வங்கப் புலிகளை வேட்டையாடுமா இலங்கைச் சிங்கங்கள்.. முதல் வேட்டை இன்று
சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரின் முதல் போட்டி இன்று இலங்கை நேரப்படி மாலை 5.30 இற்கு இடம்பெறவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூவகைப் போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடர் இன்று (4) , 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் சஸல்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. பின்னர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் ஆகியன இடம்பெறவுள்ளன.
அதற்கமைய இன்றைய முதலாவது இருபதுக்கு இருபது போட்டியானது இரு அணிகளின் தலைவர்களான சரித் அசலங்க மற்றும் நஜ்முல் ஹுசைன் சாண்டோ ஆகியோர் அணித்தலைவர்களாக பங்கேற்கும் முதல் சர்வதேச போட்டியாகும். இலங்கை ரி20 அணியின் தலைவரான வனிந்து ஹசரங்கவுக்கு ஐசிசி 2 போட்டிகளில் தடை விதித்தமையால், இத் தொடரின் முதல் இரு போட்டிகளுக்கும் சரித் அசலங்க இலங்கை அணியை வழிநடாத்துகின்றார். அதேபோல் பங்களாதேஷ் அணியின் தலைவராக இருந்த சகீப் அல் ஹசன் இத் தொடரில் பங்கேற்காமையால், அவருக்கு பதிலாக புதிய தலைவராக நஜ்முல் ஹுசைன் சாண்டோ நியமிக்கப்பட்டிருந்தார்.
அந்தவகையில், பங்களாதேஷ் மைதானம் முழுமையாக சுழல்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் என்பதால் இரு அணியிலும் சுழல்பந்து வீச்சாளர்கள் இடம்பெற வாய்ப்பு அதிகம். இலங்கை அணியைப் பொறுத்த வரையில் வனிந்து ஹசரங்க இன்மையால், மகேஷ் தீக்சனவின் மீது பொறுப்பு அதிகரித்துள்ளது. அவரோடு ஜெப்ரி வெண்டர்சே மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் இன்றைய அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
அத்துடன் நிரோஷன் திக்வெல்ல இன்றைய தினம் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரராக களம் காணுவார் என நம்பலாம். நடந்த முடிந்த பங்களாதேஷ் ப்ரீமியன் லீக் தொடரின் சில போட்டிகளில் பங்கேற்ற தசுன் சானக சிறப்பான சகலதுறை ஆட்டத்தை பங்களாதேஷ் மைதானத்தில் வெளிப்படுத்தியமையால் இன்றைய தினம் ரசிகர்களுக்கு தசுன் விருந்து படைப்பார் என்று எதிர்பார்க்கலாம். மேலும் மெத்யூஸ் மற்றும் சதீரவின் துடுப்பாட்டம் அணிக்கு நம்பிக்கை கொடுக்கும்.
வேகப் பந்துவீச்சில் மதீஷ பத்திரன மற்றும் டில்ஷான் மதுசங்க ஆகியோர் விளையாடும் பதினொருவரில் பங்கேற்க வாய்ப்பு அதிகம். அதேபோல் பங்களாதேஷ் அணியைப் பொறுத்த வரையில் அவ் அணி வீரர்கள் சொந்த மைதானங்களில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள். குறிப்பாக மெஹ்தி ஹசன் மிராஸ் இலங்கை அணிக்கு நிச்சயம் இடையூராக இருப்பார். துடுப்பாட்டத்தில் முஹம்மதுல்லாஹ், லிட்டன் தாஸ், அனாமுல் ஹக் மற்றும் சவுமியா சர்கார் ஆகியோரின் பங்களிப்பு அவ் அணிக்கு அவசியம். மேலும் அனுபவமிக்க முஸ்தபிசுர் ரஹ்மான்இ டஸ்கின் அஹமட் ஆகியோர் அவ் அணியின் நம்பிக்கை.
இருப்பினும் , பங்களாதேஷ் அணியைப் பொறுத்த வரையில் அவ் அணியின் அனுபவமிக்க வீரர்களான சகீப் அல் ஹசன் மற்றும் முஸ்பிகுர் ரஹீம் இத் தொடரில் இடம்பெறாமை அவ் அணிக்கு மிகப் பெரிய இழப்பாகும். அத்துடன் இவ் இரு அணிகளும் இதுவரையில் 13 இருபதுக்கு இருபது போட்டிகளில் பங்கேற்றிருக்க அதில் இலங்கை அணி 9 போட்டிகளிலும் இ பங்களாதேஷ் அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இத் தொடருக்கான கிண்ண அறிமுகம் பங்களாதேஷில் உள்ள வனப் பகுதி ஒன்றில் இடம் பெற்றிருந்தமை விஷேட அம்சமாகும்.
(அரபாத் பஹர்தீன்)