உள்நாடு

சிறைக் கைதிகளுக்காக வருடாந்தம் 4 பில்லியன் செலவு.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 107 புதிய சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிந்ததாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டில் கைதிகளின் உழைப்புடன் விவசாயம் மற்றும் கைத்தொழில் துறை மூலம் 116 மில்லியன் ரூபா வருமானத்தைப் பெற முடிந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (14) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் கூறியதாவது: ”2022ஆம் ஆண்டு 29 புதிய சட்டமூலங்களையும், 2023ஆம் ஆண்டு 78 புதிய சட்டமூலங்களையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிந்தது. அதன்படி, 107 சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. நீதி அமைச்சின் வரலாற்றில் இக்காலப்பகுதியிலே அதிக எண்ணிக்கையிலான சட்டமூலங்கள் திருத்தப்பட்டுள்ளன.

மேலும், சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை நாட்டுக்குப் பயனுள்ள குழுவாக மாற்ற முடிந்தது. அரசு மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடன், சிறைச்சாலைகளுக்குள்ளேயே கைதிகள் தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன்படி வெலிக்கடை, மஹர மற்றும் அகுனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளில் இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் பாதணிகள், நுளம்புச் சுருள்கள் உள்ளிட்ட பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

மேலும், வீட்டுக் காவலில் வைப்பதன் மூலம் தண்டனைக் காலத்தை நிறைவு செய்வதற்கான வாய்ப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்காக உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எமக்கு கிடைத்துள்ளது. நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். இது தற்போது சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த வருடத்தினுள் அதனைச் சட்டமாக்க முடியும் என நம்புகிறோம். இதன் ஊடாக சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல் மற்றும் உணவுப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

சிறைக் கைதிகளுக்காக வருடத்திற்கு 04 பில்லியன் ரூபா செலவிட வேண்டியுள்ளது. 12000 கைதிகள் இருக்க வேண்டிய சிறைகளில் தற்போது 30இ793 கைதிகள் உள்ளனர். இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண, பிணைச் சட்டம் போன்ற பல சட்டங்களில் திருத்தம் செய்யப்பட உள்ளன.

மேலும், 2023 ஆம் ஆண்டில், விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளின் கைதிகளின் பங்களிப்பின் மூலம் 116 மில்லியன் ரூபாவை சம்பாதிக்க முடிந்தது. 2024 ஆம் ஆண்டில் 92572967 ரூபா லாபம் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், போதைக்கு அடிமையாகி சிறையில் இருக்கும் கைதிகளுக்கு முறையான மறுவாழ்வு வழங்கவும் திறன் அபிவிருத்தி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள சமூக சீர்திருத்தக் கட்டமைப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். 2023 ஆம் ஆண்டில், 14026 பேர் அந்தத் திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். 2024இல் இந்த எண்ணிக்கை 15000 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்ட கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க கந்தளாய் சீனி தொழிற்சாலைக்குச் சொந்தமான 22 கட்டிடங்களும் 22 ஏக்கர் காணியும் சுவீகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் வவுனியா பிரதேசத்தில் 06 ஏக்கர் காணி பெண்களுக்கான ஒருங்கிணைந்த புனர்வாழ்வு நிலையத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், நீதித்துறை மற்றும் பொதுமக்களுடனான உறவை வளர்க்கஇ கிராம சேவகர் பிரிவுகளில் நல்லிணக்கக் குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கும் வகையில் சர்வமத ஆலோசனைக் குழுக்கள் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் சுகாதார அமைச்சுடன் இணைந்து பல கூட்டு வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி, தொற்று நோய்களுக்காக ஒதுக்கப்பட்ட மட்டக்களப்பு மாந்தீவை சிறைச்சாலை திணைக்களத்திடம் ஒப்படைக்க சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது. அதை மறுவாழ்வு மற்றும் விவசாய நோக்கங்களுக்காக பயன்படுத்த எதிர்பார்க்கிறோம்.” என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *