நாரக்கள்ளி ரோ.க.த. மகா வித்தியாலயத்தின் சம்பியன் மகுடத்தை வென்றது சென் செபஸ்டியன் இல்லம்
கல்பிட்டி நாரக்கள்ளி ரோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளின் நடப்பாண்டில் சம்பியன் கிண்ணத்தை சென் செபஸ்டியன் இல்லம் கைப்பற்றியது.
புத்தளம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட கல்பிட்டி கோட்டத்தின் அங்கம் பெற்றுள்ள நாரக்கள்ளி ரோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் கடந்த 26 ஆம் திகதி ஆரம்பித்திருந்தது. அதனடிப்படையில் ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கான குழு போட்டி நிகழ்ச்சிகளான கிரிக்கெட், எல்லே, கரப்பந்தாட்டம், உதைப்பந்தாட்டம் மற்றும் எரிபந்து போன்றன இடம்பெற்றன. பின்னர் முதலாம் திகதியிலிருந்து தனி மற்றும் குழு சுவட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்று வந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்நிலையில் கடந்த 6 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு நடப்பாண்டின் இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் ஜே.எஸ்.ஏ. அமல்ராஜ் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து இடம்பெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு அதீதியாக கல்பிட்டி கோட்டக் கல்விப் பணிமனையின் பணிப்பாளர் திருமதி தீப்தி பெர்ணான்டோ கலந்து சிறப்பித்திருந்தார். அத்துடன் கல்பிட்டி கோட்டக் கல்விப் பணிமனையின் ஆசிரிய ஆலோசகர்கள், ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள் என அதிகமானவர்கள் பங்கேற்றிருந்தனர்.
இப் பாடசாலையின் சென் செபஸ்டியன் மற்றும் சென் அந்தோனீஸ் என 2 இல்லங்கள் போட்டியிட்ட இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் நடப்பாண்டில் சம்பியன் கிண்ணத்தினை 547.5 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட சென் செபஸ்டியன் இல்லம் தனதாக்கிக் கொண்டது. இரண்டாம் இடத்தினை 447.5 புள்ளிகளுடன் சென் அந்தோனீஸ் இல்லமும் பெற்றுக் கொண்டது. இந்நிகழ்விற்கு இப் பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலரும் உதவி செய்திருந்தமை விசேட அம்சமாகும்.
(அரபாத் பஹர்தீன்)