உள்நாடு

“With Visuals அருகி வரும் கலைகளை பொக்கிஷமாகப் பேணிப் பாதுகாக்க வேண்டும்..” -பிரதேச செயலாளர் வி. நிஹாறா

தற்காலத்தில் அருகி வரும் பராம்பரிய சமூக கலாச்சார பண்பாட்டு விழுமியக் கலைகளை பொக்கிஷமாகப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் வி. நிஹாறா தெரிவித்தார்.

திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட பாடநெறிகளை பூர்த்தி செய்த பயிலுநர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை 02.03.2024 ஏறாவூர் பிரதேச வாவிக்கரை கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

கலாச்சார நிலையப் பொறுப்பதிகாரி எம்.எம். மஹ்பூழ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சான்றிதழ்கள் பரிசில்கள் ஆக்கங்கள் வழங்கல் உட்பட தமிழ் முஸ்லிம்களின் பாரம்பரிய கலை கலாச்சார அம்சங்களைப்  பிரதிபலிக்கும் கலை நிகழ்வுகளும் மாணவர்களால்  நிகழ்த்தப்பட்டன.

நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய பிரதேச செயலாளர் நிஹாறா, வாழ்க்கையின் யதார்த்ததத்தை கலை பிரதிபலிக்கின்றது. பிரதேசத்திலுள்ள அருகி வரும் கலை கலாச்சார பண்பாட்டு விழுமிய பாரம்பரிய அம்சங்களைப் பேணிப்பாதுகாத்து  அவற்றை ஆவணப்படுத்தி  ஒன்றிணைத்து எதிர்கால சந்ததியினருக்கு ஒப்படைக்க வேண்டும். அது நமது கடமையும் பணியுமாகும்.

கிராமிய சங்கீதம் கிராமிய நடனம் கிராமிய தற்காப்புக் கலை என்பனவற்றையும் வளர்க்க வேண்டும். இவையெல்லாவற்றையும் ஏறாவூர் கலாச்சார நிலையம் செய்து வருகின்றது. அது பாராட்டத்தக்கது. பிரதேச கலைஞர்களின் வெளியீடுகள் படைப்புக்கள் ஆக்கங்கள் சிறுவர்  நிகழ்வுகள் பாராட்டு நிகழ்;வுகள்  என்பனவும் கலாச்சார நிலையத்தினால் நடத்தப்படுகின்றன.

மேலும், எதிர்காலத்தில் திருமண நல்லிணக்கம் சம்பந்தமான நிகழ்வுகளையும் நடாத்தவுள்ளது வரவேற்கத்தக்கதும் மகிழ்ச்சிக்குரியதுமாகும். சமகாலத்தில் விவாகரத்து அதிகரித்து வருவதால் இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த விழிப்பூட்டல் வேண்டும்.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச உதவிச் செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர், ஏறாவூர் நகர சபையின் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டொக்டர் ஜலீலா முஸம்மில் ஏறாவூர்ப்பற்று கலாச்சார மத்திய நிலையத்தின்  பொறுப்பதிகாரி ஜகனீதா டெஸ்மன் ஆகியோர் உட்பட இன்னும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் வரைகலைஞர் எம்.எச். றிஸ்மியா தலைமையிலான இளம் புத்தாக்குனர்களான சித்தரக் கலைஞர்களால் வரையப்பட்ட ஏறாவூர்  நகர முகப்பு ஓவியம் பிரதேச செயலாளர் தலைமையிலான  அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *