IMF மற்றும் NPP பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைத் தொழிற்பாடுகள் பிரதானி பீற்றர் புறூவர் (PETER BREUER) உள்ளிட்ட குழுவினருக்கும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இன்று (14) முற்பகல் கொழும்பு செங்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது.
ஏறக்குறைய ஒன்றரை மணித்தியாலம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கையின் கடன்மறுசீரமைப்பினதும் மோசடி, ஊழல்களை தடுத்தலுடன் தொடர்புடைய செயற்பாங்குகளினதும் முன்னேற்றம் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு மக்களுக்கு இதுவரை வழங்கப்பட்டிராத தொழில்நுட்ப ஒத்துழைப்பு அறிக்கை பற்றியும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளால் விசாரிக்கப்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்தைப் பிரதிநிதித்துவம்செய்து திரு. பீற்றர் புறூவருக்கு மேலதிகமாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி வதிவிடப் பிரதிநிதி சேர்வத் ஜஹான், கெட்சியரினா ஸ்விட்சென்கா (KATSIARYNA SVIEYDZENKA) மற்றும் மானவீ அபேவிக்ரம ஆகியோரும் உரையாடலில் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம்செய்து தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் முதித்த நாணயக்கார மற்றும் பொருளாதாரப் பேரவையின் அங்கத்தவர்களான பேராசிரியர் அனில் ஜயந்த, பேராசிரியர் சீதா பண்டார, கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும மற்றும் சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோர் பங்குபற்றினர்.