விளையாட்டு

சதங்களால் சாதனை படைத்த கமிந்து மெண்டிஸ்

இலங்கை அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட சகலதுறை வீரரான கமிந்து மெண்டிஸ் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸிலும் இரு சதங்களைப் பதிவு செய்து 147 வருட சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனைக்குச் சொந்தக்காரரானார்.

25 வயதான இலங்கை அணியின் துடுப்பாட்ட சகலதுறை வீரரான கமிந்து மெண்டிஸ் புதிதாக இலங்கை டெஸ்ட் அணியில் இணைக்கப்பட்டிருந்தார். அந்தவகையில் கடந்த மாதம் இடம்பெற்று முடிந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அரைச்சதம் விளாசி தன் இருப்பை தக்கவைத்ததுடன் பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மட்டுமல்லாது ரி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் இடம்பெற்றார். மேலும் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இடம்பெற்று முடிந்த ரி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 22ஆம் திகதி ஆரம்பித்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் துடுப்பாடியிருக்க முதல் 5 விக்கெட்டுக்களும் 57 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட 7ஆம் இலக்க வீரரான களம் நுழைந்த கமிந்து மெண்டிஸ் அணித்தலைவரான தனஞ்சய டி சில்வாவுடன் இணைந்து இரட்டைச்சத இணைப்பாட்டத்தைப் பகிர்நததுடன் தனது கன்னி டெஸ்ட் சதத்தை விளாசினார். இதனால் இலங்கை அணி கௌரவமான ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக் கொண்டது.

பின்னர் 2ஆவது இன்னிங்ஸிலும் இலங்கை அணி தடுமாற்றம் கண்டு 126 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்திருக்க 8ஆம் இலக்க வீரரான களம் நுழைந்த கமிந்து மெண்டிஸ் மீண்டும் களத்திலிருந்த அணித்தலைவரான தனஞ்சய டி சில்வாவுடன் இணைந்து 173 ஓட்ட நணைப்பாட்டத்தை பதிவு செய்ததுடன் தனது டெஸ்ட் அதிகூடிய ஓட்டமான 164 ஓட்டங்களைப் பதிவு செய்து மிரட்டினார். இதனால் இலங்கை அணி பங்களாதேஷ் அணிக்கு எட்டமுடியாத வெற்றி இலக்கை நிர்ணயித்திருந்தது.

மேலும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள கமிந்து மென்டிஸ் 3 இன்னிங்களில் இரு சதம் ஒரு அரைச்சதம் விளாசியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. அத்துடன் 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 7ஆம் மற்றும் 8ஆம் இலக்கத்தில் வந்த வீரர் இரு இன்னிங்ஸிலும் அசத்தல் சதம் விளாசியது இதுவே முதல் முறை என்பதனால் கமிந்து மென்டிஸ் இப் புதிய வரலாற்றுச் சாதனைக்கு சொந்தக்காரராகி அசத்தினார்.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *