ஜப்பானின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவும் இலங்கை கிரிக்கெட்.
இலங்கை கிரிக்கெட் சபை ஜப்பான் கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து ஜப்பான் நாட்டின் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதுடன், அதன் பரிமாற்றங்கள் மற்றும் விளையாட்டு பற்றிய நிபுணத்துவத்தை வழங்கி அந்நாட்டில் கிரிக்கெட்டை மேம்படுத்த உதவுகிற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை கிரிக்கெட் ஜப்பான் கிரிக்கெட்டுக்கு உதவ வீரர்கள், அணிகள், பயிற்சியாளர்கள் மற்றும் கியூரேட்டர்களை அனுப்புவதன் மூலம் ஜப்பானுக்கு உதவும். மேலும் ஜப்பானில் ரி20 போட்டிகளில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபைக்குட்பட்ட அணிகளை அனுப்புவதோடு, ஜப்பானிய கிரிக்கெட் அணிகளையும் இலங்கைக்கு அழைத்து இலங்கைக் கிரிக்கெட் சபைக்குட்பட்ட அணிகளுடன் போட்டியிட வைக்கவுள்ளது. அதே நேரத்தில் ஜப்பான் வீரர்களுக்கு எல்.பி.எல் அணிகளுடன் பயிற்சி பெற வாய்ப்புகள் வழங்கப்படும்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவுக்கும் ஜப்பான் கிரிக்கெட் சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நவோக்கி அலெக்ஸ் மியாஜிக்கும் இடையில் இலங்கை கிரிக்கெட்டின் தலைமையகத்தில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானின் பிரதித் தூதுவர் கொட்டாரோ கட்சுகி, இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா மற்றும் ஜப்பான் கிரிக்கெட் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஜப்பான் கிரிக்கெட் அபிவிருத்திக்கான நல்லெண்ணத் தூதுவர் பிரியந்த காரியப்பெரும ஆகியோர் கலந்துகொண்டனர்.
இலங்கை கிரிக்கெட்டின் சமீபத்திய நடவடிக்கையானது, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உறுப்புரிமை நாடுகளுக்கு உதவும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். அந்தவகையில் கடந்த மாதம் உகண்டா அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து இலங்கை பதினொருவர் அணியுடன் 7 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)