நுவன் துஷாரவின் ஹெட்ரிக்கினால் வங்கப்புலிகளுக்கு எதிரான ரி20 தொடரை வென்றது இலங்கைச் சிங்கங்கள்..!
பங்களாதேஷ் அணிக்கு எதிரான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டியில் நுவன் துஷாரவின் ஹெட்ரிக்கின் உதவியுடனும் குசல் மெண்டிஸின் அதிரடியுடனும் 28 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரை 2:1 என கைப்பற்றியது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியும், 2ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணியும் வெற்றி பெற தொடர் 1:1 என சமநிலை பெற்றிருந்தது. இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் 3ஆவதும் இறுதியுமான போட்டி இன்று இலங்கை நேரப்படி மதியம் 2.30 மணிக்கு ஆரம்பித்திருந்தது. இப் போட்டியில் இலங்கை அணியின் தலைவரான வனிந்து ஹசரங்க பொறுப்பேற்றார். மேலும் அவிஷ்க பெர்ணான்டோ, டில்ஷான் மதுசங்க மற்றும் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகிய மதீஷ பத்திரன ஆகியோருக்கு பதிலாக தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்க மற்றும் நுவன் துஷார ஆகியோர் இப் போட்டியில் இலங்கை சார்பில் பங்கேற்றனர்.
இப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாட்டம் வாய்ப்பை இலங்கை அணிக்கு வழங்கியது. இதன்படி களம் நுழைந்த இலங்கை அணிக்கு ஆரம்ப வீரரான குசல் மெண்டிஸ் அதிரடி காட்டி நிலைத்திருக்க மற்றைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இருப்பினும் தனி ஆளாய் போராடிய குசல் மெண்டிஸ் 6 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 86 ஓட்டங்களை விளாசினார். இதனால் இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் டஸ்கின் அஹமட் மற்றும் ரிஷாட் ஹுசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 175 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலளித்த பங்களாதேஷ் அணிக்கு இலங்கையின் வேகப்பந்து வீச்சாளரான நுவன் துஷார இடையூராக இருந்ததுடன் பங்களாதேஷ் அணியின் முன்னனி முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களை தொடராக வீழ்த்தி ஹெட்ரிக் சாதனை படைக்க 32 ஓட்டங்களுக்கு முதல் 6 விக்கெட்டுக்களையும் இழந்து பறிதவித்தது பங்களாதேஷ் அணி.
இருப்பினும் 7 ஆவது விக்கெட்டில் இணைந்த ரிஷாட் ஹுசைன் அதிரடியாக 6 ஓட்டங்களை விளாசி ஆறுதல் கொடுத்து 53 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த டஸ்கின் அஹமட் 31 ஓட்டங்களுடன் இறுதி விக்கெட்டாக வெளியேற பங்களாதேஷ் அணியால் 19.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்து. இதனால் இலங்கை அணி 28 ஓட்டங்களால் வெற்றி பெற்றதுடன் தொடரை 2:1 என கைப்பற்றியது. பந்துவீச்சில் நுவன் துஷார 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை அள்ளிச் சுருட்டினார்.
(அரபாத் பஹர்தீன்)