இலங்கைச் சிங்கங்களுக்கு பதிலடி கொடுத்த வங்கப் புலிகள்
சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் தீர்மானமிக்க 2ஆவது போட்டியில் சகலதுறையில் பிரகாசித்த பங்களாதேஷ் அணி, 8 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியை பதிவு செய்து தொடரை 1:1 என சமன் செய்தது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் முதல் போட்டியில் இலங்கை அணி 3 ஓட்டங்களால் திரில் வெற்றியை பதிவு செய்து தொடரில் முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில், தொடரின் தீர்மானமிக்க 2ஆவது போட்டி நேற்று இலங்கை நேரப்படி மாலை 5.30 மணிக்கு ஆரம்பித்திருந்தது.
இப் போட்டியில் இலங்கை அணி முதல் போட்டியில் விளையாடிய அகில தணஞ்சயவுக்கு பதிலாக, டில்ஷான் மதுசங்கவை களமிறக்கியிருந்தது. இப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி இலங்கை அணியை துடுப்பாடப் பணித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பாடக் களம் நுழைந்த இலங்கை அணிக்கு அவிஷ்க பெர்ணான்டோ டக் அவுட் ஆகி இப்போட்டியிலும் ஏமாற்றினார். இருப்பினும் குசல் மெண்டிஸ் (36) , கமிந்து மென்டிஸ் (37) என தம் பங்கிற்கு ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர். பின்னர் வந்த மெத்யூஸ் ஆட்டமிழக்காமல் 32 , சரித் அசலங்க 28 மற்றும் தசுன் சானக ஆட்டமிழக்காமல் 20 என ஓட்டங்களைச் சேர்த்துக் கொடுக்க இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் சௌமியா சர்கார் 5 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.
பின்னர், சவால் மிக்க 166 என்ற வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு துடுப்பெடுத்தாடக் களம் நுழைந்த பங்களாதேஷ் அணிக்கு லிட்டன் தாஸ் மற்றும் சௌமியா சர்கார் ஜோடி முதல் விக்கெட்டிட்காக தமக்கிடையில் 68 ஓட்டங்களை பகிர்ந்து வெற்றிக்கு வழி வகுத்தனர். இந்நிலையில், லிட்டன் தாஸ் 36 மற்றும் சௌமியா சர்கார் 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த அணித்தலைவரான நஜ்முல் ஹுசைன் சாண்டோ அசத்தல் அரைச்சதம் கடந்து அணியை வெற்றியின் பக்கம் அழைத்துச் சென்றார்.
இதனால் பங்களாதேஷ் அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 170 ஓட்டங்களை பெற்று 8 விக்கெட்டுக்களால் இலங்கைக்கு பதிலடி கொடுத்தது. துடுப்பாட்டதில் நஜ்முல் ஹுசைன் சாண்டோ மற்றும் டவ்ஹீட் ஹிரிடோய் ஆகியோர் ஆட்டமிழக்காமல் தலா 53 மற்றும் 32 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். பந்துவீச்சில் மதீஷ பத்திரன 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இவ்விரு அணிகளுக்கும் இடையிலான தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3ஆவதும் இறுதியுமான ரி20 போட்டி எதிர்வரும் 09 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)