உலகம்

இலங்கையிலிருந்து 9,742 பேர் தாயகம் திரும்பியோர்களுக்கு கடன் அடமான ஆவணங்களை திரும்ப வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்  8.3.2024 ஞாயிற்றுக்கிழமை தலைமைச் செயலகத்தில், இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோர்களுக்கு வீடு கட்டுவதற்காக வழங்கப்பட்ட கடனிற்காக அரசிடம் ஒப்புவிக்கப்பட்ட நிலப்பத்திர ஆவணங்களை 9,742 தாயகம் திரும்பியோர்க்கு திரும்ப வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்து, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 3 நபர்களுக்கு அவர்களின் அடமான ஆவணங்களை மீள வழங்கினார்.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியில், இந்தியாவிலிருந்து பர்மா, இலங்கை முதலான பல்வேறு காலனித்துவ ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் வேலை செய்வதற்கு ஒப்பந்த தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்டனர். இவ்வாறு குடிபெயர்ந்தவர்கள் குடிபெயர்ந்த நாடுகளிலேயே தங்கி விட்டனர். ஆனால் அண்டை நாடான இலங்கையில் இவர்கள் நாடற்றவர்களாக இருந்தமையாலும், பல்வேறு காரணங்களுக்காகவும் இவர்கள் தாயகம் வரவேண்டிய சூழல் ஏற்பட்டது.
1964-ஆம் ஆண்டு இந்தியா – இலங்கை இடையே ஏற்பட்ட சிரிமாவோ – சாஸ்திரி உடன்படிக்கையின்படி 5 இலட்சம் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கி, இந்தியாவில் மறுவாழ்வு வழங்குவதாக இந்திய அரசு ஏற்றுக்கொண்டது. 1966-ஆம் ஆண்டு முதல் 1984-ஆம் ஆண்டு வரை இலங்கையிலிருந்து ஏறக்குறைய 5 இலட்சம் பேர் தாயகம் வந்துள்ளனர்.
இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு அப்போதைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் நூற்பாலை மற்றும் சர்க்கரை ஆலைத் திட்டம், வேளாண்மைத் திட்டம், பால்பண்ணைத் திட்டம், பட்டுப்பூச்சி வளர்ப்புத் திட்டம், தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களில் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு தொழில் பயிற்சி அளிக்கும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன. மேலும், இவர்கள் வணிகத்தில் ஈடுபடுவதற்காக ஒவ்வொரு  குடும்பத்துக்கும் ரூ.5,000/- வியாபாரக் கடனும் வழங்கப்பட்டது.
அத்துடன் தாயகம் திரும்பியோர்களுக்கு வீடு கட்டுவதற்காக ஒரு குடும்பத்திற்கு ரூ.6,000/- முதல் ரூ.10,000/- வரை வீட்டுக்கடன் அரசால் வழங்கப்பட்டது. இதற்காக ஏறக்குறைய 25 கோடி ரூபாய் கடனாக அளிக்கப்பட்டது. இக்கடனுதவி பெறுவதற்கு இவர்கள் தமது நில ஆவணங்களை அரசிடம் ஒப்புவித்தனர்.
இவர்களது வறிய நிலையின் காரணமாக பெற்ற கடன்களை திரும்ப செலுத்திட இயலாத நிலையில் இவர்களுக்காக வழங்கப்பட்ட வீட்டுகடன் மற்றும் வணிகக் கடன்களை 1.04.1974 முதல் 1999 வரை இவர்கள் திருப்பிக் கட்டியது போக மீதித்தொகையை அரசு தள்ளுபடி செய்ய முன்வந்தது.  ஆனால் இக்கணக்கை நேர் செய்வதில் 15 வருடங்களுக்கு மேலாக ஒன்றிய அரசின் நிதி மற்றும் உள்துறை அமைச்சகம், தலைமை கணக்கு தணிக்கையாளர் மற்றும் பல்வேறு அலுவலர்களுடன் தமிழ்நாடு அரசு பல்வேறு கடிதத் தொடர்பு மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் தாயகம் திரும்பிய தமிழர்கள் அரசிடம் ஒப்புவித்திருந்த நிலப்பத்திரங்களை திருப்பித் தருமாறும் வேண்டிக்கொண்டனர்.
இது குறித்து  தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது, தாயகம் திரும்பிய தமிழர்களின் நல்வாழ்வு மீது அதிக அக்கறை கொண்டு இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வாக, தாயகம் திரும்பிய தமிழர்களின் ஒப்புவிக்கப்பட்ட நிலப்பத்திரங்கள் முதலான ஆவணங்களை அவற்றில் உள்ள கடன்பதிவுகளை நீக்கம் செய்துவிட்டு சீர்படுத்தி முறையாக உரியவர்களிடம் திரும்ப அளிக்குமாறு ஆணையிட்டார்.
அதன்படி, தாயகம் திரும்பியோர்களுக்கு அவர்கள் பெற்ற கடனுக்காக அடமானம் பெறப்பட்டிருந்த ஆவணங்களை தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்கினார்.
 இதனால் மாநிலம் முழுவதும் உள்ள 9,742 தாயகம் திரும்பிய குடும்பத்தினர் பயன்பெறுவர். மேலும், இதன்மூலம், தாயகம் திரும்பிய தமிழர்கள் அவர்களது பட்டா மாற்றவும், கடன் பெறவும், கடவுச் சீட்டு மூலம் ரெப்கோ வங்கியில் உறுப்பினராகவும் முடியும், ரெப்கோ வங்கியின் சிறப்பு திட்டங்களான கல்வி, மருத்துவம், ஈமச்சடங்கு உதவி, காப்பீட்டு திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்களின் மூலம் பயன்பெற முடியும்.
இந்த நிகழ்ச்சியில்,தமிழக  சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், பொதுத்துறை செயலாளர் க. நந்தகுமார், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர்  பா. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *