உள்நாடு

சபாநாயகர் பக்கச் சார்பு.. அவருக்கு எதிராக வாக்களிப்போம்.. -விஜித ஹேரத் எம் பீ திட்டவட்டம்..!

(தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.03.14)

கேள்வி : சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 19 மற்றும் 20 ஆகிய தினங்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதா?

பதில்: சபாநாயகரின் நடத்தையை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பக்கச்சார்புடையதாகும். பொலீஸ் மா அதிபரை நியமிக்கையில் அவர் நடந்துகொண்டவிதம் முற்றிலும் சட்டவிரோதமானது. தேசபந்து தென்னக்கோனை நியமிக்க நால்வர் ஆதரவாகவும் இருவர் எதிர்த்தும் இருவர் அமைதியாகவும் இருந்தார்கள். அமைதியாக இருந்த இருவரும் எதிரானவர்களென பொருள்விளக்கம் கொடுத்து சபாநாயகரின் வாக்கு அளிக்கப்பட்டது. அது சட்டவிரோதமானது. அந்த நேரத்தில் வாக்கினை அளிக்காமல் பின்னர் கடிதம் மூலமாக அறிவித்திருக்கவேண்டும். சபாநாயகரின் நடைமுறைகள் தொடர்ச்சியாக பக்கச்சார்புடையதாகும். அதனால் அவருக்கு எதிராக நாங்கள் நிச்சயமாக வாக்கினை அளிப்போம்.

கேள்வி : ஐ.எம்.எஃப். கலந்துரையாடலின்போது விடயங்களை முன்வைக்கும்வரை மண்ணில் நிலவுகின்ற யதார்த்தத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லையா?

பதில்: ஒருசில விடயங்களை அறிந்திருக்கவில்லை. கோப் குழுவின் தவிசாளர் பதவிக்கான நியமனம் பற்றி அறிந்திருக்கவில்லை. பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நியமன செயற்பாங்கு பற்றி எம்மிடமிருந்தே அவர்கள் அறிந்துகொண்டார்கள். ஒருசில விடயங்களை அவர்கள் நன்றாகவே உறுதிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். உதாரணமாக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றி அவர்கள் நுவரெலியாவுக்குச்சென்று கற்றாராய்ந்திருந்தார்கள்.

கேள்வி : இலங்கை மக்கள் சிரமத்துடனேயே வசிக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியுமா?
பதில் : நாங்கள் அவர்களுக்கு ஆதாரங்களுடன் எடுத்துரைத்தோம். அவர்கள் விளங்கிகொண்டார்களா என்பதை அவர்ளிடம்தான் கேட்கவேண்டும்.
கேள்வி : உங்கள் ஆட்சியின்கீழ் நிபந்தனைகளை திருத்தியமைக்க அவர்கள் இணங்கினார்களா? அரசாங்கத்திற்கு அரசாங்கம் மாறுகின்ற நிபந்தனைகளை அவர்கள் விரும்புகிறார்களா?

பதில்: இணக்கப்பாடுகள் பற்றிய உரையாடல் இடம்பெறவில்லை. நாங்கள் எமது நிலைப்பாட்டினை தெளிவாக எடுத்துரைத்தோம். ஐ.எம்.எஃப். உடனான கலந்துரையாடல் தொடர்பில் எமக்கு ஆட்சேபனை கிடையாதெனவும் அந்த நிபந்தனைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை சம்பந்தமான விடயங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டுமெனவும் நாங்கள் தெளிவுபடுத்தினோம்.

கேள்வி : நடப்பு அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அவர்கள் திருப்தியடைகிறார்களா?
பதில்: அரசியல் விடயங்கள் பற்றிக் கலந்துரையாடவில்லை. அவர்கள் சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள 129 விடயங்கள் பற்றி பெரும்பாலானோருக்கு புரிந்துணர்வு கிடையாதென அவர்கள் கூறினார்கள். அரசியல் விடயங்கள் பற்றி நாங்கள் கருத்துரைக்கவும் இல்லை. அவர்கள் கருத்துரைக்கவும் இல்லை.

கேள்வி : ஐ.எம்.எஃப். உடன்படிக்கையில் பாதகமான பகுதிகள் இருப்பதாக நீங்கள் கூறினீர்கள். மோசடி ஊழலை ஒழித்தல் மற்றும் விற்றுத் தீர்த்தலுக்கு மேலதிகமாக வேறு நிபந்தனைகளும் இருக்கின்றனவா?
பதில்: 2022 மார்ச்சு மாதம் இரண்டாம் திகதி கைச்சாத்திட்ட நாணய நிதியத்துடனான அடிப்படை புரிந்துணர்வு உடன்படிக்கை ஐந்து பிரதான விடயங்களை அடிப்படையாகக்கொண்ட கொள்கையென அவர்கள் கூறியிருந்தார்கள். வரியை அதிகரித்தலும் வரி நிவாரணங்களை நீக்குதலும், அரசாங்கத்திற்குச் சொந்தமான பொறுப்புமுயற்சிகளை மறுசீரமைத்தல், ரூபாவை மிதக்கவிடுதல், வலுச்சக்திக் கிரயத்தின்பேரில் விலையைத் தீர்மானித்தல் மற்றும் ஊழலுக்கெதிராக போராடுதல். இந்த ஐந்து விடயங்களை அடிப்படையாகக்கொண்டு ஏனைய தொழில்நுட்ப விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் அன்று “பஃஸ்ற் எகேன்ஸ்ற் கரப்ஷன்” எனக் கூறினார்கள். அந்த செயற்பாங்கு நடைமுறையில் அமுலில் இல்லை என்பதை நாங்கள் சுட்டிக்காட்டினோம். உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உள்ளிட்ட வருமானம் பெறக்கூடிய நிறுவனங்களில் பரபரப்பினை ஏற்படுத்தவல்ல ஊழல்கள் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. மதுவரித் திணைக்களத்தின் ஸ்ரிக்கர் மோசடி இன்றும் நடைபெற்று வருகின்றது. மத்தியவங்கி பிணைமுறிக்கு பொறுப்புக்கூறவேண்டிய பிரதான நிறுவனம் இன்றும் வரிமோசடியை பாரியளவில் புரிந்து வருகின்றது. கள்ள ஸ்ரிக்கர் அச்சடிப்பதை இன்றும் நிறுத்த முடியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *