உள்நாடு

மறைந்த ஷஹ்னா ஸப்வானின் ”எரியும் நட்சத்திரம்” நூல் வெளியீடு

சென்ற வருடம் காலஞ்சென்ற இளம் பெண் கவிஞர் ஷஹ்னா ஸப்வான், கவிதைகளைத் தொகுத்து எழுதிய ‘எரியும் நட்சத்திரம்’ எனும் பெயரில், அவரது முகநூல் நண்பர்களான ”இளம் தாரகையின் தூரிகை” குழுவினர் வெளியீட்டு வைத்தனர்.

இவ் வெளியீட்டு விழா (02) சனிக்கிழமை காலை, தர்கா நகர் ஸாஹிராக் கல்லூரி நளீம் ஹாஜியார் மண்டபத்தில் நடைபெற்றது.இந் நிகழ்விற்கு, ”பேனாத் துளிகள்” சஞ்சிகையின் ஆசிரியர் ஏ. ஆர். ரஜா முஹம்மத் தலைமை தாங்கியதுடன், எழுத்தாளரும் மொழி பெயர்ப்பாளரும் ”அரும்பு” இதழ் ஆசிரியரும் ஓய்வு பெற்ற இலங்கை கல்வி நிர்வாக உத்தியோகத்தருமான ஹாபிஸ் இஸ்ஸதீன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

”வலம்புரி” கவிதா வட்டத்தின் தலைவர் ”கலாபூஷணம்” என். நஜ்முல் ஹுசைன் வாழ்த்துரையும், பன்னூலாசிரியையும் ”பூங்காவனம்” சஞ்சிகையின் பிரதம ஆசிரியையுமான ரிம்ஸா முஹம்மத் நூல் விமர்சனமும், இலங்கைத் திறந்த பல்கலைக் கழக வருகைதரு விரிவுரையாளர் ஸுமையா ஷரீப்தீன் இரசனைக் குறிப்பும் வழங்கினர்.

”எரியும் நட்சத்திரம்” கவிதைத் தொகுப்பின் முதற் பிரதியினை, முன்னாள் இலங்கை மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவரும், டாக்டர் ரூமி ஹாஷிம் பவுண்டேஷனின் நிறுவனருமான அல்ஹாஜ் டாக்டர் ரூமி ஹாஷிம் பெற்றுக் கொண்டார். இரண்டாவது பிரதியைஇ ”ஃபைன் கியோ பாமஸியூட்டிகல்” நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அல்ஹாஜ் ஜஸூக் அஹமட் பெற்றுக் கொண்டார்.

கவிஞர் தர்கா நகர் ஸபா, பேருவளை எழுத்தாளர் ஒன்றியத் தலைவர் ரபீஸ் ஹம்ஸா, செயலாளர் பஸ்லி ஹமீட், எழுத்தாளர் இம்தியாஸ் தாசிம், தர்கா நகர் ஸாஹிராக் கல்லூரி அதிபர் எம்.என்.எப். நிஸ்ரின், ஆரம்பப் பாடசாலை அதிபர் எம்.எச்.எம். ஸக்வான், அல் ஹம்றா மகா வித்தியாலய அதிபர் எம்.எப்.எப். பஸ்லியா, தர்கா நகர் முஸ்லிம் மகளிர் மத்திய கல்லூரி அதிபர் பி.எம்.எம். ஜாபிர் ஆகியோர்இ இச்சிறப்பு நிகழ்வில் விசேட அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

நூலாசிரியரின் தந்தை ஏ. எச். எம். ஸப்வான் ஏற்புரையும், நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு அங்கத்தவர் எம். முஸ்னி முர்ஷிட் நன்றியுரையும் வழங்கினர். ஹயா இஸாம், பரீஹா பாரூக் ஆகியோர் கவிதை பாடினர். இச்சிறப்பு நிகழ்ச்சியை, செல்வி அஸ்ஹா லாபிர் தொகுத்து வழங்கினார். இந்நூல் வெளியீடு, பல்வேறு விதத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இந்நூலில் இடம்பிடித்துள்ள கவிதைகளின் சொந்தக்காரியான ஷஹ்னா ஸப்வான், இன்று நம்மோடு இல்லை. கடந்த வருடம் ஜூன் மாதம் இறையடி சேர்ந்திருந்த அவரின் கவிதைகளே நூலுருப் பெற்றிருந்தன. இது போன்றதொரு நூல் வெளியீடுஇ இதற்கு முன்பு நடைபெற்றிருக்குமா என்பது சந்தேகமே.

இம்முயற்சியை மேற்கொண்டவர்கள், ”முகநூல் நட்பு வட்டத்தில்” ஒன்று சேர்ந்த துடிப்பான இளைஞர் யுவதிகளான ”இளம் தாரகையின் தூரிகை” என்ற குழுவினரே.
”இளம் தாரகையின் தூரிகை” குழும அங்கத்தவர்களான பர்ஹானா அப்துல்லாஹ் (மக்கொனை), ஆஷிக் ஹுசைன் (ஹெம்மாத்தகமை), ரஜா முஹம்மத் (அட்டாளைச்சேனை), ஹாஸ்மியா தாஹா (கெக்கிராவை), ஆகிப் நசூர் (கண்டி), பா. ரம்லா ஹிஷாம் (தர்கா நகர்), ஸல்மான் பின் பாரிஸ் (களுத்துறை), முஸ்னி முர்ஷிட் (எஹலியகொடை), ஹஷ்மத் ஹப்னாஸ் (அக்குரணை), இஷ்ரா பர்வின் (தர்கா நகர்), ஹஸனியா இர்பான் (தர்கா நகர்), திக்ரா ஹனீபா (கண்டி), ரிஸ்லா ஹம்ஸா (மன்னார்), நூர் ஷாஹிதா (பதுளை), அதீகா மஷூர் (ஹெம்மாத்தகமை) ஆகிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

இச்சிறப்பு நூல் பிரசுரம், வெளியீட்டு வைபவம் ஆகியவற்றிற்கான செலவுகளை, மறைந்த நூலாசிரியரின் தந்தையின் துணையோடு, குறித்த நண்பர் குழாமே தமது சொந்தச் செலவில் செய்துள்ளது. அது மாத்திரமன்றி, இந்நூல் விற்பனையின் மூலம் கிடைக்கும் முழுத் தொகையும், ”சதகத்துல் ஜாரியா” நன்கொடையாக வழங்கப்படும் என, இக்குழு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(ஐ. ஏ. காதிர் கான்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *