கட்டுரை

நோன்பு “தக்வாவை” ஏற்படுத்துகிறது, “தக்வா” என்றால் என்ன?

உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப் பட்டது போல் நீங்களும் தக்வா உள்ளோராக இருப்பதற்காக உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது (ஸுரதுல் பகரா)

அல்குர்ஆனில் 258 முறைகள் தக்வா என்ற வசனம் பிரயோகிக்கப் பட்டுள்ளதனை காண்கிறோம்.

குறிப்பாக அல்குர்ஆன் மூலம் நேர்வழி பெறுவதற்கான நிபந்தனையாக “தக்வா” குறிப்பிடப்பட்டுள்ளது.

அலிஃப், லாம், மீம். அது வேதநூல், அதில் எவ்வித ஐயமும் இல்லை, அது தக்வா உடையோருக்கே நேர்வழி காட்டும். (ஸூரதுல் பகரா)

தக்வா என்றால் “இறையச்சம்” என எமது முன்னோர்கள் எமது இலகுவான புரிதலுக்காக சுருக்கமாக ஒரு கருத்தினை சொல்லித் தந்திருக்கிறார்கள்.

நன்மையான காரியங்களை செய்வதிலும், பாவமான தீய காரியங்களை தவிர்ந்து நடத்தலிலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளும் உள்ளார்ந்த பக்குவத்தை உள்ளச்சம் இறையச்சம் என்று கற்றுத் தந்திருக்கிறார்கள்.

என்னை அஞ்சிக் கொள்ளுங்கள், உங்களை சுட்டெரிக்கும் நரகை அஞ்சிக் கொள்ளுங்கள் என்ற பிரயோகங்கள் மூலம் அச்சமூட்டி எச்சரிக்கைகள் செய்யப்படுவதால் “இறையச்சம்” என இரத்தினச் சுருக்கமாக சொல்லித் தந்திருக்கிறார்கள்.

அல்குர்ஆனின் இலகுவான பிரயோகங்களை சஹாபாக்கள் அவை அருளப்பட்ட சந்தர்ப்பங்களுக்கேற்ப புரிந்து கொண்டதனால் இறைதூதர் (ஸல்) அவர்களும் அதற்கு விஷேடமான வரைவிலக்கணங்களை தரவில்லை என்றே கூறலாம்.

பொதுவாக அரபு மொழியில் வகா, யகீ, இத்தகா, விகாயஹ் கி, என்ற சொற்கள், காத்தல், தற்காத்தல், பாது காத்தல், பாதுகாப்பு என பிரயோகிக்கப் படுவதனால் ஒருவர் தன்னை ஒரு தீங்கில் தண்டனையில் ஆபத்தில் இருந்து பேணுதலாக அஞ்சி தவிர்ந்து தற்காத்துக் கொள்வதனை தக்வா அஞ்சி அவதானமாக நடத்தல் என எமக்கு சொல்லித் தரப்பட்டுள்ளது.

அத்தகைய அஞ்சி அவதானமாக நடத்தலை அல்லாஹ்வின் கட்டளைகளோடு எச்சரிக்கைகளோடு தண்டனைகளோடு தொடர்புபடுத்தி அல்குர்ஆனும் அல் ஸூன்னாஹ்வும் பிரயோகிப்பதனால் தான் அவ்வாறு இறையச்சம் என இரத்தினச் சுருக்கமாக அவர்கள் எமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள்.

என்றாலும், அல்லாஹ் ரஹ்மானாக, ரஹீமாக, கரீம் ஆக லதீஃபாக காருண்யம் மிக்கவனாகவும் இருப்பதால் அவனை பயங்கரமாக அச்சப்படும் அளவில் மாத்திரம் அறிமுகம் செய்வதாக இறையச்சம் என்ற பிரயோகம் இருந்து விடக் கூடாது என்பதற்காக அறிஞர்கள் இறைபிரக்ஞை என்ற பரந்த ஒரு பொருள் கோடலை செய்கிறார்கள்.

அதாவது எமது வாழ்வின் அனைத்து சிரிய பெரிய விவகாரங்களிலும் இறை திருப்தியை ஆதரவு வைத்தவர்களாக அவனது அதிருப்தியை கோபத்தை அஞ்சி நடப்பவர்களாக சதாவும் அவனது நினைவில் பிரக்ஞையில் வாழ்வதனை தக்வா எனும் சிறப்பு பண்பாக அவர்கள் சொல்லித் தருகிறார்கள்!

அத்கைய தக்வா என்னும் சிறப்பு பண்புடையவர்கள் மறைவான விடயங்களில் ஆழமான நம்பிக்கை விசுவாசம் ஈமான் கொண்டிருப்பார்கள் என ஸூரதுல் பகராவின் ஆரம்ப வசனங்கள் கூறுகின்றன.

அல்லாஹ்வை அவனது வல்லமைகளை, அவனது வானவர்களை, அவனது தூதர்களை, மண்ணறை வாழ்வு, யுக முடிவு கியாமத் நாள், மஹ்ஷர், கேள்வி கணக்கு, நரகம் சுவர்க்கம் என சகல விடயங்களிலும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள்.

அத்தகைய விசுவாசக் கோட்பாடுகளின்
ஒளியில், பின்புலத்தில் ஏற்படும் அவர்களது உள்ளார்ந்த இறையச்சம்/ இறைபிரக்ஞை (தக்வா) பேணுதல், அவதானம், சுய கட்டுக் கோப்பு அவர்களது ஆன்மீக அற நெறிகளின் பண்பாடுகளின் மூல ஊற்றாக அடித்தளமாக அமைந்து விடுகிறது.

புனித ரமழான் மாதம் அத்தகைய தக்வா உடைய மனிதர்களை உருவாக்குவதற்கான பயிற்சிகளையே தருகிறது, அத்தகைய நல்லடியார்களுக்கே இப்புனித மாதத்தில் அருளப்பட்ட அல்குர்ஆன் நேர்வழி காட்டும் என எமக்கு சொல்லித் தரப்படுகிறது.

ஒருவரது தக்வாவை ஆன்மீக அந்தஸ்த்தை எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனால் மாத்திரமே மட்டிட முடியும், ஒருவரின் நோன்பு அவரது தக்வாவில் ஏற்படுத்துகின்ற உள்ளார்ந்த தாக்கத்தை மாற்றத்தையும் அவன் ஒருவனே அறிவான், நோன்பு அல்லாஹ்விற்கும் அடியானுக்கும் இடையில் ஏற்படும் ஆத்மார்த்தமான தொடர்பாடல், அதற்கு அவனே கூலி தரப் போதுமானவன்!

 

 

(மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *