த உண்மை. கச்சத்தீவு கைமாறியது 1976 ல். இதைப்பற்றிய முழு விவரம் 1974 ஜூன் மாதம் அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டது. இன்று வரை கச்சத்தீவு பற்றி உண்மைக்கு புறம்பாக பிரசாரம் செய்துவரும் திமுக இதற்கு பதிலளிக்க வேண்டும். கச்சத்தீவை காங்கிரஸ் உடன் சேர்ந்து தாரைவார்த்துவிட்டு, பிறரை கேள்வி கேட்கும் போக்கு மிகவும் தவறு. இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)