தொடரை தீர்மானிக்கும் போட்டியில் டில்ஷான் மதுஷங்க விளையாடமாட்டார்
பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியின் போது உபாதைக்குள்ளான இலங்கை அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான டில்ஷான் மதுஷங்க நாளை இடம்பெறவுள்ள தொடரை தீர்மானிக்கின்ற 3ஆவதும் இறுதியுமான போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பங்களாதேஷ் சென்று மூவகைத் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ரி20 தொடர் நிறைவு பெற்றிருக்க , 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகள் நிறைவடைந்ததுள்ளது. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற 2ஆவது போட்டியில் இலங்கை அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான டில்ஷான் மதுஷங்க தனது 7ஆவது பந்துவீச்சு ஓவரை வீசுகின்ற போது கால் உபாதைக்குள்ளானார்.
இதனால் அவர் மைதானத்தலிருந்து வெளியேறியிருந்தார். இந்நிலையில் இவ் உபாதையால் அவர் அடுத்த சில வாரங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் நாளை இடம்பெறவுள்ள தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3ஆவதும் , இறுதியுமான ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்பது கேள்விக்குறியானமையால் அது இலங்கை அணிக்கு மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்கும்.
கடந்த இரு போட்டிகளிலும் முதல் ஓவரிலே டில்ஷான் மதுஷங்க விக்கெட்டுக்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. மேலும் டில்ஷான் மதுஷங்கவிற்கு பதிலாக சகலதுறை வீரரான சம்மிக கருணாரத்ன ஆடும் பதினொருவர் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கலாம்.
(அரபாத் பஹர்தீன்)