“மக்களினதும் ஆட்சியாளர்களினதும் எதிர்பார்ப்புகள் இணையானதாக அமைகின்ற ஆட்சியொன்று எமது நாட்டுக்குத் தேவை..” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க
(கனடாவில் டொரண்டோ இலங்கையர்களுடனான மக்கள் சந்திப்பு – 2024.03.23)
இங்கு குழுமியுள்ள நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு கடுகளவேனும் பங்கமேற்பட இடமளிக்க மாட்டோம் என வாக்குறுதி அளிக்கிறோம். எமது நாட்டு மக்களிடம் சாதகமான நோக்கங்களும் சாதகமான எதிர்பார்ப்புகளும் இருந்தன. எந்த அரசாங்கத்தை அமைத்துக்கொண்டாலும் எந்த ஆட்சியாளனை நியமித்துக்கொண்டாலும் பொதுமக்களிடம் சாதகமான நோக்கங்களும் சாதகமான எதிர்பார்ப்புகளுமே இருந்தன. எனினும் ஆட்சியாளனிடம் இருந்தது அதற்கு முரணான எதிர்பார்ப்புகளும் மாறுபட்ட நோக்கங்களுமே. அதனால் மக்களின் நோக்கங்களும் எதிர்பார்ப்பும் ஆட்சியாளின் எதிர்பார்ப்பும் நோக்கங்களும் இருவேறுபட்டவையாக விளங்கின. மக்களினதும் ஆட்சியாளனதும் எதிர்பார்ப்புகள் ஒன்றாக அமைகின்ற ஆட்சியொன்றை நாங்கள் இலங்கையில் முதல்த்தடவையாக அமைத்திடுவோம். அவ்வாறான ஆட்சியே எமக்குத் தேவை. உங்களிடம் இருக்கின்ற நோக்கங்கள்தான் எம்மிடமும் இருக்கின்றன. ஒருசில நோக்கங்கள் உங்களைப் பார்க்கிலும் முன்னேறற்மடைந்த நிலையில் எங்களிடம் இருக்கின்றனவென நாங்கள் நம்புகிறோம். எமது நாட்டின் தொலைதூரக் கிராமங்களில் துன்பங்களையும் வேதனைகளையும் எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு இதைவிட நல்ல வாழ்க்கையைப் பெற்றுக்கொடுக்கவும் அபகீர்த்திக்கு இலக்காகியுள்ள எமது இராச்சியத்திற்கு கீர்த்தியைக் கொண்டுவருகின்ற மற்றும் வங்குரோத்து நிலையை அடைந்துள்ள எமது இராச்சியத்திற்கு செல்வந்தநிலையைக் கொண்டுவருவதற்காகவும் நாங்கள் புதியதோர் அரசாங்கத்தை அமைத்திடுவோம்.
இந்த வருடத்தின் ஒக்டோபர் மாதமளவில் எமது நாட்டில் இருப்பது புதியதோர் அரசாங்கம் புதியதோர் ஆட்சியாகும். எமது எதிர்பார்ப்பு அந்த அரசாங்கத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாக மாற்றிக்கொள்வதாகும். இந்த பயணத்தில் இரண்டு பிரதான சவால்கள் நிலவுகின்றன. ஒன்று அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது: இரண்டாவது சீர்குலைந்துள்ள எமது நாட்டைக் கட்டியெழுப்புவது. அதனால் இரண்டு பிரதான பணிகள் எமது தோள்மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்த பணிகள் இரண்டும் ஒன்றாக இருப்பினும் ஒரே பயணத்தின் இரண்டு மைல்கற்களாகும். நாங்கள் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக அமைக்கின்ற பாதையில்தான் இந்த நாட்டைக் கட்டியெழுப்புகின்ற பாதையும் இருக்கின்றது. எமது நாட்டில் பெரும்பாலும் இடம்பெற்ற விடயம்தான் அதிகாரத்தைப் பெறுவதற்காக புரியக்கூடிய அனைத்துவிதமான கீழ்த்தரமான செயல்களையும் புரிவார்கள். புரியக்கூடிய எல்லாவிதமான அழிவுகளையும் புரிந்து அதிகாரத்தைப் பெற்ற ஒரு நாட்டை சீராக்கிவிட முடியாது. அதிகாரத்தைப் பெறுவதற்காக நல்லெண்ணத்துடன் புரிகின்ற பணிதான் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும் தோள்கொடுக்கும். அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இருக்கின்ற பாதைதான் நாட்டைக் கட்டியெழுப்பவும் இருக்கின்றது. அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அனைவரும் ஒன்றுசேர வேண்டும். நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும் அனைவருமே ஒன்றுசேரவேண்டும். அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மாத்திரமல்ல நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும் பங்களிப்பினை வழங்குகின்ற ஒரு அணியாக எம்முடன் இணைந்துகொள்ளுமாறே நாங்கள் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
மூன்று உரையாடல்கள் வந்திருக்கின்றன. முதலாவது உரையாடல் பாராளுமன்றத் தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதற்கானதாகும். தேர்தல் முறைமையை மாற்றியமைப்பது தொடர்பானதாகும். இரண்டாவது உரையாடல் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னராக பாராளுமன்ற தேர்தலை நடாத்துவதாகும். மூன்றாவது உரையாடல் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்துக்கட்டுதல் பற்றியதாகும். இலங்கையில் தேர்தலொன்று தொடர்பாக இத்தகைய நிச்சயமற்றதன்மை அல்லது ஐயப்பாடு இதற்கு முன்னர் தோன்றியிருக்கிறதா? அரசியலமைப்பிற்கு அமைவாக ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகின்றன. உதாரணமாக 2019 நவம்பர் 08 – டிசம்பர் 08 இற்கு இடையில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படவேண்டி இருந்தது. அது சம்பந்தமாக எவருக்குமே சந்தேகம் நிலவவில்லை. அதற்கு அவசியமான சுற்றுச்சூழலை உருவாக்கிட சரியாக உரிய நேரத்தில் ஏப்பிரல் 21 ஆந் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. தேர்தல் பற்றிய நிச்சயமற்ற தன்மை நிலவவில்லை. இலங்கையில் முதல்த்தடவையாக தேர்தல் பற்றிய ஐயப்பாடு தோன்றியுள்ளது. வேறு காரணத்தினால் அல்ல: எமது நாட்டின் ஊழல்மிக்க, அழிவுமிக்க, பிரபுக்கள் பொறியமைப்பிடமிருந்து பொதுமக்களின் கைகளுக்கு அதிகாரம் மாறுவதற்கான ஏதுவொன்று உருவாகியுள்ளது. அவர்கள் அதற்குப் பயப்படுகிறார்கள். ராஜபக்ஷ பாசறையிடமிருந்து ரணில் பாசறைக்கு அதிகாரம் கைமாறுவதாயின் ரணில் பாசறையில் இருந்து ராஜபக்ஷ பாசறைக்கு அதிகாரம் கைமாறுமாயின் அவர்கள் ஒருபோதுமே பயப்படமாட்டார்கள். இலங்கையை 76 வருடங்களாக ஆட்சிசெய்த ஊழல்மிக்க, அழிவுமிக்க, பிரபுக்கள் பொறியமைப்பிடமிருந்து பொதுமக்களின் கைகளுக்கு அதிகாரம் மாறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அதனால் பாராளுமன்றத் தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான பிரேரணையொன்று பாராளுமன்றத்திற்கு வந்துள்ளது. எனினும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இதனை அமுலாக்குவதற்கான வாய்ப்பு கிடையாது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைப்பதாக கூறுகிறார்கள். ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் பாராளுமன்றத் தேர்தலை நடாத்தினால் கழுவிச் செல்லப்படுமென பசில் ராஜபக்ஷ கூறுகிறார். 2004 இல் பாராளுமன்றத் தேர்தல் நடாத்தப்பட்டது. பாராளுமன்றத்திற்கு 06 வருடங்கள். 2005 இல் சனாதிபதி தேர்தல் நடாத்தப்பட்டது. சனாதிபதி பதவிக்கு 06 வருடங்கள். அப்படியானால் பாராளுமன்றத் தேர்தல் 2010 இலேயே வரவேண்டும். ஜனாதிபதி தேர்தல் 2011 இலேயே வரவேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு நான்கு வருடங்கள் நிறைவடைந்த பின்னர் தேர்தலுக்கு அழைப்புவிடுக்க அந்நேரத்தில் நிறைவேற்று ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்தது. அரசியலமைப்பின் உறுப்புரைகளைப் பயன்படுத்தி பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை அவர் எடுத்துக்கொண்டார். 2015 இல் பாராளுமன்றத்தைக் கலைத்திட முன்னர் மகிந்த ராஸபக்ஷவிற்கு மேலும் இரண்டு வருடங்கள் இருக்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். 2019 இல் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்பட்டது. பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் 2020 மார்ச் 02 ஆந் திகதியே கிடைத்தது. ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததும் உடனடியாக பாராளுமன்றத் தேர்தலைப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் இரண்டாந் திகதி இரவு பாராளுமன்றத்தைக் கலைத்தார். மூன்று தருணங்களில் பொதுத்தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேரத்தலை எடுத்துக்கொண்ட, அதற்காக செயலாற்றிய பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத் தேர்தலை முதலில் நடாத்தினால் நல்லதென தற்போது கூறுகிறார்.
ஜனாதிபதி தேர்தல் காரணமாக அவர் பாரிய சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார். ஒன்றில் அவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஒத்துழைப்பு வழங்குதல் வேண்டும் ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் அதன்பின்னர் மொட்டு கிடையாது. அப்படியில்லாவிட்டால் வேறொருவரைப் போடவேண்டும். வேறு ஒருவரைப் போட்டால் பாராளுமன்றத் தேர்தலின்போது எடுக்கின்ற வாக்குகளின் எண்ணிக்கையைக்கூட பெற்றுக்கொள்ள முடியாது. எனவே இருதலைக்கொல்லி எறும்பின் நிலை ஏற்படும். அதிலிருந்து தப்பித்துக்கொள்ள பொதுத்தேர்தலை முதலில் எடுக்க முனைகிறார்கள். அரசியலமைப்பின்படி பொதுத்தேர்தலை முன்கூட்டியே எடுப்பதற்கான தற்றுணிபு ரணில் விக்கிரமசிங்கவின் கையில் மாத்திரமே இருக்கின்றது. இன்று பாராளுமன்றத்தைக் கலைக்கவேண்டுமென ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்தால் கலைக்கமுடியும். இன்று கலைத்தால் நாளைமுதல் ரணிலின் அதிகாரம் சூன்யமாகும். அதனால் ரணில் இறுதித்தருணம்வரை இருக்கவேண்டுமாயின் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலுக்கு செல்வதற்குள்ள வாய்ப்பு குறைவானதாகும். தற்போதைய அரசியல் கட்டியெழுப்பப்பட்டுள்ள விதத்தின்படி செப்டெம்பர் 17 இற்கும் ஒக்டோபர் 17 இற்கும் இடையில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படும். பெரும்பாலும் செப்டெம்பர் 28 அல்லது ஒக்டோபர் 05 இல் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். அதனைத் தடுக்க எவ்விதத்திலும் இயலுமை கிடையாது. ரணில் விக்கிரமசிங்கவிற்கு செப்டெம்ப 28 வரை அல்லது ஒக்டோபர் 05 வரை இருக்க முடியும். அவர் ஜனாதிபதி தேர்தலை நடாத்த தீர்மானிக்காவிட்டால் அதற்கு முன்னராகவே போகமுடியும்.தேர்தலில் பாடமொன்றை புகட்டுவதற்காகவே இன்று எமது மக்கள் இந்த அழுத்தத்தை தாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
அடுத்ததாக நிமல்சிறிபால த சில்வா அண்மையில் பாராளுமன்றத்தில் கூறினார் “பொது எதிரி” பற்றி. ஏனைய கட்சிகளுக்கிடையில் நிலவுகின்ற வித்தியாசங்களை ஒருபுறம் வைத்துவிட்டு பொது எதிரியை எதிர்கொள்ளுமாறு. பொது எதிரி என்.பி.பி. அவர்களின் பொது நண்பனாக மாறாமல் பொது எதிரியாக மாறியமைக்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அவர்கள் நிமல் சிறிபாலவிற்கு ஒருபோதுமே எதிரியாக இருக்கவில்லை. அவர் 1994 சந்திரிக்காவின் அரசாங்கத்திலும் 2005 இல் மகிந்தவின் அரசாங்கத்திலும் 2015 இல் மைத்திரிபாலவின் அரசாங்கத்திலும் 2019 இல் கோட்டாபயவின் அரசாங்கத்திலும் 2022 ரணிலின் அரசாங்கத்திலும் அமைச்சராவார். அதனால் நாங்கள் நிமல் சிறிபாலவிற்கு