உள்நாடு

ஜனித் லியனகேயின் சதத்தால் வங்கதேசத்திற்கு 236 ஓட்டங்கள் இலக்கு..!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் ஜனித் லியனகேயின் கன்னிச் சதத்தின் உதவியுடன் 236 ஓட்டங்களை பங்களாதேஷ் அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை அணி.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றிருந்தது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3ஆவதும் இறுதியுமான போட்டி இன்று பகல் போட்டியாக சிட்டகொங் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தேர்வு செய்தது.

இதற்கமைய துடுப்பாடிய இலங்கை அணிக்கு முன் வரிசை வீரர்கள் ஓட்டங்களை பெற்றுக் கொடுக்கத் தவறினர்.

இருப்பினும் மத்திய வரிசையில் வந்த ஜனித் லியனகே தனி ஆளாய்ப் போராடி ஒருநாள் சர்வதேச அரங்கில் தனது கன்னி சதத்தை விளாசி 101 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க இலங்கை அணி 50 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அடுத்து அதிகபட்ச ஓட்டமாக சரித் அசலங்கவின் 37 ஓட்டங்கள் பதிவாகியது. பந்து வீச்சில் டஸ்கின் அஹமட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப் போட்டியில் வெற்றி பெற்று இத் தொடரை வெல்ல பங்களாதேஷ் அணி 236 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *