விளையாட்டு

தனஞ்சய மற்றும் கமிந்துவின் அசத்தல் சதங்களால் வங்கதேசத்தை மண்டியிட வைத்தது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா ஆகியோரின் இரு சதங்களின் உதவியினால் 328 ஓட்டங்களால் அசத்தல் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரில் 1:0 என முன்னிலை பெற்றதுடன் ஐசிசி இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் புள்ளிக் கணக்கை ஆரம்பித்தது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த 22ஆம் திகதி ஆரம்பித்திருந்தது. போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை அணிக்குக் கொடுத்தது. இதற்கமைய களம் நுழைந்த இலங்கை அணி அணித்தலைவரான தனஞ்சய டி சில்வா மற்றும் 7ஆம் இலக்கத் துடுப்பாட்ட வீரரான கமிந்து மெண்டிஸ் ஆகியோரின் இரட்டைச் சத இணைப்பாட்டத்தின் உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 280 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் தனஞ்சய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் முறையே தலா 102 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் நஹிட் ரானா மற்றும் ஹலீட் அஹமட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி இலங்கையின் வேகப்பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஆட்டம் கண்டது. அவ் அணியின் சார்பில் டய்ஜுல் இஸ்லாம் மாத்திரம் 47 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக் கொடுத்திருக்க அவ்வணியால் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 188 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. பந்துவீச்சில் விஷ்வ பெர்ணான்டோ 4 விக்கெட்டுக்களையும் லஹிரு குமார மற்றும் ராஜித்த ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

பின்னர் 92 முதல் இன்னிங்ஸ் ஓட்ட முன்னிலையுடன் தமது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணிக்கு ஆரம்ப வீரரான திமுத் கருணாரத்ன அரைச்சதம் அடித்து ஆறுதல் கொடுக்க மற்றைய வீரர்களான நிஷான் மதுஸ்க (10) , குசல் மெண்டிஸ் (3), அஞ்சலோ மெத்யூஸ் (22) மற்றும் தினேஷ் சந்திமால் (0) என மீண்டும் சறுக்கினர். பின்னர் 3ஆம் நாளில் இணைந்த தனஞ்சய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஜோடி முதல் இன்னிங்ஸ் போலவே அணியை சுமக்க ஆரம்பித்து இருவரும் தமக்கிடையில் பெறுமதிமிக்க 173 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்திருக்க தொடரான 2ஆவது சதம் கடந்திருந்த தனஞ்சய டி சில்வா 108 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் தொடர்ந்து களத்திலிருந்து கமிந்து மெண்டிஸ் தனது தொடரான 2ஆவது சதத்தையும் பதிவு செய்து 147 வருட கிரிக்கெட் வரலாற்றில் 7ஆம் இலக்க துடுப்பாட்ட வீரர் பெற்ற அடுத்தடுத்த இன்னிங்ஸ் சதங்கள் என்ற சாதனையை தனதாக்கினார். தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய கமிந்து மெண்டிஸ் 164 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்க இலங்கை அணி 2ஆவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 418 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் மெஹ்தி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டுக்களை வீழ்தினார்.

பின்னர் 511 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி 3ஆம் நாளில் இறுதி பகுதியில் தமது 2ஆம் இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி மீண்டும் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளத் திணறியது. இதனால் 3ஆம் நாள் நிறைவில் முதல் 5 விக்கெட்டுக்களையும் இழந்து 47 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பின்னர் இன்றைய 4ஆம் நாளில் தமது 2ஆவது இன்னங்ஸை தொடர்ந்த பங்களாதேஷ் அணிக்கு மொஹ்மீனுல் ஹக் மாத்திரம் சற்று ஆறுதல் கொடுத்து அரைச்சதம் ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்த போதிலும் பங்களாதேஷ் அணியால் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 182 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தமையால் இலங்கை அணி 328 ஓட்டங்களால் அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது. பந்துவீச்சில் கசுன் ராஜித 5 விக்கெட்டுக்களை அள்ளிச் சுருட்டினார்.

இந்த வெற்றியின் மூலம் ஸெஇத் தொடரில் 1:0 என இலங்கை அணி முன்னிலை பெற்றதுடன் ஐசிசி இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் தனது புள்ளிக் கணக்கை ஆரம்பித்து தரப்படுத்தலில் 5ஆவது இடத்துக்கு முன்னேறியது. இப் போட்டியின் நாயகனாக தனஞ்சய டி சில்வா தெரிவானார். இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *