உள்நாடு

உலகக் கவிதை தின அரங்கில் ”வலம்புரி கவிதா வட்டம்” நடாத்திய 98 ஆவது கவியரங்கு

”வலம்புரி கவிதா வட்டம்” தனது 98 ஆவது கவியரங்கினை (24) ஞாயிற்றுக்கிழமை காலை நடாத்தியது. மார்ச் 21 ஆம் திகதி இடம்பெற்ற உலகக் கவிதை தினத்தினை ஞாபகமூட்டி, உலகக் கவிதை தின அரங்காக இதனை நடாத்தியது.

வழமை போன்றே, இம்முறையும் கொழும்பு பழைய நகர மண்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்வினை, வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் நெறிப்படுத்தினார். பொருளாளர் கவிஞர் ஈழகணேஷ் வரவேற்புரையையும், செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் நன்றியுரையையும் வழங்கினர்.

அண்மையில் மறைந்த வகவக் கவிஞர் கவிநேசன் நவாஸ் அவர்களின் துணைவியாருக்காகவும், சிரேஷ்ட புகைப்படக் கலைஞர் எஸ்.ஏ. கரீம் அவர்களுக்காகவும் பிரார்த்தனை இடம்பெற்றது. அத்துடன், தற்போது நோய்வாய்ப்பட்டிருக்கும் கவிஞர் இஸ்மத் பாத்திமா அவர்கள், விரைவில் பரி பூரண சுகம் பெற வேண்டுமெனவும் இங்கு பிரார்த்தனை செய்யப்பட்டது.கைகளிலே எதுவித தாளும் ஏந்தாமல, தனது உள்ளத்துக் கவிதைகளை அருவியெனக் கொட்டும் கவிஞர் ராஜா நித்திலன் 98 ஆவது கவியரங்கிற்குத் தலைமை தாங்கினார்.

கவிஞர்கள் ”தமிழ்த்தென்றல்” அலி அக்பர், ”கவிஞர் திலகம்” எம். பிரேம்ராஜ், ராதா மேத்தா, ”கவிநேசன்” நவாஸ், சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ், பவானி சச்சிதானந்தன், ‘நேகம’ ஷிபானியா பௌசுல், தி. ஸ்ரீதரன், ‘பிறைக்கவி’ முஸம்மில், ‘கிண்ணியா’ அமீர் அலி, ‘அருந்தவம்’ அருணா, எஸ். அருணன், ‘வாழைத்தோட்டம்’ எம். வஸீர், ந. தாமரைச் செல்வி, பி. எம். எம். ரமீஸ், ‘லிந்துல’ ஆர். நவரட்னம், ஆர். தங்கமணி, ‘கம்மல்துறை’ இக்பால், எம்.பீ.எஸ். பாலா, ‘சிந்தனைப் பிரியன்’ முஸம்மில், ஜீவேஸ் கௌதம், ‘இளநெஞ்சன்’ முர்ஷிதீன் ஆகியோர் மிகவும் ஆர்வத்துடன் தங்கள் உணர்வுகளைக் கவிதை மழைகளாகப் பொழிந்தனர்.

எதிர்நோக்கும் நூறாவது கவியரங்க ஏற்பாடுகள் குறித்து வெளியிடப்படவிருக்கும் கவிதை நூல் பற்றியும் இதன்போது பிரஸ்தாபிக்கப்பட்டது. இச்சிறப்பு கவியரங்கு சபையை, ‘மணவை’ அசோகன், எம்.பீ.எம். சித்தீக், ‘மலாய்கவி’ டிவாங்ஸோ, ரமீஸா இம்தியாஸ் போன்றோர் உணர்வுப் பூக்களால் அலங்கரித்தனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )
(படங்கள் – முஹம்மத் நசார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *