உள்நாடு

“சமூகத்தில் பெண்கள் மகிழ்ச்சியாக வாழும்போதுதான் பெண் உரிமைகள் உயிர்ப்போடு இருப்பதாகக் கொள்ள முடியும்..” -சட்டத்தரணி  சபியா

“சமூகத்தில் பெண்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா இல்லையா என்பதைப் பொறுத்துத்தான் பெண்ணுரிமைகள் உயிர்ப்போடு இருக்கிறதா  இல்லையா என்பதை மதிப்பிட முடியும்” என சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிசுமான  எஸ்.எப். சபியா தெரிவித்தார்.

தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி வளமான எதிர்காலத்தை வடிவமைத்து முன்மாதிரியாகத் திகழும் மகளிரைப் பாராட்டி உதவு  ஊக்கமளிக்கும் நிகழ்வு மூதூர் பிரதேச செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் திங்களன்று 26.03.2024 இடம்பெற்றபோது அவர் இந்தக் கருத்தை  வெளியிட்டார்.

இளைஞர் அபிவிருத்தி அகம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் மூதூர் பிரதேச செயலகத்தின் ஒழுங்குபடுத்தலில்  இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு  மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக்  தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில்  சிறந்த சுயதொழில் முயற்சியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த முன்மாதிரி ஆற்றல் மிக்க பெண்கள்   முன்னிலைப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய சட்டத்தரணி சபியா, ஆண்களைப்போலவே பெண்களுக்கும் சந்தோசமும் நிம்மதியும் தேவை. இந்த இரண்டும் பெண்;களுக்குக் கிடைக்க வேண்டுமாக இருந்தால் பெண்ணுரிமைகள் முழுமையாக நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தான் விரும்பும் ஒரு செயலைச் செய்வதற்குரிய உரிமையும் தான் விரும்பாத ஒரு  செயலைச் செய்;யாமல் இருப்பதற்கு உள்ள உரிமையும் ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டும். ஆகவே பெண்ணுரிமைகளாக இவையும் பாதுகாக்கப்பட  வேண்டும்.

பெண்கள் தங்களுக்குரிய உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ளக் கூடிய வகையில் உள்ள மிகப் பெரிய ஆயுதம் கல்வி. ஒரு பெண் சீரிய கல்வியைக் கற்று உயர்ந்த ஸ்தானத்தை அடைந்து கொள்வாளாக இருந்தால் அவள் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களுக்கும் முகம் கொடுத்து வெற்றி கொண்டு வீறுநடை போட முடியும். பல்வேறு தடைகள் சூழ்நிலைகளின் நிமித்தம் கல்வி அறிவைப் பெற்றுக் கொள்ளாத ஒரு பெண்ணால் எவ்வாறு சமூக சவால்களை எதிர்கொள்ள முடியும் பெண்ணுரிமைகளை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்ற கேள்வி உள்ளது.”  என்றார்.

நிகழ்வில் உடல் ஆரோக்கியத்துக்கான வழிவகைள் பற்றியும் நோய்கள் பற்றியும் தெளிவுகள் வழங்கப்பட்டதோடு கலை நிகழ்வுகளும்  இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் முனவ்வறா நளீம், மூதூர் பிரதேச சபைச் செயலாளர் எஸ். சத்தியசோதி, சட்டத்தரணி  ஏ.எப். ஷிபா, இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராஜா திலீப்குமார்இ பிரதேச மகளிர் அபிவிருத்தி  உத்தியோகத்தர் என். சிபாதா  பானு உட்பட பிரதேச செயலக சிறுவர், பெண்கள் பிரிவு  உத்தியோகத்தர்கள், மகளிர் சங்க  உறுப்பினர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு அங்கத்தவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

 

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *