இன்று இறுதிப் போட்டி: தொடரை வெல்லப்போவது இலங்கையா? பங்களாதேஷா?
இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் முதல் இரு போட்டிகள் முடிவுற்றிருக்க இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வென்று தொடர் 1:1 என சமநிலையில் காணப்பட தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3ஆவதும் இறுதியுமான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
அதற்கமைய இன்றைய தினம் இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு இப் போட்டி ஆரம்பிக்கின்றது. இப் போட்டியின் இலங்கை அணியின் தலைவரான வனிந்து ஹசரங்க செயற்பட்டுள்ளார். இவர் 2 போட்டிகளில் ஐசிசி இனால் தடை விதிக்கப்பட்டமையால் முதல் இரு போட்டிகளில் விளையாடவில்லை. இதனால் உதவித் தலைவரான சரித் அசலங்க தலைவராக இலங்கை அணியை வழிநடாத்தியிருந்தார்.
இந்நிலையில் இன்றைய 3ஆவதும் இறுதியுமான போட்டியிலிருந்து இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான மதீஷ பத்திரன காயம் காரணமாக விலகியுள்ளார். இவருக்கு பதிலாக இன்றைய போட்டியில் மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளரான நுவன் துஷாரவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.
அத்துடன் ஆரம்ப வீரரான அவிஷ்க பெர்ணான்டோ முதல் இரு போட்டிகளிலும் சோபிக்கத் தவறியமையால் அவர் இப் போட்டியில் பங்கேற்பது சந்தேகமே. மேலும் 2ஆவது போட்டியில் பங்கேற்ற வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் இன்றைய போட்டியில் இருந்து நீக்கப்படலாம்.
பங்களாதேஷ் அணியைப் பொறுத்த மட்டில் 2ஆவது போட்டியில் பங்கேற்ற அதே அணியே இப் போட்டியிலும் பங்கேற்கும் என நம்பலாம். காரணம் பங்களாதேஷ் அணி சகலதுறையில் சிறப்பாகப் பிரகாசித்து இருந்தது. ஆகவே தமது சொந்த மைதானத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றுமா பங்களாதேஷ் அணி. அல்லது சொந்த மண்ணில் வங்கப் புலிகளை வீழ்த்தி கிண்ணம் வெல்லுமா இலங்கைச் சிங்கங்கள் என எதிர்பார்த்துக் காத்திருப்போம்.
(அரபாத் பஹர்தீன்)