14ஆவது ஒக்ஸ்போர்ட் ஜனாதிபதி கிண்ணம் – 2024. சென். தோமஸை பந்தாடி சம்பியன் மகுடம் சூடியது ஹமீத் அல் ஹுசெய்னி
கொழும்பு ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரியின் பழைய மாணவர்களாகிய 80 களின் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட இலங்கையின் முன்னனி 20 பாடசாலை உதைப்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான 14ஆவது ஒக்ஸ்போர்ட் ஜனாதிபதி கிண்ணம் -2024 இன் இறுதிப் போட்டியில் பலமிக்க சென் தோமஸ் கல்லூரி அணியை 3:0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சம்பியன் மகுடத்தினை தனதாக்கியது கொழும்பு ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரி.
இலங்கையின் பாடசாலை உதைப்பந்தாட்டத்தில் முன்னனி இடம் வகிக்கும் முதல் 20 பாடசாலை அணிகள் விலகல் முறையில் இடம்பெற்ற இத் தொடரில் பங்கேற்றிருந்தது.
இதனடிப்படையில் முதலாம், இரண்டாம் மற்றும் காலிறுதி ஆட்டங்கள் முடிவில் 4 அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. இதில் முதல் அரியிறுதிப் போட்டியில் நீர்கொழும்பு அல் ஹிலால் கல்லூரி அணியை 6:1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென் தோமஸ் கல்லூரி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.
பின்னர் இடம்பெற்ற 2ஆவது அரையிறுதிப் போட்டியில் 3:0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் கேட்வே சர்வதேச கல்லூரி அணியை வீழ்த்திய ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரி இரண்டாவது அணியாக இறுதிக்குள் நுழைந்தது. இதற்கமைய கடந்த 7ஆம் திகதி கொழும்பு சுகததாச மைதானத்தில் மின்னொலியில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதின.
விறுவிறுப்பிற்குப் பஞ்சமில்லாமல் ஆரம்பித்த போட்டியின் இரு அணி வீரர்களும் கோலுக்கான முயற்சியில் தீவிரம் காட்டினர். இருப்பினும் ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரி வீரர்கள் எதிரணி கோல் கம்பங்களை முழுமையாய் ஆக்கிரமித்ததுடன் தமது தடுப்பை வீரர்களை சிறப்பாக கையாண்டனர். இதனால் போட்டி முடிவில் 3:0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் சென் தோமஸ் கல்லூரி அணியை வீழ்த்திய கொழும்பு ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரி அணி நடப்பாண்டின் சம்பியன் மகுடத்தினை தனதாக்கியது.
இத்தொடரின் 3ஆம் இடத்துக்கான போட்டியில் நீர்கொழும்பு அல் ஹிலால் கல்லூரி அணியை வீழ்த்தி 3ஆவது இடத்தை தனதாக்கியது கேட்வே சர்வதேச கல்லூரி அணி.
(அரபாத் பஹர்தீன்)