பலஸ்தீன மக்கள் சார்பாக அதிகமான போராட்டங்களை ஏற்பாடு செய்த ஒரேயொரு அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி கட்சியே..! -பொத்துவில் தொகுதி அமைப்பாளர் புகாரி
ஐக்கிய தேசியக் கட்சி பொத்துவில் தொகுதி அமைப்பாளர் லொயிட்ஸ் ஆதம் லெப்பை அவர்கள் சில தினங்களுக்கு முன் பலஸ்தீன மக்களின் மீது கொண்ட கருசனையின் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியையும் அதன் தலைவரினதும் அக்கட்சியின் மகளிர் அணி தலைவி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர அவர்களையும் கட்சியின் செயற்பாடுகளையும் கண்டித்து ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கை மூலம் அவரது சிறுபிள்ளைத்தனமான அரசியல் அறிவினை வெளிப்படுத்தி இருந்தார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் எம்.ஐ.ஏ.ஆர். புகாரி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும், ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுத கதை போன்று தான் ஆதம்லெப்பையின் அறிக்கை உள்ளது. ஏனெனில் அவர் அமைப்பாளராக உள்ள கட்சி பலஸ்தீன இஸ்ரேல் யுத்தத்தில் என்ன நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பதே தெரியாமல் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நிலைப்பாட்டையும் அக்கட்சியின் தலைவர் மற்றும் ஏனையோரையும் அறிக்கை மூலம் கண்டித்துள்ளார். இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம் ஆரம்பித்து நான்கு மாதங்களை கடந்து விட்டது இக்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன என்ன செய்தன என்று தெரியாமல் ஏதோ அவரும் நானும் அரசியல் செய்து கொண்டு இருக்கிறேன் என்ற தொனியில் கண்டன அறிக்கையை விட்டிருந்தார்.
பாலஸ்தீன இஸ்ரேல் யுத்தம் ஆரம்பித்த நாள் முதல் இஸ்ரேலைக் கண்டித்தும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி பல முனைகளில் போராட்டங்களை நடத்தி கொண்டிருக்கிறது. பாராளுமன்றத்தில் பலஸ்தீன மக்கள் சார்பாக அதிகமான முறை பேசிய தலைவர் சஜித் பிரேமதாசா அவர்கள் மாத்திரமே. அவர் பாராளுமன்றத்தில் பலமுறை பேசும் போது பலஸ்தீன மக்களின் அடையாளமாக விளங்கும் அவர்களுடைய சால்வையை அணிந்து கொண்டு சென்று உரயாற்றினார். இந்த செயல்பாட்டின் மூலம் அவரது பலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை உலகம் அறியும்.
அது மாத்திரமல்ல நாட்டின் பலமூலைகளிலும் பலஸ்தீன மக்கள் சார்பாக அதிகமான போராட்டங்களை ஏற்பாடு செய்த ஒரேயொரு அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. அக்கரைப்பற்றில் எமது கட்சியின் தலைவரின் உத்தரவின் பேரில் நான் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் என்ற முறையில் பலஸ்தீன மக்கள் சார்பாகவும் இஸ்ரேலின் அராஜக செயற்பாடுகளை கண்டித்தும் ஒரு பெரிய ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தி இருந்தேன். அந்த வேளையில் நீங்கள் என்ன செய்தீர்கள் ? அல்லது உங்களது கட்சி பாராளுமன்றத்தில் ஏதாவது வாய் திறந்து கதைத்தாத ?என்றும் எமது நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் ஒரு பேரணியை பலஸ்தீன மக்கள் சார்பாக நடத்தியதா ?என்று கூறுங்கள் பார்க்கலாம்.
எமது கட்சியின் மகளிர் அணி தலைவி ஹிருனிகா பிரேமச்சந்திர அவர்களின் பலஸ்தீன நிலைப்பாட்டை விமர்சனம் செய்து கண்டன அறிக்கை விட்டிருந்தீர்கள் அவர் பேசிய பேச்சுக்களை முதலில். விளங்கிக் கொண்டா அறிக்கை விட்டுள்ளீர்கள் அவரது அறிக்கையில் என்ன தவறை கண்டுள்ளீர்கள் என்று முதலில் சொல்லுங்கள். இது உங்களுடைய தனிப்பட்ட கருத்தா அல்லது கட்சியின் கருத்தா என மக்கள் அறிய விரும்புகின்றனர். பலஸ்தீன இஸ்ரேல் யுத்தத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்கிக் கொண்டு இரட்டை வேடம் போடுகிறது. அந்த இரட்டை வேடம் போடும் நாடுகளின் நன்பர்கள் இலங்கையில் யார் பாலஸ்தீன மக்களின் உண்மையான நண்பர்கள். யார் என்பது மக்களுக்கு நன்கு தெரியும் ஆனால் உங்களைப் போன்றோருக்கு அது விளங்க முடியாது இதுதான் உண்மை.
இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தத்தில் பலஸ்தீன மக்கள் சார்பாக ஹூதி போராளிகள் முன்வந்து போராட்டம் நடத்த முற்பட்ட வேளையில் அதனை நசுக்கும் நோக்கில் இரண்டு யுத்த கப்பல்களை அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியாமல் விட்டாலும் மக்கள் அதனை அறிவார்கள். நாட்டின் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ள மறுத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் கால்கள் பிடரியில் அடிக்கக் கூடிய நிலையில் ஓடியதாக ஒரு கருத்தை கூறி இருந்தீர்கள். இந்த நாட்டை குட்டிச் சுவர் ஆக்கியவர்களின் அனுசரணையுடன் நாட்டின் தலைவராக வரக்கூடாது என்பது அவரது நிலைப்பாடு ஆகும். அவர் நேற்று கூறுவதும் இன்று கூறுவதும் நாளை கூறப் போவதும் ஒன்று தான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஆவதே அவரின் உறுதியான கொள்கை ஆகும். வேறு குறுக்கு வழிகளில் ஜனாதிபதி ஆவது அவரது ஆசையல்ல. அவர் சென்ற ஜனாதிபதி தேர்தலில் 54 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாக்குகளைப் பெற்ற ஒரு தலைவரே ஒழிய சென்ற பொது தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு பத்தாயிரம் வாக்குளை பெற முடியாத ஒரு தலைவர் அல்ல. என்று தெரிவித்துள்ளார்.
(நூருல் ஹுதா உமர்)