விளையாட்டு

வங்கப் புலிகளை போராடி வீழ்த்திய இலங்கையின் சிங்கப்படை..!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் முதல் போட்டியில் 3 ஓட்டங்களால் போராடி வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் முதல் போட்டி இன்று இலங்கை நேரப்படி மாலை 5.30 மணிக்கு ஆரம்பித்திருந்தது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடக் களம் நுழைந்த இலங்கை அணியின் ஆரம்ப வீரரான அவிஷ்க பெர்ணான்டோ 4 ஓட்டத்துடனும், 3ஆம் இலக்க துடுப்பாட்ட வீரரான கமிந்து மென்டிஸ் 19 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தனர். இருப்பினும் 3 ஆவது விக்கெட்டில் இணைந்த குசல் மெண்டிஸ் மற்றும் சதீர சமரவிக்ரம ஜோடி அணியின் ஓட்ட வேகத்தை அதிகரித்துடன் தத்தமது அரைச்சதங்களையும் விளாசி தமக்கிடையில் 96 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். குசல் மெண்டிஸ் 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் களத்திலிருந்து சதீரவுடன் இணைந்த அணித்தலைவரான சரித் அசலங்க அதிரடி காட்டி அசத்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 206 ஓட்டங்களைப் பெற்று கொண்டது. சதீர சமரவிக்ரம 61 ஓட்டங்களுடனும், சரித் அசலங்க 44 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்திலிருந்தனர். பந்துவீச்சில் ரிஷாத் ஹுசைன் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

பின்னர் 207 என்ற கடின இலக்கை விரட்ட பதிலுக்கு களம் நுழைந்த பங்களாதேஷ் அணியின் முன்வரிசை வீரர்களை அஞ்சலோ மெத்யூஸ் விரைவில் பெவிலியன் அனுப்பி வைத்தார். இதனால் தடுமாறிய பங்களாதேஷ் அணிக்கு 4 ஆவது விக்கெட்டில் இணைந்த அனுபவமிக்க மஹ்மதுல்லாஹ் மற்றும் ஜாகிர் அலி ஜோடி அதிரடி இணைப்பாட்டத்தை வழங்கியது. இந்த ஜோடி தமக்கிடையில் 47 ஓட்டங்களை பெற்றிருக்க மஹ்மதுல்லாஹ் 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் களத்திலிருந்த அறிமுக வீரரான ஜாகிர் அலி 6 ஆறு ஓட்டங்களை விளாசி இலங்கை அணிக்கு தோல்வி பயத்தைக் காட்டினார். இவர் 6 ஆவது விக்கெட்டில் மஹதி ஹசனுடன் இணைந்து 65 ஓட்டங்களை பகிர்ந்ததுடன் 68 ஓட்டங்களை விளாசி வெளியேற பங்களாதேஷின் வெற்றிக் கனவு களைந்தது. இறுதியில் தசுன் சானக சிறப்பான இறுதி ஓவரை வீச பங்களாதேஷ் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்து. இதனால் இலங்கை அணி 3 ஓட்டங்களால் போராடி வென்று தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது. பந்துவீச்சில் மெத்யூஸ், பினுர மற்றும் தசுன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

(அரபாத் பஹர்தீன்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *