உள்நாடு

கஹட்டோவிட்ட அஷ்ரஃப் ஹாஜியார் மாவத்தை கொங்கிறீட் இடப்பட்டு திருத்தியமைப்பு -சமூக சேவையாளர் பிர்தௌஸ் அயராத முயற்சி

கஹட்டோவிட்ட – அல் பத்ரிய்யா மகா வித்தியாலயத்தின் அருகாமையினால் செல்லும் அஷ்ரஃப் ஹாஜியார் மாவத்தை, மாணவர்களினதும் பொதுமக்களினதும் நன்மை கருதி, அண்மையில் திருத்தியமைக்கப்பட்டு சம்பிரதாயப் பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் கஹட்டோவிட்ட கிளைத் தலைவரும், ஊர் காப்பகத் தலைவருமான சமூக சேவையாளர் அல் ஹாஜ் கௌசுல் பிர்தௌஸின் அயராத முயற்சியின் பயனாக கொங்கிறீட் இடப்பட்டு செப்பனிடப்பட்ட இப்பாதையே, திறந்து வைக்கப்பட்டது.
கஹட்டோவிட்ட பிரதேச மக்கள் மற்றும் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும், கிராம சேவகர், பிரதேச செயலக அதிகாரிகள் ஆகியோரின் அனுமதியுடனும் இப்பாதையின் மீள் திருத்தப் பணிகள் சிறப்பாக நிறைவுபெற்று, மாணவர்களினதும் பொது மக்களினதும் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டதாக, சமூக சேவையாளர் பிர்தௌஸ் தெரிவித்தார்.
உள்ளூர் அரசியல் பிரமுகர்களால் இதுவரை சாதிக்க முடியாமல் இருந்த மேற்படி பாதையின் பணிகள், பல சவால்களுக்கும் இடையூறுகளுக்கும் மத்தியில் மிகவும் வெற்றிகரமாக முடிவுற்றதாகவும், தற்போது இப்பாதையால் பயணிப்போர், எவ்வித சிரமங்களுமின்றி மிக்க மகிழ்ச்சியுடன் செல்வதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இப்பணிக்காக நிதியாலும், பொருளாலும், உழைப்பாலும், சிரமங்களாலும் உதவி ஒத்தாசைகளைப் புரிந்தவர்களையும் மற்றும் பல வழிகளில் ஆலோசனைகளை வழங்கியவர்களையும், தான் நன்றியுணர்வோடு நினைவு கூருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், இது போன்ற மேலும் சிறந்த நன்மையான கைங்கரியங்களை மேற்கொள்ள, அரச ஒதுக்கீடுகள் மூலமாகமோ அல்லது அது முடியாத போது பிரதேச வாழ் மக்களின் ஓத்துழைப்பு மூலமாகமோ, தனக்கு பூரண ஆதரவைத் தருமாறும், இது போன்ற நற்சேவைகளை பிரதேசத்திற்கும் மக்களுக்கும் தொடர்ந்தும் செய்ய, தான் எப்பொழுதும் பெரு விருப்பத்துடன் எதிர்பார்ப்பதாகவும் சமூக சேவையாளர் பிர்தௌஸ் மேலும் சுட்டிக்காட்டினார்.
* அஷ்ரஃப் ஹாஜியார் மாவத்தை, மிக நீண்ட காலமாக குன்றும் குழியுமாகவும், மழை காலங்களில் சேறும் சகதியுமாகவும் காட்சியளித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
* இப்பாதையின் அப்போதைய நிலைமையையும், தற்போதைய நிலைமையையும் சித்தரித்துக் காட்டும் படங்கள் இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளதையும் காணலாம்.

( அஷ்ரஃப் ஹாஜியார் மாவத்தையின் அவலங்கள் தொடர்பிலான செய்தியும், படங்களும், அண்மைய “உதயம்” இணைய பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.)

 

(ஐ. ஏ. காதிர் கான்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *