சகலதுறையில் பிரசாகித்த அவுஸ்திரேலியா, நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் சகலதுறையில் பிரகாசித்த அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றதுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2:0 என கைப்பற்றியது.
சுற்றுலா அவுஸ்திரேலிய அணி நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்தது. இதற்கமைய இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலகு வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில் கடந்த 8ஆம் திகதி கிறிஸ்சேர்ச்சில் ஆரம்பித்த 2ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்றது அவுஸ்திரேலிய அணி.
நியூஸிலாந்து அணிக்கு முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை வழங்கி களத்தடுப்பை தேர்வு செய்தது அவுஸ்திரேலிய அணி. இதற்கமைய முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணிக்கு அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்ச்hளர்களான ஹசில்வூட் மற்றும் மிச்சல் ஸ்டார்க் ஆகியோர் இடையூறு கொடுக்க 162 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது நியூஸிலாந்து அணி. துடுப்பாட்டத்தில் டெம் லத்தம் அதிகபட்சமாக 38 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஹசில்வூட் மற்றும் ஸ்டார்க் ஆகியோர் தலா 5 மற்றும் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணிக்கு லபுச்சங்கே தனி ஆளாய்ப் போராடி 90 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க 256 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது அவுஸ்திரேலிய அணி. பந்துவீச்சில் மேட் ஹென்றி 7 விக்கெட்டுக்களை அள்ளிச் சுருட்டினார்.
பின்னர் 94 ஓம்டங்கள் முதல் இன்னிங்ஸ் பின்னிலையுடன் தமது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து அணிக்கு டெம் லெத்தம் (73) , வில்லியம்ஸன் (51), மிச்சல் (58) மற்றம் ரிச்சின் ரவீந்திர (82) என அரைச்சதம் கடந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க சகல விக்கெட்டுக்களையும் இழந்து 372ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் பெட் கமின்ஸ் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதனால் நியூஸிலாந்து அணியால் நிர்ணயிக்கப்பட்ட 279 என்ற வெற்றி இலக்கினை நோக்கி தமது 2ஆவது இன்னிங்ஸை தொடர்ந்த அவுஸ்திரேலிய அணிக்கு முன்வரிசை வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இருப்பினும் மத்திய வரிசையில் வந்த மிச்சல் மார்ஸ் மற்றும் ட்ரவீஸ் ஹெட் ஜோடி அணியின் ஓட்ட வேகத்தை அதிகப்படுத்தியதுடன் வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் சென்றது. இவ்விருவரும் தமக்கிடையில் 140 ஓட்டங்களைப் பகிர்ந்திருக்க மிச்சல் மார்ஸ் 80 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
பின்னர் அரைச்சதம் கடந்து களத்திலிருந்த ஹெட்டுடன் இணைந்த அணித்தலைவரான பெட் கமின்ஸ் 32 ஓட்டங்களை வேகமாக விளாச ஹெட் ஆட்டமிழக்காது 98 ஓட்டங்களைப் பெற்றிருக்க அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 281 ஓட்டங்களைப் பெற்று 3 விக்கெட்டுக்களால் வெற்றியைப் பதிவு செய்ததுடன் தொடரை 2:0 என கைப்பற்றியது. பந்துவீச்சில் பென் சேர்ஸ் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். போட்டியின் நாயகனாக ஹெட்டும் , தொடரின் நாயகனாக ஹசில்வூடும் தெரிவாகினர்.
(அரபாத் பஹர்தீன்)