உலகக்கிண்ண தயார்படுத்தல்: ரி20 தொடரில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது பாகிஸ்தான்..!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடருக்கான அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அதற்கான போட்டி அட்டவணையினை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நேற்று (28) அறிவித்திருந்து.
இதற்கமைய எதிர்வரும் மே மாதம் 10, 12 மற்றும் 14 ஆகிய திகதிகளில் இம் மூன்று இருபதுக்கு இருபது போட்டிகள் இடம்பெறவுள்ளது. மேலும் இம் மூன்று போட்டிகளும் டப்ளினில் உள்ள க்ளோன்டார்ஃப் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
அத்துடன் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்துக்கான தயாரிப்படுத்தலாக இந்தத் தொடர் அமையவுள்ளது. மேலும் உலகக்கிண்ண தொடரில் இவ் இரு அணிகளும் எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் திகதி ஆரம்பக் குழு நிலை போட்டியில் ஒருவரையொருவர் எதிர்கொள்ளவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் அயர்லாந்து அணிக்கு எதிரான ரி20 தொடர் முடிவுற்றவுடன் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு பயணமாகிறது. அங்கு அவர்கள் நடப்பு ரி20 உலக சம்பியனான இங்கிலாந்து அணிக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)