டுபாய் ஸஹீடா அனுசரணையில் தெமட்டகொட ஹைரியாவுக்கு நான்கு மாடிக் கட்டிடம்..!
தெமடகொட ஹைரிய பெண்கள் கல்லூரி மாணவிகளின் வகுப்பறை பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் கல்வி அபிவிருத்திக்கான வளங்கள் எனும் திட்டத்தின் கீழ் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நவ்சர் பௌசியின் ஏற்பாட்டில் ஐக்கிய அறபு இராட்சியத்தின் ஸஹீடா பவுண்டேசனின் அனுசரணையில் சுமார் 11 கோடி ரூபா செலவில் நான்கு மாடி கட்டிடம் ஒன்றை அமைக்கும் வகையில் அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் (17) பாடசாலையின் அதிபர் திருமதி நஸீரா ஹஸனார் தலைமையில் இடம் பெற்றது.
தெமடகொட அல்-ஹிஜ்ரா வித்தியாலயத்தினால் அதன் வளாகத்தில் வழங்கப்பட்ட 40 பேர்ச்சஸ் காணியிலேயே குறித்த நான்குமாடிக் கட்டிடம் அமைய இருக்கின்றது.
அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம்.பௌசி கலந்து கொண்டிருந்தார். கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் அமைச்சர்களுமான றிஸாத் பதியுதீன், மனோ கணேசன், ரவி கருணாநாயக்கா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால, முன்னாள் கொழும்பு மேயர் அஸாத் சாலி, அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபைத் தலைவர் றிஸ்வி முப்தி, கொழும்பு வலயக் கல்விப் பணிப்பாளர், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் இக்பால் , ஏனைய நலன் விரும்பிகள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள், பாடசாலையின் பழைய மாணவிகள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது பிரதம அதிதி நினைவுத் தூபியை திறந்து வைத்ததுடன் அவர் உட்பட ஏனைய அதிதிகளும் கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டினர்.
அத்துடன் முதற். கட்ட நிதியை காசோலை மூலம் அதிதிகள் பாடசாலை அதிபரிடம் வழங்கி வைத்ததுடன் பிரதம அதிதி க்கும் நவுசர் பெளசிக்கும் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலையின் 142வது ஆண்டு நிறைவு நேரத்தில் இது கிடைத்துள்ளமை மகிழ்ச்சியான ஒரு விடயம் என்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனிஸ்ட பிரிவு மாணவர்கள் இடவசதியின்றி இருந்த நிலையில் புதிய கட்டிடம் அவர்களின் இடப் பற்றாக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் அமைவதாகவும் பாடசாலை அதிபர் தெரிவித்து இதற்காக உதவிய நவ்சர் பௌசி உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்தார்.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)