புத்தளம் கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற “முதற்குடி மகன்” நூல் வெளியீட்டு விழா..!
“புத்தளம் நகரின் கல்வி மேம்பாட்டிற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்த ஒரு தலைவன் புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான கே.ஏ.பாயிஸ்” ஆகும் என வட மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் கால் நடை வளத்துறை பிரதி அமைச்சரும், புத்தளம் நகர பிதாவும், கவிஞருமான மர்ஹும் கே.ஏ. பாயிஸின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களின் தொகுப்பாக அவரின் பிரத்தியேக செயலாளரான எழுத்தாளர் எம்.எஸ் அப்பாஸ் எழுதிய “முதற்குடி மகன்” என்ற நூல் வெளியீட்டு விழா (07) வியாழக்கிழமை மாலை புத்தளம் கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளில் ஒருவராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நூலாசிரியர் எம்.எஸ்.எம்.அப்பாஸ் அவர்களின் புதல்வி மதீஹா அப்பாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம், முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம்.இல்யாஸ், வட மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.டீ.எம்.தாஹிர், புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.எம்.ரபீக், புத்தளம் வலய கல்வி பணிமனையின் ஓய்வு நிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர் இஸட்.ஏ.சன்ஹீர், ஓய்வுபெற்ற பிரதி தேர்தல் ஆணையாளர் முஹம்மது நபீல் உள்ளிட்ட கல்வியியலாளர்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள், அரசியல் பிரமுகர்கள், மர்ஹூம் கே.ஏ.பாயிஸின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் அவர்களினால் நூலாசிரியர் எம்.எஸ்.எம்.அப்பாஸ் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
நூல் அறிமுக உரையினை ஓய்வு நிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர் இஸட்.ஏ.சன்ஹீரும், ஏற்புரையை நூலாசிரியர் எம்.எஸ்.எம்.அப்பாசும் வழங்கினர். நூலிற்கான அட்டைப்படத்தினை புத்தளம் வலய கல்விப்பணிமனையின் சித்திரப் பாடத்துக்கான ஆசிரிய ஆலோசகரும், நாடறிந்த ஓவியருமான எம்.எம்.முஹம்மது வரைந்திருந்தார் .
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.டீ.எம்.தாஹிர், முன்னாள் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக், இந்து மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் எஸ்.நாகராஜா, பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களின் சகோதரர் டாக்டர் ஹபீஸ் ஆகியோரும் இங்கு உரையாற்றினர்.
எஸ்.எச்.எம்.நியாஸ் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
வெறுமனே வீதி அபிவிருத்திகளை மேற்கொள்வதும், வீதி விளக்குகளை பொருத்துவதுமே நகர சபையின் கடமையென்ற மடமையை உடைத்தெறிந்து நகர அபிவிருத்திகளையும், கல்வியிலே புரட்சியையும் நகர சபையினால் ஏற்படுத்த முடியும் என்பதை உணர்வு பூர்வமாக நிரூபித்தவர் மர்ஹூம் கே.ஏ.பாயிஸ்.
புத்தளத்தில் திறந்த பல்கலைக்கழகம், ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரி, சாஹிரா ஆரம்ப பாடசாலை, செய்னப் ஆரம்ப பாடசாலை போன்றவற்றை தோற்றுவிக்க கே.ஏ.பாயிஸோடு அவரின் செயலாளராக கடமையாற்றிய எம்.எஸ்.எம்.அப்பாஸ் அவர்கள் இந்நூலில் வெளியிடுவதை எண்ணி புளகாங்கிதம் அடைகிறேன் என தெரிவித்தார்.
நூலாசிரியரின் மருமகன் இலங்கை வானொலி தென்றல் அலைவரிசை அறிவிப்பாளர் எம்.எஸ்.எம்.பஹூர்தீன் நிகழ்வினை சுவைபட தொகுத்து வழங்கினார்.
(எம்.யூ.எம்.சனூன்)