பொது எதிரியாக அமைவது சரிதான். அவர் 30 வருடங்களாக இந்த பாராளுமன்றத்தில் அமைச்சர். அதனால் பிரமாண்டமான கூட்டமைப்பொன்றின் முன்னறிகுறியாகும். தேசிய மக்கள் சக்தியை தோற்கடித்திட அதற்கு எதிரான அனைவரும் ஒன்றுசேர வேண்டுமென்ற உரையாடல் தோன்றியுள்ளது. இவ்வாறான மாற்றமொன்று பொதுவான முறையின்படி இடம்பெற அவர்கள் இடமளிக்கமாட்டார்கள். நாங்கள் தோல்வியடைந்தால் அடுத்த நாளில் இருந்து அரசியலில் ஈடுபடுவோம். நாங்கள் இதனைக் கைவிடமாட்டோம். மாற்றியமைப்பதற்காக திடசங்கற்பத்துடன் செயலாற்றுவோம். அவர்கள் தோல்வியடைந்தால் அவர்கள் பலவற்றை இழந்துவிடுவார்கள். அவர்கள் பரம்பரைக்கிணங்க அரசியல் பலகையில் பகடைக்காய்களை வரிசைப்படுத்தி உள்ளார்கள். நாமல் அண்மையில் அவர்களின் குடும்பத்தின் அரசியல் வரலாறு 98 வருடங்கள் எனக் கூறினார். அவர்கள் தோல்வியடைந்தால் நாமலுக்கு சென்சரி அடிக்கக் கிடைக்காது. மேலே மாத்திரமல்ல மாவட்டரீதியிலும் கிராமிய ரீதியிலும் அவர்களின் தலைமுறையினருக்கு எமது நாட்டில் ஆட்சி எழுதிக்கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தலைமுறை ஆட்சி இல்லாதொழியும். அவர்கள் ஒருபோதுமே சட்டத்திற்கு கட்டுப்படவில்லை. சட்டத்திற்கு மேலாக இருந்தவர்கள். அரசியலமைப்பு, குற்றவியல் சட்டங்கள், பணம் தூய்தாக்கல் சட்டம், பொது ஆதனங்கள் சட்டம் எவ்வளவுதான் இருந்தாலும் அந்த எல்லா சட்டங்களையும்விட அவர்கள் மேலேயே இருந்தார்கள். அவர்களுக்கு சட்டத்திற்கு கட்டுப்படவேண்டிய நிலையேற்படும். முறைதகாதவகையில் சேகரித்துள்ள செல்வத்தை இழப்பார்கள். அதனால் அவர்களின் அதிகாரம் கைநழுவிச்செல்வதை தடுப்பதற்காக அவர்களின் பக்கத்தில் செய்யக்கூடிய அனைத்து வழிமுறைகளையும் செய்வார்கள். இலங்கையில் காணக்கூடிய பலவர்ண தேர்தல் மேடையை எதிர்காலத்தில் காணமுடியும். முன்னாள் ஜனாதிபதிகள், சந்திரிக்கா, மகிந்த, மைத்திரி, கோட்டா மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஐவருமே ஒரே மேடையில் ஏறுவார்கள். தற்போதும் மேடையில் ஏறாவிட்டாலும் உள்ளக உடன்படிக்கையொன்றின்படி செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஊழல்மிக்க பிரபுக்கள் அமைப்பினர் முதல்த்தடவையாக தமது அதிகாரம் அற்றுப்போய் விடுமோ என திகைத்துப்போய் இருக்கிறார்கள். ஊரில் ஒரு கதை பேசப்படுகிறது “பாரிய வெள்ளப்பெருக்கில் அகப்பட்டால் நாகமும் கீரியும் அடித்துச் செல்கையில் ஒரே மரக்குற்றியில் ஏறுமாம்.” இந்த நாடகத்தையும் கீரியையும் வருங்காலத்தில் ஒரே மேடையில் காணலாம். அவர்களின் பக்கத்தில் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக செய்யக்கூடிய அனைத்தையும் செய்வார்கள் என்பது தெளிவானதாகும்.
நாங்கள் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மென்மேலும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டி சேர்த்துக்கொள்வதையும் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதையுமே செய்யவேண்டும். அந்த பணியில் உங்களை பங்காளர்களாக மாற்றுவதற்காகவே நாங்கள் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். ஊழல்மிக்க, பிரபுக்கள் அமைப்பிற்கு எதிராக பலம்பொருந்திய மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றுசேருமாறு நாங்கள் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். கனடாவில் வசிக்கின்ற தமிழ்ச் சமூகத்திற்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். இலங்கையின் வடக்குப் பிரதேசத்தில் வசிக்கின்ற மக்கள்மீது பலம்பொருந்திய அழுத்தம் கொடுக்கக்கூடிய இயலுமை அவர்களிடம் இருக்கின்றது. நான் சிங்கள பௌத்த கலாசாரத்திலும், மற்றுமொருவர் தமிழ்க் குடும்பத்தின் இந்து மத கலாசாரத்திலும், வேறொருவர் இஸ்லாமிய கலாசாரத்திலும் கிறிஸ்தவர்களும் பறங்கியர்களும் அந்தந்த கலாசாரங்களிலும் பிறந்து வளர்ந்தவர்களாவர். நாங்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான மத, மொழி, கலாசாரத்திற்கு அமைவாக பிறப்பது ஒரு குற்றச்செயலா? இந்த நாட்டுக்குள்ளே அந்த பிளவினை ஏற்படுத்துவதில் இந்த ஆட்சிக்குழுக்கள் நீண்டகாலமாக வெற்றிபெற்றார்கள். வடக்கின் அரசியலை தெற்கிற்கும் தெற்கின் அரசியலை வடக்கிற்கும் எதிராகவும் தெற்கின் அரசியலை கிழக்கிற்கும் கிழக்கின் அரசியலை தெற்கிற்கும் எதிராகவும் நெறிப்படுத்தினார்கள். ஒட்டுமொத்த அரசியலுமே சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களை அவர்கள் பேசுகின்ற மொழிக்கிணங்க, அவர்களின் மதத்திற்கிணங்க, அவர்களுக்கே தனித்துவமான கலாசாரத்திற்கிணங்க அவரவர்களுக்கெதிராக எம்மைத் துண்டுதுண்டாக பிளவுபடுத்தின.
இன்று இலங்கைக்குத் தேவை ஒன்றுசேர்கின்ற மற்றும் ஒற்றுமையின் அரசியலாகும். நாங்கள் முப்பது வருடகால யுத்தத்தை எதிர்நோக்கினோம். பெருநிலம் நனையும்வரை இரத்தம் சிந்தினோம். ஆறுகள் பெருக்கெடுக்கும்வரை கண்ணீர் சிந்தினோம். வடக்கிலும் தெற்கிலும் தாய்தந்தையர் தமது பிள்ளைகளை இழந்தார்கள். இந்த பிரிவினைவாத அரசியலில் எமக்கு எஞ்சிய பெறுபேறு என்ன? நாங்கள் இந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடாதா? நாங்கள் வடக்கின் மக்களுக்கும் அவர்களின் உண்மையான பிரச்சினையான உணவு பற்றி, சுகாதாரம் பற்றி, பிள்ளைகளின் கல்வி பற்றி, வீடொன்றைக் கட்டிக்கொள்ளும் பிரச்சினை பற்றி பாரதூரமான வகையில் சிந்திக்கின்ற அரசியல் தலைவர்களுக்கு நீங்கள் ஒன்றுசேர வேண்டிய இடம் தேசிய மக்கள் சக்தியே என நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். கிழக்கின் முஸ்லீம் மக்களுக்கும் கிழக்கிழங்கை மக்களின் பிரச்சினைகள் பற்றி பாரதூரமான வகையில் சிந்திக்கின்ற ஒவ்வொரு பிரசைக்கும் சமூகத் தலைவர்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். இந்த மாற்றத்தைச்செய்ய உங்களின் பங்களிப்பு எமக்கு அவசியமாகும். நாங்கள் கட்டியெழுப்புகின்ற அரசாங்கம் தெற்கு, வடக்கு, கிழக்கு, தமிழ், முஸ்லீம், சிங்களம் ஆகிய அனைவரும் ஆட்சியதிகாரத்தை வகிக்கின்ற அரசாங்கமாக மாறவேண்டும். இந்த செய்தியை உங்கள் உறவினரிடம் நண்பரிடம் எடுத்துச் செல்லுமாறு கனடாவில் வசிக்கின்ற தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். எமது பரம்பரை யுத்தம் புரிந்தது: சண்டைபோட்டுக்கொண்டோம்: சந்தேகம், கடுங்கோபம், குரோதத்தை ஏற்படுத்திக்கொண்டோம். எதிர்கால சந்ததியினருக்கு அந்த நிலைமையை ஏற்படுத்திக் கொடுக்காதிருக்க நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு எமக்குண்டு.
1948 இல் சுதந்திரம் கிடைத்தவேளையில் அனைத்து மக்களையும் ஒரே தேசியக் கொடியின்கீழ் ஒன்றுசேர்க்க இயலுமைனதாக இருந்தது. வெள்ளைக்காரனின் ஆதிபத்தியம் சிதைந்தது. சுதேசிகளின் கைகளுக்கு ஆட்சி கைமாறியது. எப்படிப்பட்ட தேசிய உணர்வு எங்கள் மனங்களில் உதிக்கவேண்டும்? தற்போது சுற்றறிக்கை மூலமாக தேசியக் கொடியை ஏற்றிவைக்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. எம்மால் அதனை ஒரு சுதந்திரமாக உணரமுடியவில்லை. 1947 இல் சுதந்திரம் பெற்ற இந்தியாவின் தலைவர்களுக்கு தமது நாட்டை முன்னேற்ற வேண்டுமென்ற நோக்கு இருந்தது. அன்று தலைவர்கள் இட்ட அடித்தளம்தான் இன்று சந்திரனுக்குப் போகின்ற இந்தியா, ஆசிய பிராந்தியத்திற்கு வாகனங்களை வழங்குகின்ற மருந்துவகைகளை வழங்குகின்ற உணவு வழங்குகின்ற நாடு உருவாகியது. எமக்கு கடனெடுக்க நேரிட்டது, கடனை மீளச்செலுத்த முடியவில்லை. எமது தலைவர்களுக்கு ஒரு நோக்கினைக்கொண்ட ஆட்சி இருக்கவில்லை. பாரிய பிரதேச வேறுபாடுகளைக்கொண்ட, பல்வேறு கலாசாரங்கள் நிலவுகின்ற, பாரியளவிலான மதபேதங்கள் நிலவுகின்ற, பல்வேறு மொழிகள் பேசப்படுகின்ற நாடான இந்தியாவிற்கு ஒரே தேசியக் கொடியின்கீழ் மக்களை அணிதிரட்டவும் அதன் காரணமாக மன்மோகன்சிங்கிற்கு பிரதமராகவும், அப்துல் கலாமிற்கு ஜனாதிபதியாகவும் இயலுமை கிடைத்துள்ளது. சாதியில் தாழ்ந்தவரென ஏற்றுக்கொள்ளப்பட்ட பெண்ணால் ஜனாதிபதியாக முடியுமானதாகி உள்ளது. அந்த ஆட்சியாளர்களால் தேசிய ஒருமைப்பாட்டினை ஏற்படுத்த முடிந்தமையே அதற்கான காரணமாகும். ஆனால் எமது நாட்டில் 1958 இல் இருந்து 2019 வரையான ஒட்டுமொத்த வரலாறுமே முரண்பாட்டு வரலாறாகவே இருந்தது. பிறருக்கு எதிராக அரசியல் புரிகின்ற நுகத்தடியில் இருந்து நாங்கள் விடுபடவேண்டும்.
ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தலில் வடக்கும் தெற்கும் கிழக்கும் சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து புதிய ஆட்சியொன்றைக் கட்டியெழுப்புவோம். 1948 ஆட்சியாளர்கள் தவிர்த்துக்கொண்டாலும் 2024 இல் ஒற்றுமை, சமாதானம், தேசிய ஒருமைப்பாட்டினைக்கொண்ட ஆட்சியொன்றைக் கட்டியெழுப்புவோம். எனக்கு வாக்களியுங்கள்: நான் 13 பிளஸ், பெடரல் தருவேன் என வாக்குக் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடத் தயாரில்லை. அரசியல் என்பது கொடுக்கல்வாங்கலே, பிஸ்னஸ் அல்ல. அரசியல் என்பது ஒரு கூட்டு முயற்சியாகும். வடக்கு, கிழக்கு, தெற்கின் நாமனைவரும் ஒன்றுசேர்ந்து எமது நாட்டைக் கட்டியெழுப்புவோம்.