டிவிசன் 2 பாடசாலை உதைப்பந்தாட்ட தொடர்: கொழும்பு ரோயலை பந்தாடிய சம்பியனானது கிண்ணியா அல் அமீன்..!
20 வயதிற்கு உட்பட்ட அகில இலங்கை பாடசாலைகள் பங்கேற்கும் டிவிசன் 2 உதைப்பந்தாட்ட தொடரின் நடப்பு ஆண்டிற்கான இறுதிப் போட்டியில் கொழும்பு ரோயல் கல்லூரி அணியை 3:0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய கிண்ணியா அல் அமீன் வித்தியாலயம் சம்பியன் மகுடத்தினை தனதாக்கியது.
இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் மேற்பார்வையில் 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான டிவிசன் 2 பாடசாலை உதைப்பந்தாட்டத் தொடர் கடந்த மாதம் ஆரம்பித்திருந்தது.
இதில் அனைத்து போட்டிகளும் விலகல் முறையில் இடம்பெற்றிருந்தது. அதற்கமைய முதலாம், இரண்டாம் மற்றும் காலிறுதி சுற்றுக்கள் முடிவில் 4 பாடசாலை அணிகள் அரையிறுதிக்குத் தெரிவாகின.
அதற்கமைய கொழும்பு ரோயல் கல்லூரி, கிண்ணியா அல் அமீன் வித்தியாலயம் , நீர்கொழும்பு அல் பலாஹ் கல்லூரி மற்றும் கிண்ணியா மத்திய கல்லூரி ஆகிய 4 அணிகள் இவ்வாறு டிவிசன் 2 இன் அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவாகின.
அத்துடன் டிவிசன் 2 இல் இருந்து இவ் 4 பாடசாலை அணிகளும் இலங்கையின் முன்னணி பாடசாலை அணிகள் பங்கேற்கும் டிவிசன் 1 தொடருக்கு தமது வருகையை உறுதிப்படுத்தி அசத்தியிருந்தது.
அந்தவகையில் இடம்பெற்ற அரையிறுதி ஆட்டங்களில் கிண்ணியா அல் அமீன் வித்தியாலய அணி, நீர்கொழும்பு அல் பலாஹ் கல்லூரி அணியை 6:1 என்ற கோல்கள் வித்தியாலயத்தில் வெற்றி கொண்டு முதல் முறையாய் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
பின்னர் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் கொழும்பு ரோயல் கல்லூரி அணி கிண்ணியா மத்திய கல்லூரிஅணியை 4:3 என்ற பெனால்டி கோல்களின் அடிப்படையில் வீழ்த்தி இரண்டாம் அணியாக மாபெரும் தீர்மானமிக்க இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இதற்கமைய கிண்ணியா அல் அமீன் வித்தியாலய அணிக்கும் , கொழும்பு ரோயல் கல்லூரி அணிக்கும் இடையிலான தீர்மானமிக்க இறுதிப் போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு சுகததாச மைதானத்தில் மைதானம் முழுக்க ரசிகர்கள் புடைசூழ இடம்பெற்றது. ஆரம்பம் முதலே கிண்ணியா அல் அமீன் வீரர்களின் கால்களில் பந்து அதிகமாகக் காணப்பட்டது. இதனால் முதல் பாதி 2:0 என கிண்ணியா அல் அமீன் வசமானது.
தொடர்ந்து இடம்பெற்ற 2ஆவது பாதி ஆட்டத்தில் ரோயல் கல்லூரி வீரர்களின் தடுப்புக்களைக் கடந்து அனல் பறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய கிண்ணியா அல் அமீன் வித்தியாலய அணி 3 கோல்களையும் உட்செலுத்தி ஆட்டத்தை 3:0 என நிறைவு செய்தனர். இதனால் தீர்மானமிக்க இறுதிப் போட்டியில் இலகு வெற்றி பெற்ற கிண்ணியா அல் அமீன் வித்தியாலய அணி 20 வயதுக்குட்பட்ட டிவிசன் 2 பாடசாலை உதைப்பந்தாட்டச் சம்பியன் மகுடத்தினை தனதாக்கியது.
இறுதிவரை போராடிய கொழும்பு ரோயல் கல்லூரி இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது. இப்போட்டிக்கு முன்னர் இடம்பெற்ற 3ஆம் இடத்துக்கான போட்டியில் நீர்கொழும்பு அல் பலாஹ் கல்லூரி அணியை வீழ்த்திய கிண்ணியா மத்திய கல்லூரிஅணி 3ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)