உள்நாடு

இ.ஒ.கூ. சுயாதீன அறிவிப்பாளராக லைலா அக்ஷியா நியமனம்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச் சேவைப் பிரிவின் சுயாதீன அறிவிப்பாளராக லைலா அக்ஷியா நியமனம் பெற்றார்.

இ.ஒ.கூ. தமிழ்ச் சேவைப் பணிப்பாளர் திரு. கணபதிப்பிள்ளை, இவரை உத்தியோக பூர்வமாக (19.03.2024) நியமித்தார்.வானொலி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் லைலா அக்ஷியா தினகரன், வீரகேசரி, விடிவெள்ளி, தினமுரசு போன்ற தேசிய பத்திரிகைகளிலும், பல உள்ளூர் மற்றும் வெளியூர் சஞ்சிகைகள், புத்தகங்களிலும் உளவியல் கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை பகிர்ந்து வருகிறார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் இவர், ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று நிகழும் ‘வகவ’க் கவியரங்குகளிலும் கவிதைப் பூக்களைத் தூவி வருகிறார். கதை, கட்டுரை, கவிதை என வெளியிட்டு, சமூக எழுத்தாளராகவுமிருந்து ஆர்வம் காட்டி, பல தேசிய விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்று தன் எழுத்துக்களைத் தடம் பதித்து வருகிறார். அண்மையில், பன்னாட்டுக் கவிஞர்களின் உலக சாதனை நூலில், இவரது 100 கவிதைகள் அடங்கிய தொகுப்பின் மூலம், இலங்கைக் கவிஞர்களின் பெயர்ப் பட்டியலில் இவர் சாதனை படைத்திருக்கிறார்.

இதற்காக இவருக்கு சமீபத்தில், இந்தியாவில் ”உலக சாதனை விருது” வழங்கப்பட்டது. உளவியல் மற்றும் விஷேட தேவையுடைய மாணவர் பயிற்சியாளராகவும், ‘ஸ்கில் இன்சைட்’ கல்வி நிலைய நிர்வாகியாகவும், பியூச்சர்ஸ் லீடர்ஸ் முன் பள்ளியின் அதிபராகவும் செயற்பட்டு வரும் இவர், யுனிசெப்அகதிகள் புனர்வாழ்வுத் திட்டத்தின் கீழ், குறித்த பிரதேசத்தின் பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான ஆங்கிலப் பாட போதகராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹொரேதுடுவ முஸ்லிம் மகா வித்தியாலயம், ஜீலான் மத்திய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியும், ஆசிரியையுமான லைலா அக்ஷியா, தெஹிவளையைப் பிறப்பிடமாகவும், மொறட்டுவையை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளதோடு, இந்திய பூர்வீகத்தைச் சேர்ந்த பாவா மொஹிதீன் – ஷாஹிதா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியுமாவார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *