ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் இன் மகளிர் தின நிகழ்வு- 2024..!
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்த இவ்வருடத்திற்கான 2024 மகளிர் தின நிகழ்வு கடந்த புதன்கிழமை (06) கொழும்பு 7 லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் கலந்து சிறப்பித்தார். வளவாளர்களாக ஈரான் நாட்டிலிருந்து இமாம் சாதிக் பல்கலைக்கழகத்தின் சட்ட நிபுணர் கலாநிதி நிலுபர் மொத்கத்தமி (சூம் செயலி வாயிலாக) விரிவுரை நிகழ்த்தினார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் பரினா ருசைக், மற்றும் திருமதி ஷமிலா துஷாரி ஆகியோரும் விரிவுரை நிகழ்த்தினார்கள். வரவேற்புரையை போரத்தின் தலைவர் என்.எம். அமீன், மற்றும் தலைமை உரையை முன்னாள் தலைவி புர்ஹான் பீபி இப்திகார் நிகழ்த்தினார்கள்.
இங்கு உரையாற்றிய பிரதம அதிதி பேரியல் அஷ்ரப் – இலங்கையில் உள்ள முஸ்லிம் விவாக விவகரத்துச் சட்டம் மீள் பரிசீலிக்கப்பட்டு அவை வலுவான சட்டமாக இயங்காததனால், இலங்கை வாழ் முஸ்லிம் பெண்கள் திருமண உடைவினால் பல்வேறு பிரச்சினைகளை இந்த நாட்டில் எதிர்நோக்குகின்றனர். விவாகரத்து பெற்று பலதார திருமணம் முடிப்பதால் பல்வேறு வகையில் தமது குழந்தைகளுடன் அந்த தாய்மார்கள் தம் பிரச்சினைகளுக்கும் வாழ்வதாரத்திற்கும் முகம் கொடுக்கின்றனர். இவ்வகையான பெண்கள் இந்த நாட்டில் பல்வேறு துன்பங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்து வறுமையினாலும் வாடுகின்றனர். என்பதை விரிவாக விளக்கிக் கூறினார்.
ஜனாதிபதி, மற்றும் பிரதமரிடம் முஸ்லிம் விவாகம் விவாகரத்து பிரச்சினையை பேசும் போது தங்களது சமூகத்தைப் பிரதிநிதிப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை எதிர்க்கின்றதாக கூறுகின்றனர். இவ் விடயத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் மீள் பரிசீலனை செய்து இம் முஸ்லிம் விவாக விவாகரத்துச் திருத்தச் சட்டத்தினை மீள் வரைபு இட்டு அதனை அமுல்படுத்துவதற்கு முன்வருதல் வேண்டும். அதனை நீங்கள்தான் அவர்களிடம் கோரிக்கை விடுத்தல் வேண்டும் எனவும் பேரியல் அஷ்ரப் அங்கு கூறினார்.
இவ்விடயத்தினை நாங்கள் பேசினால் முஸ்லிம் ஷரிஆ சட்டத்தில் நாங்கள் கை வைப்பதாக வசை பாடுவதாகவும் திருமதி.அஷ்ரப் அங்கு கூறினார்.
(அஷ்ரப் ஏ சமத்)