முஸ்லிம் அதிகாரிகளுக்கு வெட்டு, கிழக்கு ஆளுநர் பக்கச் சார்பு. – இம்ரான் எம்.பீ கவலை
கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் அதிகாரிகளுக்கெதிரான விரோதப் போக்கு தொடர்ந்து வருகின்றது. கட்டங்கட்டமாக முஸ்லிம் அதிகாரிகள் ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர். இவ்வாறான நிலைமை தொடர்நதும் நீடிக்குமாக இருந்தால் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் அதிகாரிகள் எவரும் பணி புரிய முடியாத நிலை ஏற்படலாம் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அச்சம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவதுஇ”கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளில் இருந்த முஸ்லிம் அதிகாரிகள் ஆளுநரால் அகற்றப்பட்ட செய்தியை ஏற்கனவே நான் பகிரங்கப்படுத்தியிருந்தேன். அந்த வரிசையில் தற்போது இலங்கை கல்வி நிர்வாக சேவை மூத்த அதிகாரி ஒருவர் எவ்வித பதவியும் வழங்கப்படாது இடமாற்றப்பட்டிருக்கிறார். கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் 5 அமைச்சுக்களில் இரண்டு தமிழ் செயலாளர்களும், இரண்டு முஸ்லிம் செயலாளர்களும், ஒரு சிங்கள செயலாளரும் பணியாற்றி வந்தனர். இந்த மாகாணத்தின் இனச் சமநிலையைக் கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த வரிசையில் கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றிய சிரேஷ்ட கல்வி நிர்வாக சேவை அதிகாரியின் பதவி பறிக்கப்பட்டு எந்தவித பதவியும் வழங்கப்படாது அவர் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு உடன் செயற்படும் வண்ணம் இடமாற்றப்பட்டுள்ளார். அமைச்சு செயலாளர் பறிப்பு வரிசையில் இது மற்றுமொரு முஸ்லிம் பதவி பறிப்பு சம்பவமாகும். கிழக்கு மாகாணத்தில் சமீப காலமாக அரங்கேற்றப்படும் முஸ்லிம் விரோதப் போக்குகளின் மற்றுமொரு சம்பவம் இதுவாகும். நிலைமை இப்படியே நீடிக்குமாக இருந்தால் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அதிகாரிகள் எவரும் பணி புரிய முடியாத நிலைமை ஏற்படுத்தப்படலாம்.
தற்போது கிழக்கு மாகாணத்தில் எந்த ஒரு அமைச்சிலும் முஸ்லிம் செயலாளர்கள் இல்லை. முதலமைச்சு, சுகாதாரம், வீதி அபிவிருத்தி ஆகிய 3 அமைச்சுக்களிலும் தமிழ் செயலாளர்களும், கல்வி மற்றும் விவசாயம் ஆகிய இரண்டு அமைச்சுக்களிலும் சிங்கள செயலாளர்களும் கடமை புரிகின்றனர். இது இந்த மாகாணத்தில் வாழ்கின்ற ஒட்டு மொத்த முஸ்லிம் சமுகத்தின் பிரதிநிதித்துவத்தையும் கொச்சைப்படுத்துகின்ற செயற்பாடாகும். எனினும், எந்த அரசியல் தலைமையும் இதனைக் கண்டு கொண்டாதாகத் தெரியவில்லை.
ரணில் – ராஜபக்ச ஆட்சியில் முஸ்லிம் விரோதப் போக்கு இன்னும் தொடர்கின்றது என்பதற்கு இவை சிறந்த உதாரணங்களாகும். எனவே. கிழக்கு மாகாண முஸ்லிம் சமுகம் விழித்தெழ வேண்டிய அவசர நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் அரசியல் தலைமைகள் முஸ்லிம் சமுகத்தின் உரிமைகள் தொடர்பாக பேசுவார்கள் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்பது இவற்றின் மூலம் தெளிவாகத் தெரிகின்றது.
எனவே, முஸ்லிம் சிவில் சமுக செயற்பாட்டாளர்கள், புத்தி ஜீவிகள் மற்றும் உலமாக்கள் என அனைவரும் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விடயங்கள் சமுக மயப்படுத்தப்பட வேண்டும். அதன் மூலம் முஸ்லிம் சமுகம் இந்த அநீதிகளுக்கெதிராக ஒன்றுபடவேண்டும். முஸ்லிம் அதிகாரிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.’ என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குறிப்பிட்டார்.