சாய்ந்தமருதில் இடம்பெற்ற உலகக் காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம்..!
உலக காசநோய் தினம் மார்ச் மாதம் 24 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு இவ் ஆண்டு (2024) அனுஷ்டிக்கும் முகமாக சம்மாந்துறையில் அமைந்துள்ள கல்முனை பிராந்திய மார்பு நோய் சிகிச்சை நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காச நோய் சம்பந்தமான விழிப்புணர்வு ஊர்வலம் (23) சனிக்கிழமை சாய்ந்தமருதில் இடம்பெற்றது. கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி சகீலா இஸ்ஸதீனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில், காசநோய் சம்பந்தமாகவும், சமூகத்தில் காசநோயைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படவேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் மக்களுக்கு மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கான ஒரு செயற்பாடாகவே இவ்வூர்வலம் இடம்பெற்றது. “காசநோயற்ற கல்முனைப் பிராந்தியத்தை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வானது சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் முன்னால் ஆரம்பித்து பிரதான வீதி வழியாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் விதமாக வலம்வந்து சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் முடிவடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இதன்போது வைத்தியர்கள், சுகாதாரப் பரிசோதகர்கள், தாதிமார்கள், சுகாதார ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)