மீண்டும் சர்வதேச களத்தில் ஆமீர் மற்றும் இமாத் வசீம்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2021ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பாகிஸ்தான் அணியின் ஆவேகப்பந்து வீச்சாளரான முகம்மது ஆமீர் மற்றும் சகலதுறை வீரரான இமாத் வசீம் ஆகியோர் தனது ஓய்வு முடிவை மாற்றிக்கொண்டு, இவ்வருடம் இடம்பெறவுள்ள ஐசிசி ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாடத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளனர்.
அண்மையில் முடிவடைந்த பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் சம்பியன் பட்டம் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக ஆடிய இமாத் வசீம் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் ஆகிய இரண்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டதுடன், மற்றைய வேகப்பந்து வீச்சாளரான முஹம்மது ஆமீர் க்ளேடியேட்டஸ் அணிக்காக சிறப்பான முறையில் பந்துவீசியிருந்தமையையும் அவதானித்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இருவரையும் அழைத்திருந்தது.
இதற்கமைய பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் முகம்மது ஆமீர் மற்றும் இமாத் வசீம் ஆகியோர் தமது ஓய்வு முடிவை திரும்பப் பெறுவதற்கு தீர்மானித்துள்ளனர். எவ்வாறாயினும், எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் முடியும் வரை மாத்திரமே அவர் சர்வதேச கிரிக்கெட் களத்தில் நிலைத்திருப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
31 வயதான வேகப்பந்து வீச்சாளரான பாகிஸ்தான் அணியின் முகம்மது ஆமீர் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் ”நான் இன்னும் பாகிஸ்தானுக்காக விளையாட வேண்டும் என்று கனவு காண்கிறேன். சில சமயங்களில் நம் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு வாழ்க்கை நம்மைக் கொண்டுவருகிறது. எனக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கும் இடையே நடச்த சந்திப்பில் நான் பாகிஸ்தானுக்குத் தேவை என்றும், இன்னும் பாகிஸ்தானுக்காக விளையாட முடியும் என்றும் எனக்கு உணர்த்தியது.
வரவிருக்கும் ரி20 உலகக்கிண்ணத்திற்கு பரிசீலிக்க நான் தயாராக இருக்கிறேன் என்று எனது குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள் அறிவிக்கிறேன்.எனது தனிப்பட்ட முடிவுகளுக்கு முன் வருவதைப் போல எனது நாட்டிற்காக இதைச் செய்ய விரும்புகிறேன். பச்சை நிற ஜெர்சி அணிந்து என் நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும் என்பது எப்போதுமே எனது மிகப்பெரிய இலட்சியம்.” என்றார் முகம்மது ஆமிர்.
(அரபாத் பஹர்தீன்)