வெல்லம்பிட்டி சக்ஸஸ் கல்லூரியில் முதன் முறையாக இடம்பெற்ற ரமழான் (2024) வசந்த விழா..!
“புனித ரமழானை மாண்புடன் வரவேற்போம்” எனும் தொனிப்பொருளிலான ரமழான் (2024) வசந்த விழா, வெல்லம்பிட்டி (Success College) சக்ஸஸ் கல்லூரியில், முதன் முறையாக (07) வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை, மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் பாத்திமா சப்ரா தாஹிர் தலைமையில் நடைபெற்ற இவ்விழா நிகழ்வில், கல்லூரியின் பிரதம நிர்வாக அதிகாரிகளில் ஒருவரான எம்.எம். ஜௌபர், பணிப்பாளர் ஹஸ்னி நிஸாம்தீன் உள்ளிட்ட பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் பெருந்திரளான மக்கள் பங்கேற்றனர்.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் இஹ்ஸான் ஏ. ஹமீத் பிரதம அதிதியாகவும், பேரவையின் கொழும்பு – கம்பஹா மாவட்டங்களுக்கான பணிப்பாளர் நஸாரி காமில் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு, ரமழான் வசந்த விழா கண்காட்சிக் கூடத்தைத் திறந்து வைத்ததுடன், ரமழான் வசந்த விழா நிகழ்வுகளையும் பார்வையிட்டனர்.
இச்சிறப்பு விழா நிகழ்வில், கல்லூரி மாணவ மாணவிகளின் புனித ரமழான் பற்றிய உரைகள், கஸீதாக்கள், ஹிப்ழ் மனனம் மற்றும் ரமழான் விழிப்புணர்வு நாடகங்கள் என்பனவும் நடைபெற்றன.
அத்துடன், ரமழான் சம்பந்தமான வினாக்களும் கேட்கப்பட்டு, இதில், அதிகமான வினாக்களுக்கு விடைகளை அளித்த, இக்கல்லூரியில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவி பாத்திமா சாலிஹாவுக்கு, அதற்கான பரிசும் வழங்கப்பட்டது.
ரமழான் உணவு வகைகளைத் தயாரித்து பரிமாறல் மற்றும் சமூகமளிக்கும் அனைத்து தாய்மார் மற்றும் மாணவிகளுக்கும் இலவசமாக “ஹெனா” மருதாணியும் கைகளில் வைத்து அலங்கரிப்புச் செய்யப்பட்டன.
கடந்த 2023 ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரியில், ஆரம்பப் பிரிவு முதல் (க.பொ.த. சா/த) தரம் 11 வரையிலான சுமார் 50 இற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், ஆங்கில மொழி மூலம் மிகவும் ஆர்வத்துடன் கல்வி கற்று வருவதாக, கல்லூரி அதிபர் பாத்திமா சப்ரா தாஹிர், உள்ளம் நிறைந்த குதூகளிப்புடன் தெரிவித்தார். ரமழானின் வருகைக்காக வேண்டியே, நாம் இக்கண்காட்சியையும் விழாவையும் மாணவ மாணவிகளின் பங்களிப்புக்களுடன் முதன் முறையாக ஒழங்கு செய்தோம். எனக்குப் பக்க பலமாக நின்று, கல்லூரி மாணவ மாணவிகள் மிகவும் உற்சாகத்துடன் முழு அளவிலான ஒத்துழைப்புக்களையும் தந்தார்கள். இதற்காக, நான் அவர்களுக்கு எனது நன்றிகளையும் பாராட்டுதல்களையும் மனப்பூர்வமாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.இக்கண்காட்சியும், இங்கு இடம்பெற்ற விழா நிகழ்வுகளும், எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகின்றது. எதிர்காலத்திலும் இதுபோன்ற பயனுள்ள சிறந்த விழா நிகழ்வுகளை, மாணவர்களின் ஆதரவோடு நடாத்த உறுதி பூண்டுள்ளேன் என்றும், கல்லூரி அதிபர் பாத்திமா சப்ரா தாஹிர் நிறைந்த மனதோடு குறிப்பிட்டார்.
இவ்விழா நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )