நஜ்முல் மற்றும் முஸ்பிகுரின் இணைப்பாட்டத்தினால் தோற்றுப் போனது இலங்கை..!
சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் அணித்தலைவரான நஜ்முல் ஹுசைன் சான்டோவின் அசத்தல் சதமும் அனுபவ வீரரான முஸ்பிகுர் ரஹீமின் அரைச்சதமும் கைகொடுக்க பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்ததுடன் தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று (13) பகலிரவுப் போட்டியாக சிட்டகொங் மைதானத்தில் இடம்பெற்றது. இப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்திருந்தது.
இதற்கமைய இலங்கை அணியின் ஆரம்ப வீரர்களாகக் களம் நுழைந்த பெத்தும் நிஷங்க மற்றும் அவிஷ்க பெர்ணான்டோ ஜோடி சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தது. இந்த ஜோடி தமக்கிடையில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்திருக்க அவிஷ்க பெர்ணான்டோ 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் பெத்தும் நிஷங்க 36 ஓட்டங்களுடன் வெளியேறினார். பின்னர் எதிர்பார்க்கப்பட்ட சதீர சமரவிக்ரம 3 ஓட்டங்களுடன் ஏமாற்றம் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
இருப்பினும் களத்திலிருந்த அணித்தலைவரான குசல் மெண்டிஸ் ஓட்டங்களை சேர்க்க சரித் அசலங்க 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் களத்திலிருந்த குசல் மென்டிஸ் அரைச்சதம் கடந்து நிலைத்திருக்க 5ஆவது விக்கெட்டில் ஜனித் லியனஹேயுடன் இணைந்து 69 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றிருக்க 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் குசல் மெண்டிஸ். பின்னர் வந்த வீரர்கள் நிலைக்காமல் ஒற்றை இலக்கத்துடன் பெவிலியன் திரும்ப ஜனித் லியனஹே அரைச்சதம் விளாசி 67ஓட்டங்களுடன் வெளியேற இலங்கை அணி 48.5 ஓவர்களில் சகலவிக்கெட்டுக்களையும் இழந்து 255ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் ஸரீபுல் இஸ்லாம், டஸ்கின் அஹமட் மற்றும் டன்ஸிம் சகிப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.
பின்னர் 256 என்ற சவாலான வெற்றி இலக்கினை நோக்கி பதிலளித்த பங்களாதேஷ் அணிக்கு முதல் பந்தில் அதிர்ச்சி கொடுத்த டில்ஷான் மதுஷங்க லிட்டன் தாஸை டக்அவுட் செய்து வெளியேற்றினார். பின்னர் சவ்மியா சர்கார் (3) தவ்ஹிட் (3) என வெளியேற பங்களாதேஷ் அணி 23 ஓட்டங்களுக்கு முதல் 3 விக்கெட்டுக்களையும் இழந்து தடுமாறியது. இருப்பினும் 4ஆவது விக்கெட்டில் அணித்தலைவரான நஜ்முல் ஹுசைன் சான்டோவுடன் இணைந்த முஹம்மதுல்லாஹ் அணியை சரிவிலிருந்து மீட்டார். இந்த ஜோடி 69 ஓட்டங்களைப் பெற்றிருக்க முஹம்மதுல்லாஹ் 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
பின்னர் இணைந்த அணித்தலைவரான நஜ்முல் ஹுசைன் சான்டோவின் அசத்தல் சதமும் அனுபவ வீரரான முஸ்பிகுர் ரஹீம் ஜோடி இலங்கைப் பந்துவீச்சை வெளுத்துக் கட்டியது. இந்த இணைப்பாட்டத்தை பிரிக்க முயன்ற இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு தோல்வியே மிஞ்சியது. இதில் அணித்தலைவரான நஜ்முல் ஹுசைன் சான்டோ சதம் விளாசி (122) நிலைத்திருக்க அனுபவ வீரரான முஸ்பிகுர் ரஹீம் அரைச்சதம் கடந்து (73) அசத்த பங்களாதேஷ் அணி 44.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 257 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்தது. அணித்தலைவரான நஜ்முல் ஹுசைன் சான்டோவின் அசத்தல் சதமும் அனுபவ வீரரான முஸ்பிகுர் ரஹீம் ஜோடி தமக்கிடையில் பிரிக்கப்படாத 165 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. பந்துவீச்சில் டில்ஷான் மதுஷங்க 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
(அரபாத் பஹர்தீன்)