வங்கப் புலிகளை இன்று சிட்டகொங்கில் சந்திக்கிறது இலங்கைச் சிங்கங்கள்
சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு சிட்டகொங் மைதானத்தில் ஆரம்பிக்கின்றது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூவகை கிரிக்கெட் தொடரில் 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் நிறைவடைந்திருக்க இலங்கை அணி 2:1 என தொடரை கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று ஆரம்பிக்கின்றது. இத் தொடருக்கான குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் இலங்கையில் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக பந்துவீசிய அசித பெர்னாண்டோ உபாதை காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக உபாதையிலிருந்து குணமடைந்துள்ள லஹிரு குமார அணியில் இணைக்கப்பட்டுள்ளார். அதேநேரம் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷெவோன் டேனியலுக்கு பதிலாக பங்களாதேஸ் அணிக்கு எதிரான ரி20 போட்டிகளில் பிரகாசிக்க ஆரம்பித்துள்ள கமிந்து மெண்டிஸிற்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவர்களை தவிர்த்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய ஏனைய அனைத்து வீரர்களுக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் காயம் காரணமாக பங்களாதேஸ் அணிக்கு எதிரான ரி20 தொடரில் இணைக்கப்படாமலிருந்த பெத்தும் நிஸங்க இத் தொடரில் பங்கேற்பது சந்தேகமே. மேலும் இன்றைய தினம் இடம்பெறவுள்ள போட்டியில் பங்களாதேஸ் அணியின் சார்பில் அனுபவமிக்க விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான முஸ்பிகுர் ரஹீம் விளையாடுவது அவ் அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும்.
(அரபாத் பஹர்தீன்)