4ஆவது செவிப்புலன் அற்றோர் கிரிக்கெட் உலகக்கிண்ணம் இலங்கையை வீழ்த்தி சம்பியனானது பாகிஸ்தான்
4ஆவது செவிப்புலன் அற்றோருக்கான இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை செவிப்புலன் அற்றோர் அணியை 88 ஓட்டங்களால் வீழ்த்திய பாகிஸ்தான் செவிப்புலன் அற்றோர் அணி சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றி அசத்தியது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த 6ஆம் திகதி ஆரம்பித்த 4ஆவது செவிப்புலன் அற்றோருக்கான இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக்கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியா இ இலங்கைஇ தென்னாபிரிக்காஇ பாகிஸ்தான்இ பங்களாதேஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் செவிப்புலன் அற்றோர் அணிகள் பங்கேற்றிருந்தன.இத் தொடரில் உள்ள அணி மற்றைய 5 அணிகளுடனும் போட்டியிட்டு குழு நிலையில் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் அரையிறுதிக்குத் தெரிவாகும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய முதல் அரையிறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியனான இந்திய செவிப்புலன் அற்றோர் அணியை எதிர்கொண்ட இலங்கை செவிப்புலன் அற்றோர் அணி இலகு வெற்றியைப் பதிவு செய்து முதல் அணியால் இறுதிக்குள் நுழைந்தது. பின்னர் இடம்பெற்ற 2ஆவது அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரெலிய செவிப்புலன் அற்றோர் அணியை வெற்றி கொண்ட பாகிஸ்தான் செவிப்புலன் அற்றோர் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இந்நிலையில் நேற்று (12) இடம்பெற்ற தீர்மானமிக்க இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் செவிப்புலன் அற்றோர் அணிகள் ஒன்;றை ஒன்று எதிர்த்தாடின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் செவிப்புலன் அற்றோர் அணி பாசிட் அப்பாஸி பெற்றுக் கொடுத்த அரைச்சதம் கடந்த 62 ஓட்டங்களின் உதவியுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் ராஜித்த அசங்க மற்றும் சஜித் மகரன்ட ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பின்னர் 152 என்ற சவாலான வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்த இலங்கை செவிப்புலன் அற்றோர் அணிக்கு பாகிஸ்தானின் ஜுபைர் அலி மற்றும் மன்சூர்கான் ஆகியோர் இடையூறு கொடுக்க இலங்கை செவிப்புலன் அற்றோர் அணியால் 16.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 63 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. துடுப்பாட்டத்தில் லக்மால் மற்றும் மல்கம் ஆகியோர் தலா 16 மற்றும் 13 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஜுபைர் அலி மற்றும் மன்சூர்கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இப் போட்டியில் 88 ஓட்டங்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்த பாகிஸ்தான் செவிப்புலன் அற்றோர் அணி சம்பியன் மகுடத்தை தனதாக்கி அசத்தியமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)