விளையாட்டு

இரண்டாம் பாதி அசத்தலால் பூட்டானை பந்தாடியது இலங்கை

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 4 நாடுகள் பங்கேற்கின்ற நட்பு ரீதியான உதைப்பந்தாட்டத் தொடரில் இன்று (25) இடம்பெற்ற இலங்கை மற்றும் பூட்டான் அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டாம் பாதியில் இரண்டு கோல்களை உட்புகுத்திய இலங்கை அணி 2:0 என்ற கோல்கள் அடிப்படையில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.

அண்மையில் கட்டாரில் இடம்பெற்ற ஆசியக் கிண்ண ஆரம்ப நிகழ்வில் பின்னர் பிபாவின் தலைவரான கியானி இன்பான்டினோவுக்கும் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரான ஜஸ்வர் உமருக்கும் இடையிலான சந்திப்பில் இத் தொடர் பற்றி பேசப்பட்டு, அதற்கான அனுமதியும் பெறப்பட்டிருந்தது.

அதற்கமைய இலங்கை, மத்திய ஆப்ரிக்கா, பப்புவா நியூ கினியா மற்றும் பூட்டான் ஆகிய 4 அணிகள் இத் தொடரில் பங்கேற்கின்றன. இதில் ஒரு அணி மற்றைய மூன்றில் இரு அணிகளுடன் மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இலங்கை அணி தனது முதல் போட்டியில் கடந்த 22ஆம் திகதி பப்புவா நியூ கினியா அணியை எதிரத்தாடி இருந்தது. அப் போட்டி எந்த வித கோல்கள் இன்றி சமநிலை பெற்றது. இந்நிலையில் இலங்கை அணி தனது 2ஆவதும் இறுதியுமான போட்டியில் பிபா தரப்படுத்தலில் 913 புள்ளிகளுடன் 184 ஆவது இடத்திலுள்ள பூட்டான் அணியை இன்று இரவு 8.45 மணிக்கு கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சந்தித்திருந்தது. இத் தரப்படுத்தலில் இலங்கை அணி 822 புள்ளிகளுடன் 204ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலங்கையின் ரசிகர்கள் புடைசூழ ஆரம்பமான ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் விட்டுக் கொடுப்பின்றி விளையாடினர். இதனால் பந்து இரு கோல்கம்பங்களுக்கும் சென்று வந்து. இருப்பினும் இரு அணியாலும் முதல் பாதியில் ஒரு கோலைக் கூட உட்செலுத்த முடியா வண்ணம் இரு அணிகளின் தடுப்பு வீரர்களும், கோல்காப்பளரும் செய்யப்பட்டிருந்தனர். இதனால் முதல் பாதி கோலின்றி சமநிலை பெற்றது.

பின்னர் ஆரம்பித்த தீர்மானிக்க 2ஆவது பாதி ஆட்டத்தில் இலங்கை வீரர்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். இதனால் ஆட்டத்தின் 46 ஆவது நிமிடத்தில் டிலோன் ட சில்வா இலங்கை அணிக்கான முதல் கோலை உட்செலுத்த மைதானம் ஆர்ப்பரித்து. இதனால் 1:0 என்ற முன்னிலையுடன் இலங்கை வீரர்கள் காணப்பட , பதில் கோலுக்காக பூட்டான் வீரர்கள் முயற்சி அதிகமானது.

இருப்பினும் ஆட்டத்தின் 54 ஆவது நிமிடத்தில் பந்துடன் பூட்டான் கோல் கம்பத்தினை நோக்கிச் சென்ற ஒலிவர் கலார்ட் தனித்து நின்ற பூட்டான் கோல் காப்பாளரை கடந்தே பந்தை கம்பம் அனுப்ப மீண்டும் ரேஸ்கோர்ஸ் மைதானம் ஆரவாரத்தால் அதிர்ந்து போனது.

தொடர்ந்த ஆட்டத்தில் பூட்டான் கோலுக்கான முயற்சியில் தோல்விகான , இலங்கை அணியால் மேலதீக கோலை உட்செலுத்த முடியாமல் போக ஆட்டம் நிறைவுக்கு வருகையில் இலங்கை அணி பலமிக்க பூட்டான் அணியை 2:0 என்ற கோல்கள் அடிப்படையில் வீழ்த்தி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *