உள்நாடு

கனடா வாழ் இலங்கை முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரா குமார திஸாநாயக்காவை சந்தித்த சந்தர்ப்பத்தில் கையளித்த கடிதத்தின் தமிழ் வடிவம்..!

(22-04-2024  Toronto)

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் என்ற அடிப்படையில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.

கடந்த 20 வருடகால இலங்கையின் அரசியல் சூழ்நிலைகளை (2005-2024 வரையான ) தொடராக அவதானிக்கின்றவர்கள் என்ற அடிப்படையில் அங்கு ஏற்பட்டிருக்கின்ற அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகள் குறித்து எமக்கு ஒரு ஆழ்ந்த கவலையும் கரிசனையும் இருக்கின்றது.

2005களில் ராஜபக்ஷ குடும்ப ஆட்சியின் தொடக்கம், ஒரு குடும்ப ஆட்சியை இலங்கையில் நிலைநிறுத்தும் விதமாகவே அமைந்திருந்தது. அப்போதுமுதல் இலங்கையின் ஆட்சிப்பரப்பில் சர்வாதிகார நடைமுறைகள் வெளிப்படத் தொடங்கின. அதனைத் தொடர்ந்த இறுதி யுத்தமும் அதனோடு இணைந்த சர்வதேச குற்றச்சாட்டுக்கள், வசீம் தாஜுதீன் உட்பட பல்வேறு தனிநபர்களின் படுகொலைகள், காணாமல் போத்தல்கள், இனவெறுப்பை மையப்படுத்திய ஒரு அரசாங்க முறைமை நாட்டில் நிலவியது. 2014 அளுத்கம பேருவளைக் கலவரங்கள் ஹலால் எதிர்ப்பு நடவடிக்கைகள் எனப் பலவிதமான இனவெறுப்பு நிகழ்வுகளை நாம் காணக்கூடியதாக இருந்தது.

2015 மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம், அதிலே அரங்கேறிய குளறுபடிகள், இனவன்முறைகள், 2018 கண்டி- திகன கலவரங்கள், 2019 ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் அதனைத் தொடர்ந்த இனப்பாகுபாட்டு காலங்கள், கோத்தபாயவின் ஆட்சிக்காலம் பொருளாதார நெருக்கடிகள், மக்கள் எழுச்சிப்போராட்டங்கள், தற்போதைய ரணிலின் ஆட்சிக்காலம். இவை அனைத்துமே இலங்கை மக்களையும் இலங்கை நாட்டையும் பல்வேறு கஷ்ட துன்பங்களுக்கும் பின்னடைவுகளுக்கும் இட்டுச்சென்றிருக்கின்றது.

2022 தொடங்கி 2024 வரையான காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள், இலங்கையின் வங்குரோத்து நிலைமைகள், கடன்களை மீளச்செலுத்த முடியாத சூழ்நிலைகள், அளவுக்கதிகமான ஊழல் மோசடிகள், உலக வங்கியின் தலையீடுகள், அதனைத் தொடர்ந்து இலங்கைக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற பொருளாதார விதிமுறைகள், அளவுகடந்த வரிவிதிப்புகள், உயர்ந்திருக்கும் வாழ்க்கைச்செலவுகள், மருத்துவ நெருக்கடிகள், கல்வி கற்கின்ற மாணவர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் என மிகமோசமான ஒரு பின்னடைவை நோக்கி இலங்கை நாளுக்கு நாள் நகர்கின்றது.

ஒரு பொறுப்புவாய்ந்த சிவில் சமூக அமைப்பு என்ற அடிப்படையிலும், சிவில் சமூகப் பிரதிநிதிகள் என்ற அடிப்படையிலும் எம்மால் மேற்படி நிலைமைகளை மௌனமாகக் கடந்து செல்ல முடியாது; இலங்கை மக்களின் வாழ்வில் ஒரு காத்திரமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பங்களிப்பு செய்வது எமது கடமை என்றே நாம் உணர்கின்றோம்.

2019 ஜனாதிபதித்தேர்தல் தொடங்கி தங்களது தேசிய மக்கள் சக்தியின் அரசியல் முன்னெடுப்புக்கள், கொள்கைப் பிரகடனங்கள், பாராளுமன்ற உரைகள், ஊடக செயற்பாடுகள், மக்களை விழுப்புணர்வூட்டும் செயற்பாடுகள் என்பவற்றை தொடராக அவதானிக்கின்றவர்கள் என்ற அடிப்படையில் நீங்கள் இலங்கை மக்கள் எதிர்நோக்குகின்ற சவால்கள் குறித்தும், அவற்றுக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கான உபாய மார்க்கங்கள் குறித்தும் போதுமான அறிவையும் தெளிவான பார்வைகளையும், தேவையான ஆற்றல்களையும் கொண்டிருக்கின்றவர்கள் என்பதை எம்மால் அனுமானிக்க முடியுமாக இருக்கின்றது.

அதேபோன்று இலங்கைக்குள்ளும் இலங்கைக்கு வெளியிலும் இலங்கையின் அரசியல் மாற்றங்கள் குறித்து பல்வேறு காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும் நாம் அவதானித்திருக்கின்றோம்.

இலங்கையில் இதுவரைகாலமும் மாறிமாறி அதிகாரத்தைக் கைப்பற்றிவந்த ஆட்சியாளர்களும் அரசியல் கட்சிகளும் தாம் அனுபவித்த ஆட்சியதிகாரங்களை ஒருபோதும் இன்னொரு புதிய அணியினருக்கு விட்டுக்கொடுக்க விரும்பாத ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது. அவர்கள் தம்மில் ஒருவர் அல்லது ஒரு கட்சி தனித்தோ அல்லது கூட்டாகவோ மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதிலும் அதனூடாக தாம் அனுபவித்துவந்த ராஜசுகபோகங்களைத் தொடர்ந்தும் அனுபவிப்பதற்கும் விரும்புவார்கள், அதற்கு அவர்கள் எந்த எல்லைவரை செல்வதற்கும் துணிவார்கள்.

சர்வதேச நாடுகள் இலங்கையின் அரசியல் நகர்வுகளை தமக்கு சாதகமாக எவ்வாறு பயன்படுத்துவது என்று உன்னிப்பாக அவதானிக்கும் ஒரு சூழ்நிலை இருப்பதையும் நாம் அவதானிக்கின்றோம், அவை இலங்கையில் ஜனநாயக முறையிலான தேர்தலை நடாத்துவதைவிடவும் தமது நலன்களுக்கு சாதகமான ஒரு அரசாங்கத்தை அமைப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவதும் எமக்குப் புரிகின்றது.

இவ்வாறான நிலையிலும் இலங்கை மக்கள் ஒரு தேர்தலை எதிர்பார்க்கின்றார்கள்; ஒரு தேர்தலை நடத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் இதயசுத்தியோடு முன்வருமா என்கின்ற கேள்விகள் இருக்கின்ற நிலையில் அல்லது அது ஜனாதிபதித் தேர்தலா? பாராளுமன்றத் தேர்தலா? உள்ளூராட்சித் தேர்தல்களா? என்கின்ற தெளிவற்ற நிலையிலும் மக்கள் ஒரு தேர்தலை எதிர்பார்க்கின்றார்கள்.

எனவே மேற்படி சூழ்நிலைகள் அனைத்தையும் கருத்தில்கொண்டு இலங்கையில் ஒரு நல்லாட்சி முறைமையொன்று நிறுவப்படுதல் வேண்டும் என்பதில் இலங்கை முஸ்லிம் மக்கள் மிகுந்த கரிசனையோடு இருக்கின்றார்கள். அவ்வாறான ஒரு ஆட்சி அமைகின்ற சந்தர்ப்பத்தில் அந்த ஆட்சியை அமைக்க முன்வருகின்றவர்களிடம் இலங்கை முஸ்லிம் மக்கள் பின்வரும் எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருக்கின்றார்கள்.

1. இலங்கை முஸ்லிம் மக்களும் இலங்கை மக்கள்; இலங்கை நாடு அவர்களது பூர்வீக வாழிடம் என்பது நடைமுறை ரீதியாக உறுதி செய்யப்படுதல் வேண்டும்.

2. இலங்கை மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமமானவர்கள் என்ற பொது நிலைமை இலங்கையின் அனைத்து மட்டங்களிலும் நடைமுறைரீதியாக உறுதி செய்யப்படுதல் வேண்டும்.

3. இலங்கை மக்கள் எவரும் இன, மதம், மொழி,பிரதேசம், ஏனைய இனத்துவ அடையாளங்களின் அடிப்படையில் பாகுபாடுகளுக்கோ புறக்கணிப்புகளுக்கோ எந்த மட்டத்திலேனும் உட்படுத்தப்படக்கூடாது.

4. இலங்கை முஸ்லிம் மக்கள் கடந்த 20வருட காலங்களில் பல்வேறு இனரீதியான தாக்குதல்களுக்கும்,இனரீதியான வன்முறைகளுக்கும் முகம்கொடுத்திருக்கின்றார்கள், இதன்மூலம் அவர்களுக்கு உயிர் , உளரீதியான இழப்புக்கள்,, உடைமைகள், பொருளாதார இழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றைக் கருத்தில்கொண்டு மேற்படி இனரீதியான தாக்குதல்கள் வன்முறைகள் குறித்த ஒரு முறையான, விரிவான அரச அங்கீகாரத்துடனான விசாரணைகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

5. ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் கிறிஸ்த்தவ சமூகத்தவர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டாலும் அதன் பின்னரான சூழ்நிலைகளில் முஸ்லிம் மக்கள் வெகுவான நீண்டகாலப் பாதிப்புக்களை எதிர்நோக்கினார்கள், எனவே ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் குறித்து முழுமையான விசாரணைகள் நடாத்தப்பட்டு இதன் பின்புலத்தில் இருக்கின்றவர்கள் சட்டத்தின் முன் முழுமையாக நிறுத்தப்பட்டு உரிய தண்டனைகள் பெற்றுக்கொடுக்கப்படுத்தல் வேண்டும் என்பதோடு இதன்மூலம் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நீதி வழங்கப்படுதல் வேண்டும்.

6. இலங்கை முஸ்லிம் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த காணிகள், விவசாய நிலங்கள், வர்த்தக நிலையங்கள், வணக்கஸ்தலங்கள், பொதுக்காணிகள் கடந்த 20 வருடங்களாக அரசாங்கத்தினால், அரச நிறுவனங்களினால், தனியாரினாலும் பலவந்தமாக அபகரிக்கப்பட்டிருக்கின்றன இதைக்குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவை மீளவும் அதன் உண்மையான உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படல் வேண்டும்.

7. இலங்கையின் கடந்த 20வருட கால அரசியல் செயற்பாடுகளில் ஆட்சியதிகாரத்தில் இருந்த ஆளும்தரப்பினரால் பல்வேறு முறைகேடுகள், ஊழல்மோசடிகள், பொருளாதார விரயங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன இவற்றில் ஈடுபட்ட அனைத்து அரசியல்வாதிகள் விடயத்திலும் முறையான விசாரணைகளும் சட்ட நடவடிக்கைகளும் உறுதி செய்யப்படுதல் வேண்டும்.

8. இலங்கை மக்களுக்கு நலன்தரும்விதமாக நீதி, கல்வி, சுகாதார, சமூக, பொருளாதார,அபிவிருத்தி, , விவசாய, கடல்தொழில், பெருந்தோட்டத்துறை,கணியவளங்கள், விளையாட்டு கலை கலாசார, பெண்கள் சிறுவர் நலன்கள், வெளியுறவுக்கொள்கைகள், பாதுகாப்பு, , தொழிநுட்பம், தகவல் தொழில்நுட்பம், ஊடகம், போன்ற அனைத்து அம்சங்களிலும் முறைப்படியான மறுசீரமைப்புகள் முன்னெடுக்கப்படுத்தல் வேண்டும்.

9. இலங்கையில் முறையான அதிகாரப்பரவலாக்கம், மற்றும் அதிகாரப்பகிர்வுகள் மேற்கொள்ளப்பட்டு மாகாணசபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் வினைத்திறனுடன்கூடியதாக செயற்படுவதனை உறுதி செய்தல் வேண்டும்.

10. ஒவ்வொரு நாட்டிலும், அங்கு வாழும் சிறுபான்மையினருக்கு தனியார் சட்டங்கள் போன்ற தனி சட்டங்கள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. இலங்கையில் முஸ்லிம்களுக்கும் தனியான தனிப்பட்ட சட்டங்கள் உள்ளன, அவை செம்மைப்படுத்தப்பட வேண்டும். எனினும் அவை முஸ்லிம் சமூகத்தின் பூரண பங்களிப்புடன் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.

11. இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் மற்றும் தவறான புரிதல்களைத் தீர்ப்பதற்கான நல்லிணக்கப் பொறிமுறையொன்று முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இலங்கை மக்கள் மத்தியில் சமாதானமும் சகவாழ்வும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

12. அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக தளங்கள் இரண்டையும் மேற்பார்வையிடுவதற்கான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை நாம் செயல்படுத்த வேண்டும், அவை இன பதட்டங்களைத் தூண்டுவதையோ அல்லது இன வெறுப்பை ஊக்குவிப்பதையோ தவிர்ப்பதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல், வெறுப்பைத் தூண்டுவதற்கும் வன்முறையைத் தூண்டுவதற்கும் பதிலாக, இன நல்லிணக்கம் மற்றும் சமூகங்களுக்கிடையில் அமைதியை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட மத நிறுவனங்களுக்கு ஒழுங்குமுறை நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.

 

SLMEC- Sri Lanka Muslim Expatriates’ Council என்பது கனடாவில் அமைந்துள்ள இலங்கை முஸ்லிம் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு முக்கிய செயலணியாகும் மனித உரிமைகளை பாதுகாத்தல், மேம்படுத்தல், நல்லாட்சி, ஊழலற்ற நடைமுறைகள் மற்றும் இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்தல் இனங்களுக்கிடையிலான சகவாழ்வை உறுதிசெய்தல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் அவை தொடர்பான மதிப்பீடுகளை முன்னெடுத்தல் போன்றன எங்கள் செயற்பாட்டு நோக்கங்களாகும். இலங்கைச் மக்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக நாங்கள் உழைக்கின்றோம்.

எமது கொள்கைகளுடன் இணைந்து, வளர்ந்து வரும் சக்தி என்ற வகையில், இலங்கையை நல்லாட்சியை நோக்கி வழிநடத்தும் ஆற்றலை தேசிய மக்கள் கட்சி கொண்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *