உள்நாடு

அடுத்த கட்ட கடனை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம்

இலங்கைக்கான அடுத்த கட்ட கடன் திட்டம் தொடர்பாக இலங்கை சர்வதேச நாணயநிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இலங்கைக்கு வருகைத் தந்துள்ள சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள், நேற்று (21) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூயர், ”சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்தவுடன் இலங்கைக்கு 337 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி விடுவிக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையின் பொருளாதார திட்டங்கள் பலனளிக்க ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கை நடைமுறைப்படுத்தியிருக்கும் பொருளாதார மறுசீரமைப்புக்கான வேலைத் திட்டத்தின் பிரதிபலன்கள் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளதாகவும், அதனூடாக சாதகமான முன்னேற்றத்தை அடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்படி, இலங்கையின் பணவீக்கம் எதிர்பார்த்ததை விடவும் வேகமாக குறைந்துள்ளதாகவும் அதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை பாராட்டுவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் பிரதானி தெரிவித்துள்ளார்.

மேலும், நிதி அமைப்பின் ஸ்திரதன்மையை பேணும் அதேவேளை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூயர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *