இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 4:1 என கைப்பற்றியது..!
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிராக 5ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் ஆகிய இரண்டிலும் அசத்திய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ஓட்டங்களால் வெற்றி பெற்றதுடன் தொடரை 4:1 என கைப்பற்றி அசத்தியது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது. இருப்பினும் பின்னர் இடம்பெற்ற 3 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை தன்வசமாக்கியிருந்தது. இந்நிலையில் தொடரின் 5ஆவதும் இறுதியுமான போட்டி 7ஆம் திகதி தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்திருந்தது.
இப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தேர்வு செய்திருந்தது. இதற்கமைய முதல் இன்னிங்ஸில் ஆடிய இங்கிலாந்து அணி 218 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் கேர்வ்லி அதிகபட்சமாக 79 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா (103) , சுப்மன் கில் (110) ஆகியோரின் சதமும், படிக்கல் (65), சர்பராஸ்கான் (56) மற்றும் ஜாய்ஸ்வால் (57) ஆகியோரின் அரைச் சத்தங்களும் கரம் கொடுக்க சகல விக்கட்டுக்களையும் இழந்து 477 ஓட்டங்களைப் பெற்றது இந்திய அணி. பந்து வீச்சில் சொகைப் பசீர் 5 விக்கெட்டுக்களை தனதாக்கினார்.
அதற்கமைய முதல் இன்னிங்ஸில் 259 ஓட்டங்கள் பின்னிலையுடன் தமது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இதனால் வெறும் 195 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்தது. துடுப்பாட்டத்தில் ஜோ ரூட் 84 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார். பந்துவீச்சில் அஸ்வின் 5 விங்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். இதனால் இன்னிங்க்ஸ் மற்றும் 64 ஓட்டங்களால் இலகு வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 4:1 என கைப்பற்றி அசத்தியது. போட்டியின் நாயகனாக குல்தீப் யாதவும், தொடரின் நாயகனாக இரண்டு இரட்டைச் சதங்களை விளாசிய ஜாய்ஸ்வாலும் தெரிவாகினர்.
(அரபாத் பஹர்தீன்)